Shadow

“மேக்கப்பை சீராக்கிக் கொள்ள முடியாது” – கெளரி கிஷன் | BOAT

சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.

நாயகி கௌரி கிஷன், ”நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வளரும் கலைஞர்களின் கனவாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்ததைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.

இந்தப் படத்தில் லட்சுமி என்ற இளம் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வேடத்தை ஏற்று நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைத்தது பெரிய விஷயம். நான் தமிழ் பெண் அல்ல. கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் வளர்ந்த பெண். அதனால் ஓரளவிற்கு தான் தமிழ் பேசுவேன். இந்தப் படத்தில் செந்தமிழைப் பார்ப்பனர்களின் பேச்சு மொழியுடன் பேசி இருக்கிறேன். இதனைப் பேசும் போது எனக்குள் தயக்கம் இருந்தது. இருந்தாலும் இயக்குநர் அதனை உடைத்து உன்னால் முடியும் என்று நம்பிக்கை அளித்தார்.

படப்பிடிப்பு நடைபெற்ற படகுக்குள் நான் பாதுகாப்பாக இருந்தேன். படத்தில் நடித்திருக்கும் சக கலைஞர்களுடன் இதற்கு முன் நான் பணியாற்றியதில்லை. இருந்தாலும் அவர்களுடைய எனர்ஜி, மேஜிக்கை நிகழ்த்தியது. இந்தப் படத்தின் மூலம் மதுமிதா எனக்கு சொந்த சகோதரி போல் ஆகிவிட்டார்.

படப்பிடிப்புக்காக படகிற்குள் அமர்ந்து விட்டால் அவ்வளவுதான். அதன் பிறகு படப்பிடிப்பு நிறைவு என்று சொன்ன பிறகுதான் படகிலிருந்து இறங்கி கரைக்கு வருவோம். அதுவரை எங்களுடைய மேக்கப்பை சீராக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்காது. என்னைப் பொருத்தவரை ஒரு நடிகைக்கு அழகான தோற்றத்திற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் தோற்றத்தை விட ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்துவது தான் சிறந்தது என்ற எண்ணம் உதித்தது. இந்த ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன்.

மாலி & மான்வி படத்தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம். அவர்கள் தயாரிப்பில் நான் நடித்த முதல் படமான ‘அடியே’ திரைப்படமும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தான் வெளியானது. அந்த வகையில் இந்தப் பட நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்தப் படத்திலும் பாடகியாக தான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஜிப்ரானின் இசை அற்புதமாக இருக்கிறது. நானும் அவரின் தீவிர ரசிகை. இந்தப் படத்தில் கானா பாடல் கலந்த ஒரு நாட்டுப்புறப் பாட்டு இருக்கிறது. அந்தப் பாடல் காட்சியை நான் நன்றாக ரசித்து அனுபவித்து நடித்தேன்.

இந்தப் படத்தில் நடித்த ஜெஸ்ஸி ஒரு ஆஸ்திரேலிய நடிகர். எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர். படப்பிடிப்புத்தளத்தில் அவருக்கு சில விஷயங்களை மொழிபெயர்ப்பதில் உதவியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னைத் தவிர்த்து என்னுடன் நடித்தவர்கள் அனைவரும் நகைச்சுவை கலைஞர்கள். அதனால் படப்பிடிப்புத் தருணத்தின் போது அனைவரும் பேசி காட்சிகளை மேம்படுத்துவார்கள். அதை நேரில் பார்த்து வியந்திருக்கிறேன். எனக்கு அவர்களைப் போல் உடனடியாகக் காமெடியாகப் பேச முடியாது, பேசவும் தெரியாது. இது தொடர்பாக இயக்குநரிடம் பேசும் போது, அவர் ‘லட்சுமி என்கிற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நிறைய பேசும்’ என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பைப் பொருத்தவரை எனக்கு ஒரு பயிற்சிப் பட்டறை போல் தான். தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டே இருந்தேன்.

இந்தத் திரைப்படத்தைத் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தும். அந்த அளவிற்கு விஷுவல் ட்ரீட் இருக்கிறது. கடல் பேரழகு. அதனைக் காண ஆகஸ்ட் இரண்டாம் தேதி திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்திற்கு ஆதரவு தாருங்கள்”‘ என்றார்.