Shadow

கிடாரி விமர்சனம்

Kidaari thirai vimarsanam

சாத்தூரின் சண்டியராய்த் தாட்டியம் செய்து ஊரையே மிரளச் செய்யும் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் எவனோ ஒருவன் கத்தியைப் பாய்ச்சி விடுகிறான். கொம்பையா பாண்டியன் வளர்த்து வைத்திருக்கும் பகைகளில் எது அச்சம்பவத்திற்குக் காரணமாய் அமைகிறது என்பதே படத்தின் கதை.

மதயானைக் கூட்டம் படத்தில் மிரட்டியிருந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை, மீண்டும் அதே போலொரு பாத்திரத்தில் கச்சிதமாக உபயோகித்துள்ளார் இயக்குநர் பிரசாத் முருகேசன். வழக்கம் போல் கம்பீரமாக வலம் வருவதுதான், கொம்பையா பாண்டியன் பாத்திரத்தில் எழுத்தாளருக்கு வாய்த்தது எனச் சலிப்பில் இருக்கும் பொழுது, படத்தின் இறுதியில் விஸ்வரூபம் எடுக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தின் உண்மையான சொரூபம் தெரிய வரும் போதுதான் படம் தன் உச்சத்தை அடைகிறது.

கொம்பையா பாண்டியின் மகன் உடைய நம்பியாக நடித்திருக்கும் கவிஞர் வசுமித்ரவும் தன் நடிப்பால் கவனிக்க வைக்கிறார். அவர் முகத்தில் காட்டும் இயலாமையும் ஆற்றாமையும் மிக இயல்பாய் இருந்தது. அவரைத் தூண்டி விடும் மாற்றான் மனைவி லோகநாயகியாக வரும் சுஜா வருணிக்கு, அவரது கேரியரில் மிக முக்கியமான பாத்திரமாக இது அமையும். பொறுக்கி எடுத்த கவனமான சொற்களால் குறி பிசகாமல் ஆண் மனங்களைக் கச்சிதமாகச் சீண்டி விடுகிறார். பழி வாங்க வேண்டும் என்ற வன்மம், மகனை இழந்த தாயை எந்தளவு கொண்டு செல்லும் என தன் நடிப்பால் கோடிட்டுக் காட்டியுள்ளார் சுஜா. படத்தின் நாயகியான நிகிலா விமலுக்கு, முந்தைய படமான வெற்றிவேலில் தராத வாய்ப்பை இப்படத்தில் அளித்துள்ளார் சசிகுமார். ‘நாடோடிகள்’ அனன்யா போல் செல்லச் சிணுங்கள்கள் செய்வதைத் தவிர்த்து, செம்பாவிற்கெனத் தனி பாணியை உருவாக்கியிருக்கலாம் நிகிலா.

கிடாரியாக சசிகுமார். கொம்பையா பாண்டியனுக்கு ஏவல் வேலை செய்யும் காவற்காரன். அவருக்கு இப்படியான பாத்திரங்களில் நடிப்பது போர் அடிக்காதா எனச் சந்தேகப்படும்படிக்கு, இத்தகைய பாத்திரங்களில் இருந்து அவரைப் பிரித்தறிய முடியாதபடிக்கு முந்தைய படங்களில் தோன்றிவிட்டார். அதை வாழ்நாள் முழுவதுக்கும், பார்வையாளர்கள் மறந்து விடக் கூடாதென மேலும் அழுத்தமாக இப்படத்தின் மூலமும் பதிந்துள்ளார். ஆனால், இப்படம் சலிப்பை ஏற்படுத்தாதற்குக் காரணம் படத்தில் வரும் கதாபாத்திரங்களே! அவ்வளவு மனிதர்கள்; ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என படம் நம்மைக் கட்டி வைக்கிறது.

உதாரணம், புலிகுத்திப் பாண்டியனாக வரும் ஓ.ஏ.கே.சுந்தரைச் சொல்லலாம். அவரும், அவரது அண்ணனும் கிடாரிக்குப் பயப்படுகின்றனர்; உயிருக்குப் பயந்து புலிகுத்தியின் அண்ணன் நீதிபதியைப் பிடித்துத் தள்ளி, ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கு’க்கில் உள்ளே போகிறார். அந்தக் கொடுப்பினை இல்லாத புலிகுத்தியை, அவரது வண்டியிலேயே கடத்தி அவரை ஓட்டாண்டியாக்கும் காட்சி என படம் நெடுகும் சுவாரசியமான கிளைக் கதைகள்.

கதிரின் ஒளிப்பதிவும், தர்புகா சிவாவின் ஒலிப்பதிவும் முறையே அழகாய் அச்சுறுத்துகின்றன. கணக்கு வழக்கே இல்லாதளவு கொலைகள் நடக்கின்றன படத்தில். ஆனால், முகத்தில் அறையும் விஷூவல் வன்முறையோ, பதைபதைக்க வைக்கும் ‘டங்’கென்ற ஒலியோ இல்லாததால் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கிறது. ஆனால், படம் நெடுகும் வன்முறை. மகனை தந்தை கொல்கிறார், மைத்துனரை மாமன் கத்தியால் சொருகப் பார்க்கிறார் என மனித மனதின் இருண்மையைப் படம் மிக அப்பட்டமாய்க் காட்டுகிறது (தமிழ் சினிமாவின் வழக்கப்படி, அடியாட்களின் மரணமெல்லாம் கணக்கில் கொள்ளவேண்டாம்).

படத்தின் முதல் காட்சியே ரத்தம் தரையில் பரவுவதுதான். படத்தின் ஆகப் பெரிய ஆறுதல் அதன் க்ளைமேக்ஸ். மரணத்தை விட மரண பயம் கொடியது என நாயகன் வில்லனைக் கொல்லாமல் சிரித்துக் கொண்டே நம்மை வழி அனுப்புகிறார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ரத்தக்களறி இல்லாத சசிகுமார் பட க்ளைமேக்ஸ் ஆச்சரியத்தையும் ஆறுதலையும், இயக்குநர் மேல் நம்பிக்கையையும் அளிக்கிறது.