
வஞ்சகர் உலகம் எனும் படத்தை இயக்கிய மனோஜ் பீதா, ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ எனும் தெலுங்குப் படத்தை மறு உருவாக்கம் செய்துள்ளார். இரயில்வே பாதையின் ஓரமாகக் கிடைக்கும் அநாமதேய பிணங்களின் பின்னணியில் நிகழும் பகீர் குற்றங்களை டிடெக்டிவான ஏஜென்ட் கண்ணாயிரம் அவிழ்ப்பதுதான் படத்தின் கதை.
சந்தானத்தை டிடெக்டிவாக அறிமுகப்படுத்தும் காட்சியே படுபயங்கர சொதப்பல். அங்கு தொடங்கும் சொதப்பலைப் படமெங்கும் பல காட்சிகளில் தொடர்கின்றன. தந்தையின் முதல் மனைவி வாரிசுகளுடன் சொத்துப் பிரச்சனை என ஊரில் தங்குபவர், ஒரு காரைப் பார்த்து அதை எந்தக் கேள்வியுமின்றி ஓட்டிக் கொண்டு வருகிறார். அது அவர் உபயோகித்த காரா அல்லது பாகப்பிரிவனையில் அவருக்காக ஒதுக்கப்பட்ட காரா என்பதிலெல்லாம் தெளிவில்லை. காட்சிகளின் நகர்விலுள்ள இத்தகைய தெளிவின்மைதான் படத்தின் மிகப் பெரும் மைனஸ்.
டைட்டில் கார்ட் போடும் பொழுது வரும் அனிமேஷன் ரசிக்க வைக்கிறது. குரு சோமசுந்தரம், இந்துமதி, முனீஷ்காந்த், விஜய் டிவி புகழ் என எந்தக் கதாபாத்திரமும் மனதில் ஒட்டவில்லை. நாயகி ரியா சுமன் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதே போன்றே கடந்து விடுகின்றன. சந்தானம் அடக்கி வாசித்திருந்தாலும், அவரது கவுன்ட்டர்கள் டிடெக்டிவ் படத்திற்கான மூடைக் கெடுக்கிறது. சந்தானம் படமாகவும் இல்லாமல், துப்பறியும் படமாகவும் இல்லாமல், இருட்டில் தொலைந்த படமாக இருக்கிறது. கொஞ்சம் ஏமாந்தாலும் கண்ணசர வைத்துவிடும் சவசவத்தன்மையுடன் உள்ளது படத்தின் முதற்பாதி. இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியஸாகத் துப்பறியத் தொடங்குகிறார் கண்ணாயிரம். ஆனால் ஒரு பெரிய குற்றத்தின் மர்மத்தை அவிழ்க்கும் பொழுது ஏற்பட வேண்டிய அதிர்ச்சி ஏற்படவில்லை.
இறந்தவர்களின் உடலைக் காசியில் எரித்தால் புண்ணியம் வந்து சேரும் என்ற இந்து மத நம்பிக்கையை எப்படி ஒரு குழு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சம்பாதிக்கிறது என்பதைக் கொண்டு விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்திருந்தனர் ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ படத்தின் இயக்குநர் ஸ்வரூப்பும், நாயகன் நவீன் பொலிஷெட்டியும். ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா வென்ற புள்ளியை, ‘ஏஜென்ட் கண்ணாயிரம் ஃபீஸ் ரெண்டாயிரம்’ என எதுகை மோனைகளில் தொலைந்துவிடுகிறார் ஏஜென்ட் கண்ணாயிரம்.