
குலேபகாவலி பாடலுடன் பொழுது ஆரம்பித்தது. முதல் டாஸ்க் சரவணன் ஹவுஸ்மேட்ஸுக்கு கோழி பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். அவர் காண்பித்த டெமோவே நல்லா இருந்தது. பிறகு அபிராமி கோழி பிடித்துக் காட்டினார். இந்தப் புள்ள மட்டும் அந்த குரூப்பை விட்டு வெளியே வந்தார் என்றால், ‘சார் அபிராமி சார், கோழி பிடிக்கிறாங்க சார்’ எனச் சொல்லி ஒரு கவிதை எழுதிருக்கலாம்.
அடுத்து, டைனிங் டேபிள்ல சாப்பிட்டுக் கொண்டிருந்த மது, ‘எனக்கு ஓட்ஸ் பிடிக்காது, போனவாரம் பழைய சாப்பாடு நைட்டே எடுத்து வச்சிருப்பாங்க. அப்படி எதுவும் இல்லையா?’ எனக் கேட்டு அடுத்த ஏழரைக்குத் தயாரானார். அதே விஷயத்தை கேப்டன் கிட்டேயும் சொல்லி, ‘பழைய சாப்பாடு இருந்தா போதும், அதுக்கு ஏற்பாடு செய்ங்க’ எனச் சொன்னாங்க மது. இதை மோகன் போய் ரேஷ்மா கிட்ட சொல்ல, ‘ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சமைக்க முடியாது, வேணும்னா அவங்களையே செஞ்சுக்க சொல்லுங்க, நல்லாருக்குனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்க, ஆனா குறை சொல்றதுக்கு மட்டும் வந்துடுவாங்க’ என எகிற ஆரம்பித்தார். பழைய சாப்பாடைக் கூட ரேஷ்மா சமைப்பாங்க போல. என்னம்மா இப்படி பண்றிங்களேம்மா!?
அந்த இடத்துலேயே, ‘இங்க பாரும்மா, நீ சமைச்சதை அவ குறை சொல்லலை, ஓட்ஸ் அவளுக்குப் பிடிக்கல, அதனால பழைய சாப்பாடு தான் கேக்கறா!’ என மோகனே தெளிவா சொல்லிருக்கலாம். ஆனா ரேஷ்மா சம்பந்தமே இல்லாம பேசும்போது பொத்திக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் மோகன். ஒருவேளை மது மேல இருந்த கடுப்பினாலா என்று தெரியவில்லை.
‘எனக்கு ஓட்ஸ் பிடிக்கலை’ என மது சொன்னதை, ‘ரேஷ்மா செஞ்சது பிடிக்கலை’ என மாறிவிட்டது. மது போகும்போதும் வரும்போதும் இதைப் பத்தியே பேசி வெறுப்பேத்திக் கொண்டு இருக்காங்க என சேரன் கிட்ட வருத்தப்பட்டு சொல்லிக் கொண்டு இருந்தார். அவரும் எல்லாம் என் விதினு கேட்டுக் கொண்டிருந்தார். அங்க உக்காந்துட்டு இருந்த லியா,’ என் காதுல எதுவும் கேக்கலப்பா’ என ரியாக்ஷன் கொடுத்தார்.
இது ஒரு சாம்பிள். 10 பேர் சேர்ந்து ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தா இன்று அது உண்மையாகிடும். யார் மேல வேணா என்ன கதை வேணா சொல்லலாம். நீங்க அங்க பெரும்பான்மையா இருந்தால் போதும், உங்க குரல் அங்க சத்தமா கேட்டால் போதும், நீங்க சொல்றதை தான் எல்லாரும் நம்புவாங்க. அதுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை. மீறி கேள்வி கேக்கறவங்களையும் எதிரியாகக் கைகாட்டி விட்டுடலாம். இதுக்கும் பயந்து கொண்டே யாரும் கேள்வியும் கேட்க மாட்டாங்க. ஆக, நீங்க யாரை டார்கெட் பண்றீங்களோ, அவங்களை மட்டும் ஈசியா கட்டம் கட்டிடலாம். இது எங்கேயோ நடக்கிற மாதிரி இருக்கின்றதல்லவா? சோஷியல் மீடியால அனுதினமும் இதுதான் நடக்கிறது. மது மாதிரியான விக்டிம்ஸ் தினமும் அடி வாங்கிட்டு தான் இருக்காங்க.
ஆனா கமல் இதுக்கு ஏதாவது செய்யவேண்டும். இது தொடர்ந்து நடந்தால் ஒரு கட்டத்தில், நாம தான் ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டோம் போல என மதுவே நம்ப ஆரம்பிச்சுடுவாங்க.
