Search

அஸ்வின்ஸ் விமர்சனம்

‘ஒரு உலகில் கண் மூடினால் மறு உலகில் கண் திறக்கலாம்’ என்று படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்திற்குப் பின்னால் ஒரு கதை இருக்கிறது. இந்த உலகில் வரக்கூடிய ஒரு பிரச்சனையை வேறு ஒரு உலகில் சென்று தீர்க்க வேண்டும். அதற்கு இந்த உலகில் உயிர்விடவேண்டும். அப்போது தான் அந்த உலகில் உயிர்பெற முடியும். இப்படியான ஒரு சூழல் நாயகன் வசந்த் ரவிக்கு வருகிறது. இது படத்தின் பின்பாதியில் வரக்கூடிய கதை.

அப்போ முன்பாதி கதை? லண்டனில் மக்கள் வாழும் பகுதிகளுக்கு அப்பால் ஒரு பாழடைந்த மேன்சன் இருக்கிறது. அந்த மேன்சனுக்குள் பல அமானுஷ்யங்களும் கண்டுபிடிக்கப் படாத பிரச்சனைகளும் இருக்கின்றன. அந்த மேன்சனுக்குள் செல்கிறார்கள் வசந்த் ரவி டீம். காரணம்? ஒரு பிரபலமான யூட்யூப் தளத்திற்காக. சென்றவர்களுக்கு என்னானது என்பதே முன்பாதி கதை. முதலில் சொன்ன அந்த மறு உலகக் கதையே இவர்களின் மேன்சன் பிரவேசத்தால் தான் நிகழ்கிறது. ஒரு ஸ்கிரீன் ரைட்டராக தருண்தேஜா சிறப்பாக முத்திரைப் பதித்த இடம் இதுவே!

வசந்த் ரவி அழுகையைக் கூட அளவாக வெளிப்படுத்துபவர். சட்டில் (Subtle) ஆன பெர்ஃபாமர் என்ற எல்லையைத் தாண்டி இந்தப் படத்தில் நன்றாகவே நடித்துள்ளார். மறு உலக போர்ஷனில் அவரது நடிப்பு நன்றாக எடுபட்டுள்ளது. நாயகி விமலா ராமன் உள்பட எல்லோருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்தப் படத்தின் பெருந்தூண்கள் தொழில்நுட்ப நபர்கள் தான். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். முதல் பத்து நிமிடங்களில் வெறும் ஒற்றை லைட்-ஐ வைத்தே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். லண்டன் கடல்வீதியை காட்டும் அவரது ஷாட் கம்போஸிங் மிகச் சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. ஒலிக்கலவை இப்படத்தின் ஆகப்பெரும் பலம். சவுண்ட் எபெக்டில் ஒரு ஃபூட்டேஜ் வந்திருக்கும், டப்பிங்கில் வேறு வேறு டோனில் ஃபூட்டேஜ் வந்திருக்கும், இசை அமைப்பாளரிடம் இருந்து வேறோர் அவுட்புட் வந்திருக்கும். ஒலி சார்ந்த இந்த மூன்று ஃபூட்டேஜையும் சரியாக மிக்ஸிங் செய்துள்ளதில் பெரிய மேஜிக் நடந்துள்ளது. அற்புதம்! இப்படியான ஒலியமைப்பை டிசைன் செய்த சச்சின் & ஹரி இருவருக்கும் தனித்த பூங்கொத்து கொடுக்கலாம்.

இத்தனை டெக்னிக்கல் அம்சங்களையும் ஒருங்கே இணைத்ததில் இயக்குநர் தருண் தேஜா ஒரு நம்பிக்கைக்குரிய ஃப்லிம் மேக்கராக உயர்ந்து நிற்கிறார். தொழில்நுட்பங்களால் நல்ல திரையனுபவத்தை தந்த இயக்குநரால் ஒரு திரைக்கதையாளராக முழு நிறைவை எட்டமுடியவில்லை என்றே தோன்றியது. கதையின் ஐடியாவும், திரைக்கதையும், காட்சி நகர்வும் சுவாரசியமாக இருந்தாலும் எந்தக் காட்சிகளுடனும் பார்வையாளர்களால் ஒன்ற முடியாமல் போகிறது. நாயகனிற்கு ஓர் இழப்பு வரும் போது, அந்த வலியும் வேதனையும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படவில்லை. படம் பார்ப்போரைக் கதை கட்டிப் போட்டிருந்தால், இந்த அஸ்வின்ஸ் இன்னும் அதிகமாக ஈர்த்திருக்கும். நல்ல நேர்த்தியான மேக்கிங்கில் காட்டிய கவனத்தை, எமோஷ்னல் கனெக்டிட்டிலும் காட்டியிருந்தால், அஸ்வின்ஸ் அதன் உச்சபட்ச இலக்கைச் சறுக்காமல் தொட்டிருக்கும்.

– ஜெகன் கவிராஜ்