பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ். கிருஷ்ணனின் அடியாத்தே என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி. ல்சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார்.
கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல துள்ளலான பாடல்களைப் பாடி ரசிகர்களை வென்ற இளம் பாடகி சுவாகதா, முதன்முறையாக ஒரு ஒற்றை வீடியோ பாடலை இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு இசை வீடியோ தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்.
தனது முதல் குரு திருமதி விஜயலக்ஷ்மி ராமசேஷன் எனக் கூறும் சுவாகதா, தனது சிறு வயது முதலே அவரிடம் கர்நாடக இசையைப் பயின்றிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான சுவாகதா இசையின் மீது கொண்ட ஆர்வத்தால், திரு. அகஸ்டின் பால் அவர்களிடம் மேற்கத்திய பாரம்பரிய இசையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
இந்தப் பாடலில் சுவாகதாவுடன் இணைந்து சித்தார்த் பல்லியத் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். முகிலன் முருகேசன் இயக்கத்தில், கலைச்செல்வன் ஒளிப்பதிவு செய்ய, இந்தப் பாடலுக்கான படத்தொகுப்புப் பொறுப்புகளை ஷிபு நீல் கவனித்திருக்கிறார். கலை இயக்கம் ‘பரியேறும் பெருமாள்’ புகழ் ராமு தங்கராஜ் செய்ய, ஆடை அலங்காரம் ‘ஐரா’ புகழ் பிரீத்தி நெடுமாறன் செய்ய, கீர்த்தி பாண்டியன் நடன அசைவுகளுக்கு அழகு சேர்த்திருக்கிறார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட இந்தப் பாடல், இசை ரசிகர்களின் வரவேற்பையும், வெகுவான பாராட்டுகளையும் வென்றிருக்கிறது. மேலும் இந்த ஒற்றை வீடியோ பாடல் சாவன், விங்க், ஜியோ, ஐடியூன்ஸ், அமேசிங் மியூசிக் ஆகிய தளங்களிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.