Shadow

ஏலியன்: ராம்யுலஸ் விமர்சனம்

பூமியிலிருந்து 1600 ஒளியாண்டுகள் தள்ளியுள்ள, பகலே இல்லாத ஒரு கிரகத்தில் சிக்கியுள்ளார் ரெயின். அவ்விடத்தை விட்டுத் தப்பிக்க, ரெயினின் முன்னாள் காதலன் டைலர் ஒரு யோசனையை முன்மொழிகிறான். அரைமனதுடன் சம்மதிக்கும் ரெயினும், அவனது இயந்திரத் தம்பி ஆன்டியும், டைலர் குழுவும், ஈவாகா எனுமிடத்திற்குச் செல்லத் தேவைப்படும் குளிர்சீர்நிலைக்கருவிகளைச் (Cryostatic Chamber) சேகரிக்க, ஒரு சிதிலமடைந்த விண்கப்பலுக்குள் செல்கின்றனர்.

விண்கப்பல் இரண்டு பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிற்கு ரோமுலஸ் என்றும்; மற்றதிற்கு ரெமுஸ் என்றும் பெயர். ரோம் என்ற நகரம் உருவாவதற்குக் காரணமானவர் ரோமுலஸ் என்பதால்தான், அவரது பெயரையே அந்நகரத்துக்குச் சூட்டியுள்ளனர். Romulus-இன் ஹாலிவுட் உச்சரிப்பு, ராம்யுலஸாக உள்ளதால், ராம்யுலஸ் என்றே தமிழ்த்தலைப்பு வருகிறது.

கருவிகளைச் சேகரிக்கும் முயற்சியில், முகமணைப்பான்கள் (Facehuggers) எனும் ஜந்துக்களை உசுப்பிவிட்டுவிடுகின்றனர். அதிலொன்று நவோராவின் முகத்தைத் தழுவியதோடு மட்டுமில்லாமல், நவோராவின் வாயிற்குள் தனது கொடுக்கு ஒன்றினைச் செலுத்தி, அவளது DNA-வை மாற்றியமைத்துவிடுகிறது. நவோராவின் மார்பைப் பிளந்து கொண்டு வரும் ஏலியன், தன்னைத் தானே அதிவேகமாகப் பிரதியெடுத்துக் கொண்டு பல்கிப் பெருகித் தழைக்கின்றன.

மனித குலத்தைப் பலவீனமற்ற உயிரினமாக மாற்றும் ஊனீர் (Serum) மாதிரியை எடுத்துக் கொண்டு ரெயினும், ஆன்டியும், டைலரும், அவனது கர்ப்பினி தங்கை கே-யும் தப்பிக்க முனைகின்றனர். மிகச் சாதுரியமாக ஏலியனை விண்கப்பலோடு அழித்துவிட்டுத் தப்பிக்கிறார் ரெயின். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் கே, தன்னை பலப்படுத்திக் கொள்ள சீரத்தைக் குடிக்கிறாள். ஏலியனும் மனிதனும் கலந்து, மானுட முகத்துடன் ஒரு ஹைப்ரிட் ஜந்து கே-விற்குப் பிறக்கிறது. ரெயினால் அந்த ஜந்துவிடமிருந்து தப்பிக்க முடிகிறதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.

ஏலியன் தொடரில் வந்துள்ள ஏழாவது படமிது. இத்தொடரின் முதல் படமான ‘ஏலியன் (1979)’, ரிட்லி ஸ்காட்டால் இயக்கப்பட்டது. இரண்டாம் படமான ‘ஏலியன்ஸ் (1986)’, ஜேம்ஸ் கேமரூனால் இயக்கப்பட்டது. இந்தப் படத்தின் கதை, முதலிரண்டு படங்களுக்கு இடையே நிகழ்வது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அப்படங்களைப் பார்த்திராவிட்டாலும், இப்படத்தை எத்தகைய குழப்பமும் இல்லாமல் ரசிக்கமுடியும்.

சர்வ சக்தி படைத்த ஏலியனை, தனது சாதுரியத்தால் ரெயின் எப்படி வீழ்த்துகிறார் என்பது சுவாரசியமளிக்கிறது. ஏலியனைச் சுட்டால், அதன் உடம்பில் இருந்து வரும் இரத்தம், அமிலமாக மாறி விண்கப்பலை ஓட்டையிட்டு, அதனால் அழுத்தம் ஏற்பட்டு விண்கலமே சுக்குநூறாக உடைந்துவிடும். ஏலியனைச் சுட்டாலும், அதன் இரத்தம் கீழே விழாமல் இருக்க தந்திரோபாயமாகச் செயற்படுவார் ரெயின். ரெயினாக நடித்துள்ள கெய்லீ ஸ்பேய்னி சிறப்பாக நடித்துள்ளார். கண்றாவியான அருவருப்பான ஜந்துக்களை எதிர்கொள்ள திறமையையும் வீரத்தையும் விட அதிக மனோதிடம் தேவைப்படுகிறது. ரெயினின் மனோதிடம் தனக்கு வேண்டியவர்களைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற மனிதாபிமானத்தில் இருந்து பிறக்கிறது. ‘டோன்ட் ப்ரீத் (2016)’ எனும் படத்தை இயக்கிய ஆல்வரெஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரர் படப் பிரியர்களுக்கான பிரத்தியேகமான படமாக உருவாக்கியுள்ளார். ரிட்லி ஸ்காட்டால இயக்கப்பட்ட, ஏலியன் தொடரின் ஒரு படமான ‘ப்ரோமோதியஸ் (2012)’-ஐத் தொடர்ந்து, அதிக வசூலை வாரிக் குவித்த ஹாரர் படமாக ‘ஏலியன்: ரோமுலஸ்’ சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.