தமிழ் மொழிக்கென்றே பிரத்தியேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, அசத்துகீரது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது “ஆன்யா’ஸ் டுடோரியல்” எனும் இணையத் தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. பாகுபலியை உருவாக்கிய ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரைத் தயாரித்துள்ளது.
ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிவேதிதா சதீஷ், “இந்தத் தொடர் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர். இது போன்ற பெரிய படைப்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தத் தொடரில் எனது திறமையைக் காட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு பெண்கள் குழுவில் பயணித்தது மகிழ்ச்சி. திரைத்துறையில் அறிமுகமான போது பல இடங்களில் நான் நிராகரிக்கபட்டுள்ளேன், இப்போது அதையெல்லாம் கடந்து இப்படி ஒரு முக்கியமான தொடரில் நடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.
எழுத்தாளர் சௌமியா, “கொரோனா காலத்தில், நானும் பல்லவியும் பொழுதைப் போக்குவதற்காக எந்த நோக்கமும் இல்லாமல் தான் கதையை உருவாக்க ஆரம்பித்தோம், பின்னர் தீவிரமான கதையாக இது மாற ஆரம்பித்தது. பின்னர் சோபு சாரிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். இரண்டு நாளில் படித்து, ‘இதைப் பண்ணலாம்’ என்றார். பின்னர் நடிகர்கள் உள்ளே வந்தார்கள். எல்லாம் வேகவேகமாக நடந்து, ஒரு நல்ல படைப்பாக தொடர் உருவாகியுள்ளது” என்றார். இது செளமியாவின் எழுத்தில் உருவாகியுள்ல முதல் படைப்பாகும். இதற்கு முன் அனிமேஷனுக்காக எழுதிக் கொண்டிருந்தவரின் முதல் லைவ் ஆக்ஷன் தொடரிது.
ஸ்பைடர் படத்தில் முருகதாஸிடம் தூணை இயக்குநயாகப் பணியாற்றிய பல்லவி கங்கி ரெட்டியின் இயக்கத்தில் வெளிவரும் படைப்பிது. “இந்தத் தொடரை இரு மொழிகளில் உருவாக்கினோம். அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.
நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “ஆர்கா மீடியா ஒர்க்ஸ் ஓடிடிக்கு வந்தது பெரிய விஷயம். ஆன்யா’ஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகல் த்ரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி. நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பல்லவி போன்ற திறமையான பெண் படைப்பாளர்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி. பத்து வருடங்களுக்கு முன், நான் அறிமுகமான போது திரைத்துறையில் பெண்கள் மிகக் குறைவாக இருந்தார்கள். இன்று இந்த மேடையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி தான் இந்தத் தொடரின் முக்கியமான தூண். அவரது பணிகள் கதாபாத்திரத்தின் குணங்களைப் பிரதிபலிக்கும் படி இருக்கும்” என்றார்.