Shadow

ஆன்யா’ஸ் டுடோரியல் விமர்சனம்

ஆஹா தமிழில், ஜூலை 1 அன்று வெளியாகியிருக்கும் அமானுஷ்ய இணையத்தொடர். மிகுந்த கொடுமையான பால்யத்தைக் கொண்ட லாவண்யா எனும் இளம்பெண், தன் பால்யம் ஏற்படுத்திய வடுவிலிருந்து மீள வீட்டை விட்டு வெளியேறுகிறாள். சிறுவயதில், தன் சகோதரியால் லாவணி என அழைக்கப்படுவதால், சகோதரியின் மீதுள்ள கோபத்தால் அப்பெயரை ஆன்யா என மாற்றிக் கொள்கிறார்.

பேயும் இல்ல பிசாசும் இல்ல என நம்ப விரும்பும் ஆன்யா, தனது இன்ஸ்டாகிராம சேனலான ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’-இல் ஒப்பனை பற்றிய காணொளி போடும் பொழுது, அவளது பின்னால் ஓர் உருவம் பதிவாகிறது. அந்த வீடியோ மிகவும் வைரலாக, ஆன்யா அதன் மூலமாகக் கிடைக்கும் பிரபல்யத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறாள்.

லாவணி எனும் ஆன்யாவாக நிவேதிதா சதீஷ் நடித்துள்ளார். ஆன்யாவின் மூத்த சகோதரி மதுவாக ரெஜினா கசாண்ட்ரா நடித்திருந்தாலும், நிவேதிதா தான் தொடரின் நாயகி. இருவருமே மிகச் சிறப்பாக நடித்துள்ளனர். மகளிர் அணியின் படைப்ஓன்றே இந்தத் தொடரைச் சொல்லவேண்டும். செளமியா கதையை எழுத, முருகதாஸின் உதவியாளரான பல்லவி கங்கிரெட்டி இயக்கியுள்ளார். கதையும், சகோதரிகளுக்கிடையேயான உறவுச் சிக்கல், ஆன்யாவை ஆக்கிரமிக்கும் பெண் பேய்க்குமிடையேயான நட்பு என பெண்கள் சார்ந்தே பயணிக்கிறது. அடுத்து அடுத்து என்ன என்ற சுவாரசியம் குறைவாக இருந்தாலும், ஒரு இன்டென்ஸான அகச்சிக்கலையும், உறவுச்சிக்கலையும் பேச முனைந்துள்ளது இத்தொடர். கொரோனா லாக்-டவுனில் நிகழ்வதாகக் கதையை அமைத்துள்ளது, தயாரிப்புச் செல்வைக் குறைக்க உதவியுள்ளதோடு, ஓர் அமானுஷ்யத்தன்மையையும் தொடருக்கு அளிக்க உதவியுள்ளது.

பேயால் பீடிக்கப்பட்டு ஆன்யா மிதந்து கோண்டே, விருப்பட்ட இடத்தில் விருப்பப்பட்ட நபரைத் தன் வழிக்கு வர வைக்கிறாள். ஆனால் பேயோ, ஆன்யாவோ எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் என்ற தெளிவின்மை, தொடருக்கோர் பலவீனம். அதனாலேயே தொடரின் முடிவும் ஒரு நிறைவின்மையை அளிக்கிறது.