Shadow

அய்யப்பனும் கோஷியும் விமர்சனம்

ayyapanum-koshiyum-review

‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என எழுத்தாளர் ஜி. நாகராஜன் ஒரு வரியில் சொன்னதை மூன்று மணி நேரத் திரைப்படமாகக் கண்முன்னால் விரிய வைத்திருக்கிறார் இயக்குநர் சச்சி. முன்னரே பிரித்வி, பிஜூ மேனன் கூட்டணியில் லட்சத்தீவின் பின்னணியில் அனார்க்கலி என்ற சுவாரஸ்யமான காதல் கதையைச் சொன்ன, ‘ட்ரைவிங் லைசென்ஸ்’ திரைப்படத்திற்குத் திரைக்கதை எழுதிய அதே சச்சிதான் இவர்.

உண்மையில் இது இரண்டு மனிதர்களுக்கு இடையிலான தனிப்பட்ட தன்முனைப்பு சார்ந்த போராட்டம் என்பதுபோல தோன்றினாலும் அதனூடே உண்மையில் அதிகாரம் என்பது எப்படி எந்தெந்த வகையில் யார் யாருக்காகவெல்லாம் வளைந்து கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் பூடகமாக உணர்த்திச் செல்கிறது என்பதனால்தான் இந்தத் திரைப்படம் முக்கியமானதாகிறது.

பொதுவாக இந்தத் திரைப்படத்தை கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் தன்முனைப்பு போராட்டமாக மட்டுமே பலரும் அடையாளப்படுத்துகிறார்கள். ஆனால் மூன்றுவிதமான போராட்டங்கள் இந்தப் படத்தின் மூலமாக வெளிப்படுகின்றன. கோஷிக்கும் ஐயப்பனுக்கும் இடையில் நடக்கும் சண்டைதான் பிரதானம் என்றாலும், கோஷிக்கும் கோஷியின் தகப்பனான குரியனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் மிக முக்கியமானது. இந்த இரண்டு போராட்டங்களுக்கும் நடுவில் அதிகார வர்க்கத்திற்கும் அதற்கு வளைந்து போகாத மனிதனுக்கும் இடையில் நடக்கும் போராட்டமும் சொல்லப்பட்டிருக்கிறது.

இராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஹவில்தார் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் கோஷியினுடைய கதாபாத்திரம் ஊசலாடும் தன்மையோடு படைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தனது தந்தை செய்யும் தவறுகளுக்கும் தான் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்போது கோஷியின் மனம் தடுமாறுகிறது. அதுவே ஐயப்பனுக்கு எதிரான போராட்டத்தில் ஆங்காங்கே அவனை நிலைகுலைய வைக்கிறது. இறங்கி வர நினைக்கலாமென எண்ணும்போதே சூழல்கள் மீண்டும் கோஷியை நியாயப்படுத்தத் தூண்டுகின்றன.

ஐயப்பனின் கதாபாத்திரம் கொஞ்சம் மங்கலாக இருக்கிறது. ஏனெனில் சில விஷயங்கள் பூடகமாகச் சொல்லப்பட்டு விடுகின்றன. உதாரணமாக ஐயப்பனுக்கு நடந்த திருமணம் குறித்த பின்னணி ஓர் அவசரகதியில் அளிக்கப்பட்டு அள்ளித் தெளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஐயப்பன் தான் எடுக்கும் முடிவுகளில் மிகத் தெளிவானவனாகவே இருக்கிறான். தன் பழைய சுபாவங்களிலிருந்து மீண்டு நேர்மையான காவல் அதிகாரியாக வாழ்பவனாக இருக்கிறான் ஐயப்பன்.

இப்படி, கதாபாத்திரங்களின் குணாதிசயங்களின் வரையறைகள் மிகச் சிறப்பாக செய்து இருப்பதாலேயே ஊசலாடும் ஒரு மனநிலை உள்ளவனுக்கும், தெளிவான சிந்தனை கொண்ட ஒரு காவல்துறை அதிகாரிக்குமான மோதல் என்பது இருக்கை நுனிவரை நம்மைக் கட்டிப் போட போதுமானதாக இருக்கிறது.

காவல்துறை உதவி ஆய்வாளராக இருக்கும் ஐயப்பனுக்கும் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் இருக்கும் ஐயப்பனுக்கும் இடையிலான வேறுபாடுதான் திரைக்கதையின் மையச் சரடு. இந்தச் சரட்டை மிகப் பலமானதாக உருக்குக் கம்பி போல உருவாக்கி இருப்பதால்தான் அதைச் சார்ந்த கிளைச் சம்பவங்களை அடுத்தடுத்துச் சொல்வதென்பது – குறிப்பாக அதிகாரவர்க்கம் தனக்கு வேண்டியவர்களுக்கு எப்படி எல்லாம் வளைந்து நெளிந்து கொடுக்கிறது – திரைக்கதை ஆசிரியரான சச்சிக்கு இயல்பாகக் கைவந்திருக்கிறது.

அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கும் நேர்மையான காவல் அதிகாரியான ஐயப்பன், முதலமைச்சரிடமிருந்து பதக்கம் பெறவிருக்கும் நிலையில், உயர் அதிகாரியின் கட்டளைக்காக வேலை நேரத்தில் செய்த பிழைக்காக தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்படுகிறான். ஓர் உதவி காவல் ஆய்வாளரின் நிலை பணத்திமிரும் குடிவெறியும் கொண்ட சராசரி குடிமகன் ஒருவனால் பந்தாடப்படும் போது அதை எதிர்கொள்ள அவன் எப்படி ஆயத்தம் ஆகிறான் என்பதும் இந்தக் கதையின் நோக்கமென்றாலும், இறுதியில் அந்த நேர்மையான அதிகாரிக்கு எதிராக எவன் செயல்பட்டானோ, அவனே இறங்கி வந்து அவன் மூலமாகவே மீண்டும் காவல்துறை அந்த உதவி ஆய்வாளருக்குச் சீருடையைத் திரும்ப அணிய வைக்கும் சூழல்தான் அமைகிறது என்பதுதான் மிகப்பெரிய நகைமுரண். ஆனால் அதுவேதான் இந்தத் தேசத்தின் நிலையும், கூட வசதியும் வாய்ப்புகளும் இருப்பவர்களுக்கு சட்டம் நீதி எல்லாம் பணத்தின் மூலமாக சம்பாதிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதாகவும் கூட இந்தக் கதையை நாம் புரிந்துகொள்ளலாம்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான விஷயமாக நான் கருதுவது இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய நடிகர்களின் அபாரமான நடிப்பாற்றல்தான். எப்போதுமே நான் வியக்கக்கூடிய ஒரு விஷயமும் கூட. இரண்டு நாயகர்கள் இரண்டு கதாபாத்திரங்கள் இதில் யாருக்கு பலம் அதிகம் என்ற தன்முனைப்பு இல்லாமல் தங்கள் கதாபாத்திரங்களில் தாங்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக மட்டுமே தங்களது திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற எண்ணமும் ஆற்றலும் உறுதியும் தன்னம்பிக்கையும் மலையாள நடிகர்களுக்கு இருக்கிறது என்பதால்தான் இதுபோன்ற படங்களும் பாத்திரங்களும் மலையாளத் திரைப்படங்களில் சாத்தியமாகிறது. பிஜு மேனனும் சரி, பிரித்வி ராஜனும் சரி அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பிஜு மேனன் இடைவேளைக்குப் பிறகு மதம் கொண்ட யானையின் சீற்றத்தோடு நடத்தும் அடாவடித்தனங்கள் அத்தனையும் சபாஷ் போட வைக்கின்றன. பிஜு மேனனின் அந்த சுனாமியின் முன் பிரித்வி நீச்சல் போட்டதே பெரிய விசயம்தான்.

ஐயப்பனின் மனைவியிடம் ஏகத்திற்கும் ஏச்சு வாங்கி கூனிக்குறுகி நிற்கும் பொழுதில் ஐயப்பன் கோஷியிடம் வந்து, “வயிறு நெறச்சு கிட்டியோ?” என்று கேட்கும்போது “ஒரு அளவுக்கு” என்று பிரித்வி பம்மிப்பதுங்கும் காட்சி கொள்ளை அழகு (இப்படி ஒரு காட்சியில் எந்தத் தமிழ் முன்னணி நடிகரும் நடிக்க ஒப்புக்கொள்வார்களா என்பது வேறொரு கேள்வி). அந்த இடத்தில் கண்ணம்மாவாக நடித்திருக்கும் கௌரி நந்தாவின் வசன உச்சரிப்பும், ஆங்காரம் மிகுந்த உடல் மொழியும் வசனங்களும் வெகு கச்சிதம்.

வழக்கம்போலவே எந்த நடிகரும் சோடை போகவில்லை. குறிப்பாக பிரித்வியின் தந்தையாக வரும் இயக்குனர் ரஞ்சித் ஒரு ஆணாதிக்கவாதியான, பழம்பெருமை பேசக்கூடிய ஆணவ சாதிக்காரனைப் போல தன் பெருமை பேசிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு பழைய ‘பூர்ஷ்வா’த்தனத்தோடு நடக்கக்கூடிய பெரிய மனிதனின் உடல் மொழியை இயல்பாகக் கடத்தி இருக்கிறார். ஆய்வாளராக வரும் அனில் நெடுமங்காடு, காவலராக வரும் அனு மோகன் ஆகியோரும், பெண்காவலர் ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் தன்யாவும் தங்கள் பங்குகளைச் சிறப்புற செய்திருக்கிறார்கள்.

