Search

அம்மாவின் மரணம் | நூல் விமர்சனம்

அண்ணாதுரை படத்தில் கோதண்டம் பாத்திரத்திற்கு அற்புதமான ஜீவனை அளித்திருப்பார் பத்திரிகையாளரும் நடிகருமான சு. செந்தில் குமரன். அவர், தனது அம்மாவின் மரணத்தைத் தாங்க முடியாதவராகத் தன்னை ஆற்றுப்படுத்திக் கொள்ள, அம்மாவின் நினைவாக 67 கவிதைகளை இயற்றியுள்ளார். மரணித்த பொழுது அவரது அம்மாவின் வயது 67.

பெண்ணென்றால் பேயென்றே
விண்ணதிரச் சொன்ன பட்டினத்தான்
அன்னையென்ற உறவை மட்டும்
அள்ளிக்கொண்டான் – ஆங்கே
அழுதழுது புரண்டபடி
கொள்ளி வைத்தான்.

அப்படிப் பட்டினாத்தானே மூழ்கிய பாசத்தாய்ப் பெருங்கடலைத் தன்னால் எப்படி நீந்திக் கடக்க முடியும் எனக் கேள்வியெழுப்புகிறார். மரணச் செய்தி கேட்ட நொடி ஏற்பட்ட அதிர்வு முதல் அம்மாவின் நினைவு எழுந்து வாட்டும் ஒவ்வொரு தருணத்திலும், அம்மா இருந்தால் என்ன செய்திருப்பார் என, அம்மாவின் நினைவுகளில் புதைந்து ஆறுதல் காண முற்படுகின்றன அவரது கவிதைகள்.

செந்தில் குமரனின் அம்மாவிற்குக் காரியம் முடிந்த மாலை வேளையில், காக்கைக்குச் சோறு வைக்கப்படுகிறது. அவரது அம்மா காக்கையாக வந்து உண்ணுவார் என்பது ஐதீகம். பக்கத்து மரம் முழுவதும் காக்கைகள் இருந்தும், சோறெடுக்க ஒன்று கூட வரவில்லை. செந்தில் குமரன் அந்தக் கவிதையை இப்படி முடிக்கிறார்.

ammavin-maranamபின்னே?
என்னைச் சாப்பிட வைக்காமல்
உன்னைச் சாப்பிடச் சொன்னால்

எப்படிச் சாப்பிடுவாய்? – அப்படி
எப்போது சாப்பிட்டாய்?

இப்படி, உள்ளத்தினின்று எழும் அசலான உணர்ச்சியை, எளிய வார்த்தைகளால் தீர்க்கமாக வெளிப்படுத்தியுள்ளார் செந்தில் குமரன். கவிதைக்கான பொய்யழகோ, உவமை நயமோ, ரசம் தடவிய சொற்களோ இன்றி, தனது அம்மாவின் வாழ்க்கையை கவிதைகளுக்குள் ஆவணப்படுத்தியுள்ளார்.

அவரது அம்மாவிற்கு இழைக்கப்பட்ட துரோகம், பிள்ளைகளின் மகிழ்ச்சியைத் தனது மகிழ்ச்சியாகக் கொண்டாடிய அவரது தாய்மை, கிராமத்தின் சுகங்களை நோக்கித் தள்ளும் பட்டணத்தின் மூடிய வெளி கொடுக்கும் அழுத்தம், பிள்ளைகள் மீதான அக்கறையில் சொல்லப்பட்ட அறிவுரைகள், அதே பிள்ளைகளால் அலட்சியப்படுத்தப்படுவது, கணவனால் இழைக்கப்பட்ட அநீதி ஆகியவை இந்நிலத்தில் வாழும் போன தலைமுறை தமிழ் அம்மாக்களின் ஆவணமன்றி வேறென்ன?

தலைமுறைகள் மாறலாம், வாழ்வியலும் வாழ்விடமும் மாறலாம். ஆனால், இந்நூல் எந்த நிலத்தில் வாழும் எந்த தலைமுறை அம்மாக்களுக்கும் உள்ள பொதுவான ‘அம்மா’த்துவத்தைத் தொட்டுச் செல்கிறது. சு.செந்தில் குமரன் ஒரு படி மேலே போய், ‘இந்த நூல் உலகெங்கும் உள்ள எல்லா உயிரினிங்களிலும் உள்ள அம்மாக்களுக்காக’ என நூலைச் சமர்ப்பித்துள்ளார். படைப்பின் ஏதோ ஒரு சிறு இடுக்கில், பேரன்பை உணர முடிந்தாலோ அது கலை அந்தஸ்த்தைப் பெற்றுவிடும். இந்நூல், ஆசிரியரின் முன்னுரையிலேயே அந்தக் கலைத்தன்மையைப் பெற்றுவிடுகிறது.

தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொள்ள கவிதை எனும் வடிவை ஆசிரியர் தேர்ந்தெடுத்திருந்தாலும், தலைப்பை மட்டும் முகத்தில் அறைவது போல் நேரடியாக வைத்துள்ளார். கவிதை என்றாலே நிலா, பூ, தென்றல், மழை என நான்கு வார்த்தைகளுக்குள் அடங்கிவிடும் என்று நினைக்கும் தலைமுறையினர்க்கு, இந்தத் தலைப்பே அவர்களை இந்நூலில் இருந்து அந்நியப்படுத்திவிடும். ஆனால், உறவுகளை taken for granted ஆக எடுத்துக் கொள்ளும் அவசர யுகத்து இளைஞர்களுக்கு அவசியம் போய்ச் சேரவேண்டிய புத்தகமிது.

தாயின் மரணம் ஏற்படுத்தும் அதிர்ச்சியில் இருந்து விலக, தன்னைத் தானே ஆற்றுப்படுத்திக் கொள்ள எழுதப்பட்ட இந்நூலை ‘ஆற்றுப்படை’ எனும் இலக்கிய வகைமைக்குள் வைத்துப் பார்க்கலாம். குறிப்பாக, தாயை இழந்த பிள்ளைகளை நோக்கி, தாயின் மேன்மையை எடுத்தியம்புவது போலுள்ளதால் ‘பிள்ளையாற்றுப்படை’ என்ற காரணப் பெயர் இந்நூலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

அம்மாவின் மரணம் – Kindle Link