Shadow

பாயும் ஒளி நீ எனக்கு விமர்சனம்

கண் பார்வைக் குறைபாடுள்ள நாயகனுக்கு, தன் குடும்ப உறவைக் கொன்றது யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கொலையாளி யார், கொலையாளியை எப்படிக் கண்டுபிடித்தார், குடும்ப உறவுக்கும் கொலையாளிக்கும் என்ன பகை போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பது தான் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சியில் ஆட்டோவில் பயணம் செய்யும் விக்ரம் பிரபு நடுரோட்டில் பைக் பஞ்சர் ஆனதால் தவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் கணவன் மனைவிக்கு லிஃப்ட் கொடுத்து உதவுகிறார். ஆட்டோவில் ஏறும் அந்த இளம்பெண்ணோ விக்ரம் பிரபுவை மயக்கமடையச் செய்ய முயற்சி செய்கிறார். ‘ஏன்?’ என்கின்ற விறுவிறுப்போடு படம் துவங்குகிறது.

அதைத் தொடர்ந்து நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் திரைக்கதையைச் சுவாரசியமாக்குகின்றன. ஒரு கட்டத்தில் அவர்கள் குறி வைப்பது விக்ரம் பிரபுவையா இல்லை அவரது வீட்டில் உள்ளவர்களையா என்கின்ற குழப்பம் வரும் போது அந்த மரணம் நிகழ்கிறது. இது முதல் பாதி. அந்த மரணத்திற்கு விடை தேடி பலி வாங்கும் படலம் இரண்டாம் பாதி.

நாயகன் விக்ரம் பிரபு ஒரு மென்பொருள் தயாரிப்பாளர். நாயகி வாணி போஜன் ஈவென்ட் மேனேஜ்மென்ட்டில் பணியாற்றுபவர். விக்ரம் பிரபு தன் தங்கை திருமணத்திற்காக வாணி போஜனைச் சந்திக்க, ஏன் மலர்ந்தது என்றே தெரியாமல் அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அதனால் டூயட்டும் பாடுகிறார்கள். காதல் அத்தியாயம் வரும் பெரும்பாலான இடங்கள் சலிப்பூட்டியது. விக்ரம் பிரபு ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். வாணி போஜனுக்கு நடிப்பதற்கு வாய்ப்பில்லாத கதாபாத்திரம். வழக்கமான தமிழ் சினிமா நாயகிகள் செய்வது போல் நாயகனைக் காதலிப்பதும், அவன் சோர்ந்து போகும் போது உற்சாகப்படுத்துவதோடும் ஒதுங்கிக் கொள்கிறார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஆணையாராக நடித்துள்ள வேல ராமமூர்த்தி ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் தன் வழக்கமான நடிப்பால் ஈர்க்கிறார். முதல்பாதி கதை சொல்லலில் இருந்த ஈர்ப்பு இரண்டாம் பாதியில் இல்லை. என்ன காரணத்தினால் கொலை விழுந்தது? ஏன் விக்ரம் பிரபுவைத் துரத்துகிறார்கள் என்ற ஆவலை ஏற்படுத்திவிட்டுப் பார்த்துப் பழகிப் போன காரணங்களே காட்சியாக விரிவதால் அயர்ச்சி தோன்றுகிறது.

சாகர் இசையமைத்திருக்கிறார். அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத் இயக்கி இருக்கிறார். SP சினிமாஸ் தயாரித்திருக்கிறது. சுவாரசியமான கதைக்களம் தான். அதில் பார்வைக் குறைபாடு என்னும் நோயைப் புகுத்தியதும் சிறப்பு. இருப்பினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் இந்த பாயும் ஒளி வெள்ளமாய்ப் பாய்ந்திருக்கும்.

– இன்பராஜா ராஜாலிங்கம்