படத்தில் இயக்குநரான சச்சியே திரைக்கதையையும் அமைத்திருப்பது மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. அதற்கு உற்ற துணையாக ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. அட்டப்பாடியில் இயற்கை வளம் சூழ்ந்த அத்தனை காட்சிகளையும் அழகுற உள்வாங்கியிருக்கிறது சுதீப்பின் கேமரா. கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல அத்தனை அழகான சட்டகங்கள். குறிப்பாக, ஐயப்பன் ஒரு மரத்தினடியில் இருக்கும் பென்ச்சில் அமர்ந்திருக்கையில் ஓரமாகத் தூளியில் குழந்தை இருக்கும் அந்த ஒற்றைக் காட்சி.

அட்டப்பாடி என்பது ஆதிவாசிகள் பெருமளவில் வசிக்கும் பகுதி. அவர்களது நிலங்களைப் பெருமுதலாளிகள் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள். சாராயம் கொடுத்து அவர்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் அந்தப் பகுதியில் சாராயம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது. என்ற போதும் கூட இந்தப் பகுதியில் ஆதிவாசிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் கூட ஒரு ஆதிவாசியை மரத்தில் கட்டிவைத்து அடித்தே கொன்ற செய்தியை பார்த்து நாம் பதறி இருக்கிறோம். ஆகவே அட்டப்பாடியின் பின்னணியில் நடக்கக்கூடிய இந்தக் கதையில் அட்டப்பாடி ஆதிவாசிகளின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு வினோத மொழியில் அவர்கள் பாடுகின்ற நாட்டுப்புற பாடல்களை மிக அழகாகவும் செய்நேர்த்தியோடும் மிகச் சரியான இடங்களில் புகுத்தி இருப்பதன் மூலம் தனது பின்னணி இசைக்கு புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய். இதுவரை கேட்டறியாத நஞ்சியம்மை என்ற ஆதிவாசிப் பெண்ணையே அவர் எழுதிய பாட்டை படத்தில் உபயோகப்படுத்தி இருப்பதன் மூலம் மிக முக்கியமான காட்சிகளில் அதன் தரத்தை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர். மிகுந்த பாராட்டுக்குரிய செயல் இது.

மலையாள சினிமா ஏன் தனித்துவம் பெறுகிறது என்பதற்கு இத்திரைப்படத்தில் பல காட்சிகள் சான்று பகர்கின்றன. கண்ணம்மா காவல் நிலையத்தில் காவலர்களுடன் பேசுகின்ற காட்சியும் சரி, அதைப்போலவே ஐயப்பனும் கோஷியும் தனியாக வனப்பகுதியில் பேசிக்கொள்ளும் காட்சியும் சரி முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கின்றன. திரைப்படத்தில் பட்டுத்தெறித்தாற் போல் வருகின்ற வசனங்களில் கூர்மை மீண்டும் மீண்டும் நம்மை வியப்புக் கொள்ளவும், அதே நேரத்தில் ‘ஆ’வென்று வாய் பிளக்கவும் வைக்கின்றன.

மூன்று மணி நேரம் படம் என்பது மட்டுமே மிகப்பெரிய குறை என்று சிலர் அலுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மூன்று மணி நேரம் இருக்கையிலேயே சுவாரசியம் குறையாமல் நம்மைக் கட்டிப் போடுவது என்பது ஒரு மிகப்பெரிய கலை. ஆனால் படத்தில் ஒரு முக்கியமான குறை இருக்கிறது. உயர் அதிகாரி சொன்னார் என்பதற்காக, காவல் நிலையத்தில் வைத்தே ஐயப்பன் கோஷிக்காக மது ஊற்றிக் கொடுக்கும் போது, அதை கோஷி அவருக்குத் தெரியாமல் வீடியோ எடுக்கிறார். எதிரில் இருப்பவனைப் பற்றித் தெரிந்திருந்தும் ஐயப்பன் அஜாக்கிரதையாக அதைக் கவனிக்காமல் விட்டுவிடுவதுதான் அந்தக் குறை. ஆனால் அது இல்லாவிட்டால் மூன்று மணி நேர சுவாரஸ்யம் இல்லாமல் போயிருக்குமே!?

மசாலாப் படங்கள் என்றால் நான்கு பாடல்கள், ஐந்து சண்டை, பஞ்ச் டயலாக், அதிநாயகத் தன்மைகள் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கும் மசாலா பட இயக்குநர்கள், ஒரு மசாலா படத்தையே எப்படி ரசிக்கும் விதமாக அழகுற மசாலா தூக்கலாக இல்லாமல் மிகச் சிறப்பாகத் தரமுடியும் என்பதை கற்றுக்கொள்ள இந்தத் திரைப்படம் அருமையானதொரு வாய்ப்பு.

– ஆசிப் மீரான்