Shadow

“என் குருவின் சீடனாக..” – எம்.எஸ்.பாஸ்கர் | BOAT

சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.

நடிகர் எம். எஸ். பாஸ்கர் பேசுகையில், ”சிம்பு தேவனின் இயக்கத்தில் பல படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்திலும், ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்திலும் நடிக்கும் போதுதான் கஷ்டப்பட்டேன். அந்தப் படத்தில் குதிரை என்றால் இந்தப் படத்தில் போட்.

தம்பி சிம்பு தேவன் சொன்னது போல் கடலைக் கணிக்க முடியவில்லை. திடீரென்று தண்ணீர் உள்வாங்குகிறது. திடீரென்று தண்ணீர் அதிகரிக்கிறது. திடீரென்று அலை அடிக்கிறது. போட்டில் அமர்ந்து நடிக்கும் போது முதுகு வலியும் ஏற்பட்டது.

சிம்பு தேவன் பேசும் போது, ‘எழுதுவது எளிதாக இருந்தது’ எனக் குறிப்பிட்டார். ஆனால் இப்படி எழுத வேண்டும் என்று மனதிற்குள் தோன்ற வேண்டும் அல்லவா, அது கடினம் தானே. கற்பனையில் உதித்ததை எழுதி, அதற்காகப் படப்பிடிப்புத் தளத்தைத் தேடிப் பயணித்துத் தேர்வு செய்து அதில் படப்பிடிப்பு நடத்தி, நாங்கள் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு படமாக்கினார். படப்பிடிப்புத் தளத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு குடும்ப உறுப்பினர்களுடன் இன்பச் சுற்றுலா சென்றது போல் தான் இருந்தது. என்னுடன் நடித்த சக நடிகர்கள் அனைவரும் அதே போட்டில் தான் இருக்க வேண்டும். யாரும் எங்கும் செல்ல முடியாது.

இந்தப் படத்தில் அவர் எனக்குக் கொடுத்த வேடத்தில் நடிக்கும் போது, நான் யாரை குருவாக மனதிற்குள் நினைத்திருக்கிறேனோ, அவருடைய சீடனாகவே நடிக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அது என்ன கதாபாத்திரம் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். நான் ரசித்து ரசித்து செய்து கதாபாத்திரங்களில் இதுவும் ஒன்று” என்றார்.