தலைநகரம் சென்னையை மூன்று ரெளடிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். மூவருக்குமே தான் மட்டுமே ஒட்டுமொத்த சென்னையை ஆள வேண்டும் என்பது ஆசை. இதனால் ஒருவரையொருவர் போட்டுத் தள்ளத் துடிக்கின்றனர். அதே நேரம் பழைய ரெளடியான ‘ரைட்டு’, ‘இந்தக் கத்தி, இரத்தம் இதெல்லாம் வேண்டாம்’ என்று ஒதுங்கி, மாலிக் பாய் (தம்பி இராமையா) உடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார். ஆனால் காலமும் சூழலும் ரைட்டைத் தன் கையில் மீண்டும் கத்தி தூக்க வைக்க, ஒட்டு மொத்த சென்னையும் அவன் கட்டுப்பாட்டில் வருகிறது. அது எப்படி என்பதைச் சுவாரசியத்துடன் சொல்லி இருக்கிறது தலைநகரம் 2.
படத்தின் மிகப் பெரிய பலமே அந்த மூன்று ரெளடிகளும், அவர்களின் பின்கதையும் தான். நஞ்சப்பா, வம்சி, மாறன் என மூன்று ரெளடிகள். இந்த மூன்று ரெளடிகளுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர வடிவமைப்பு. நஞ்சப்பா 5 – 6 இளம் ரெளடிகளை வைத்துக் கொண்டு தொழில் செய்பவன், வம்சி அதிகாரத்தையும் போலீஸையும் தன் கைக்குள் வைத்திருப்பவன், மாறன் தன்னோடு துறைமுகத்தில் கூலி வேலை செய்த மூன்று பெண்களை வைத்துக் கொண்டு தொழில் செய்பவன். இப்படி கனகச்சிதமாக செதுக்கப்பட்ட கதாபாத்திரங்களும் அவர்களின் பின்கதைகளும் ஆரம்பத்திலேயே படம் பார்க்கும் நம்மைச் சுறுசுறுப்பாக்குகின்றன.
அது போல் இந்த மூன்று ரெளடிகளுக்கும், ரைட்டு என்னும் பழைய ரெளடியான சுந்தர்.சி-க்கும் இடையில் பகைமை துவங்கும் புள்ளிகளும் சுவாரசியமாக எடுக்கப்பட்டுள்ளன. நேர்த்தியான திரைக்கதைக்கு அவை நல்ல எடுத்துக்காட்டு. அது போல் மாறனின் வலது கையான மெய்யப்பன் ரைட்டைக் கொல்ல வரும் போது, அவர்களை எதிர்கொள்ள ரைட்டு தயாராகும் விதமே அந்தச் சண்டைக் காட்சியை மேலும் விறுவிறுப்பாக்குகின்றது.
சுந்தர்.சி-யின் ஆஜானுபாகுவான அந்தத் தோற்றமே சண்டைக் காட்சிகள் நம்பகத்தன்மையோடு அமைவதற்கு காரணமாக அமைகிறது. ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் சுந்தர்.சி எமோஷனல் காட்சிகளில் ஸ்கோர் செய்வதற்கு சற்றே சிரமப்படுகிறார். நாயகியாக வரும் பாலக் லால்வானிக்கு கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரம். நடிகையாகவே நடித்திருக்கிறார். அதுவும் தன் பாதுகாப்புக்காக ரெளடியாக இருக்கும் வம்சியுடன் லிவ்விங்-கில் இருக்கிறார். பின்பு ஒரு சூழலில் ரைட்டிடம் வந்து உதவி கேட்கிறார். இதுவே வம்சியின் ஈகோவைத் தூண்டிவிட, முழுவதுமாக வம்சியிடம் இருந்து விலகி ரைட்டுடன் சேர்ந்து செயல்படத் துவங்கும் கதாபாத்திரம். அவர் ரைட்டின் மீது காதல் கொள்ளும் தருணத்தை மட்டும் தவிர்த்துப் பார்த்தால் கண்டிப்பாக இந்தக் கதாபாத்திர வடிவமைப்பு சற்று வித்தியாசமானது தான்.
மாலிக் பாய்-ஆக வரும் தம்பி ராமையா எமோஷனல் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். அவரின் மகளாக நடித்திருக்கும் அயிராவும் தன் பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். மூன்று ரெளடிகளில் நஞ்சப்பாவாக நடித்திருக்கும் பிரபாகர் தனித்து முத்திரை பதிக்கிறார். அது போல் மாறனின் கையாளாக வரும் அந்த மூன்று பெண்மணிகளும் கவனம் ஈர்க்கிறார்கள். ஜிப்ரானின் இசை தேவைப்படும் இடங்களில் த்ரிலையும் எமோஷனையும் வெகு இயல்பாகக் கடத்தியிருக்கிறது. இ.கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு தரம்.
ரைட்டுக்கும் இவர்கள் மூவர்களுக்குமான சந்திப்பு முடிந்து போவதால், மி்ஞ்சியிருப்பது, அவர்களை கொல்லுவது மட்டும் தான். அதில் மாறனை ரைட்டு தான் கொல்லப் போகிறான் என்று காத்திருக்கும் போது அவனின் மரணம் வேறுவிதமாக அமைவதும், அது போல் நஞ்சப்பாவுடன் இருந்து குற்றம் இழைக்கும் அந்த 6 இளைஞர்களுக்கு ரைட்டு டீம் கொடுக்கும் தண்டனையும் எதிர்பாராதது விசித்திரமானது என்றாலும் கூட இரண்டாம் பாதியின் சுவாரசியம் முதல்பாதி அளவிற்கு இல்லை.
வடிவேலு இல்லாத குறையைத் தவிர்த்து, முதல் பாகத்திற்குப் பழுதில்லாத சீக்வெல்லாக வந்துள்ளது தலைநகரம் 2.
– இன்பராஜா ராஜலிங்கம்