அடுத்து சாண்டியை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிட, பிக்பாஸ் மீராவை பிராங்க் பண்றதுக்கு ஒரு டாஸ்க் கொடுத்தாரு. அதன்படி ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து மீராவை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பனும். நாமினேஷன் ஆரம்பிச்சது எல்லாரும் சொல்லிவச்ச மாதிரி சொல்லக்கூடாதுங்கிறதால இன்னொரு ஹவுஸ்மேட் பேரை சொல்லி + மீராவையும் சொல்லவேண்டும். ஆனா வனிதா & கோ, இதிலேயும் மொத்த வன்மத்தையும் மது மேல இறக்கி வச்சாங்க. அதுலேயும் மோகன், ரேஷ்மா சொன்ன காரணங்கள் தேவையே இல்லாத ஆணிகள். அதுக்கு மதுவோட பதிலடியும் நன்றாக இருந்தது. மதுவோட டர்ன்ல வனிதா & கோ பெண்களைச் சொல்லாமல் கவின் பேரைக் காரணத்தோட சொன்னார். ஆனால் இத்தனை பேரும் மீரா பேர் சொன்ன போதும், அந்தப் பொண்ணு கலங்கவே இல்லை. ஜாலியா தான் இருந்தார். தேங்க்ஸ் சொல்லும் போதும் சிரித்துக் கொண்டே தான் இருந்தார். கடைசியில் சாண்டி இது ப்ராங்க் எனச் சொன்ன போதும் ஒன்னும் ரியாக்ஷனே இல்லை. மொத்தத்தில் மீராவுக்கு போட்ட ஸ்கெட்ச் வழக்கம் போல மதுவுக்கு வந்து சேர்ந்துவிட்டது.
பாத்திமா பேசும் போது மீராவை தேவதை எனப் புகழ்ந்து பேசிட்டாங்க என்று ஒரு புது பஞ்சாயத்தை கூட்டினார் வனிதா. நான் பேசினது அந்த டாஸ்க்குக்குத் தேவையானது தான் எனப் பேச, ‘அப்படின்னாலும் நீங்க சொன்னது ஓவர்’ எனச் சொல்ல, ‘உன் ஒப்பினியனை பத்தி நான் என்னிக்காவது விமர்சனம் பண்ணிருக்கேனா? நீ எதுக்கு என் ஒப்பினியனுக்குள்ள வர?’ எனக் கேட்டு வனிதா வாயை அடைத்தது பாத்திமாவின் அனுபவத்தைக் காட்டியது.
வெளியே போன கவின், சாண்டியை மதுவுக்கு எதிராக மண்டையைக் கழுவிட்டு இருந்தார். உள்ளே திடீர் என ஒரு அதிசயம் நடந்தது. மீராவும், அபிராமியும் ஒன்றாக பேசிக் கொண்டு இருந்தார். நம்ம எப்ப மீட் பண்ணினோம் எனத் தெரியுமா எனக் கேட்டு, நல்லபடியாக ஆரம்பிக்கறதுக்குள்ள, மீரா நான் உனக்கு ஹெல்ப் பண்ணினேன் என ரெண்டு, மூணு தடவை சொல்ல, அபி டென்ஷனாக ஆரம்பித்தார். வனிதாவும், ரேஷ்மாவும் மீராவின் பக்கம் பேச ஆரம்பித்தவுடனே இன்னும் உச்சத்துக்குப் போனது அபியோட டென்சன்.
வனிதா மீராவிற்கு சப்போர்ட் செய்ய ஆரம்பித்தது மதுவைத் தனிமைபடுத்தனும்னு தானென நினைக்கிறேன். மீராவும் வனிதாவிடம் சாரி கேட்டார். ‘உன்னைச்சுத்தி இருக்கறவங்க எல்லாம் நல்லவங்க இல்ல’ என வனிதா சொன்ன அட்வைஸ் கேட்டப்போ, சாத்தான் வேதம் ஓதுதே எனத் தோன்றியது. மத்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் வெளிய உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க, உள்ளே இருந்த வனிதா, ‘அவங்க என்ன பேசறாங்க எனக் கேட்டுட்டு வா’ என ஆள் அனுப்பினார். விஷம், விஷம் அம்புட்டும் விஷம்!
இந்தப் பக்கம் சாக்ஷி, ‘நான் இந்த வாரம் எலிமினேஷன்ல இருக்கேன், அதை பத்தி நீங்க யாரும் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க’ என அழுதார். அபிராமி கொஞ்ச நேரம் அங்கேயும், இங்கேயும் டென்ஷனா நடந்து கொண்டிருந்தார். முக்கியமாக சாக்ஷி நேற்று போட்டிருந்த ஆடையைப் பற்றிச் சொல்லனும். ‘இன்னிக்கு ஹாட்டா ட்ரெஸ் பண்ணப் போறேன்’ என காலையிலேயே கவினி சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனா இவ்வளவு கவர்ச்சியாகப் போட வேண்டுமா என்ன? ஒருவேளை இந்த வாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிக்க இப்படி ஒரு வழி பண்றாங்களா எனத் தெரியவில்லை.
இரவு 12 மணிக்கு சாண்டி பர்த்டேவுக்கு கேக் வந்தது. அவர் மகளைக் காண்பித்து, சாண்டியை மட்டும் இல்லாமல் எல்லாரையும் அழ வைத்தார் பிக்பாஸ்.
தொடர்ந்து வெறுப்பேத்தினாலும் ரியாக்ட் பண்ணாம கடந்து போகும் மதுவுக்கு ஒரு ஷொட்டு;
இன்னிக்கு யார் கையை பிடிச்சு இழுக்கலாம்னு திரியும் வனிதா & சோவுக்கு ஒரு குட்டு;
சாண்டி பர்த்டே தான் ஹிட்டு.
– மகாதேவன் CM