Shadow

பிக் பாஸ் 3 – நாள் 11

பத்தாம் நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கியது. நேற்று மோகனிடம் ஏதாவது வேலை என்றால் கேப்டன் எனும் முறையில நீங்க வந்து சொல்லுங்க எனச் சொன்னதையே இன்று வனிதாவிடம் சொல்லி, வனிதாவோட பேட்புக் லிஸ்ட்ல நேரடியாக இடம் பிடித்தார் சேரன். அதை அவ்வளவு ஈசியா எடுத்துக் கொள்ளாத வனிதா, ‘எனக்கும் சேரனுக்கும் இனிமே பேச்சுவார்த்தை இல்லை. அன்னம் தண்ணி புழங்க மாட்டேன்’ என இன்ஸ்டன்டாகத் தீர்ப்பு கொடுத்தார்.

‘நான் தான் கேப்டன், என் வயசுக்கு மரியாதை கொடுக்கனும், என் பேச்சை கேக்கனும், என் கிட்ட வந்து என்னை மதிச்சு உங்க பிரச்சினையைச் சொன்னா, உங்களுக்காகப் பேசுவேன்’ என
இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும் என ஒரு போர்ட் வைத்தார். அப்ப ஒருத்தன் கொட்டாவி விட்டுட்டு இருந்தது தான் இந்த சீனுக்கான குறியீடு.

சாண்டி நேத்து நடந்த பிரச்சினையில, மீராவையும், மதுவையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். வலை போட்டதென்னவோ மீராவுக்குத் தான், ஆனா சிக்கியது மது தான். நேக்கா மீரா எஸ்கேப் ஆனதை நடிதுக் காட்டிக் கொண்டு இருந்தார்.

அப்புறம் இரவு கவின், சாக்‌ஷி, லியா மூன்று பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். இந்தக் கவின், தன் பின்னாடியே வர சாக்‌ஷியா, இல்ல கண்டுக்காமல் இருக்கிற லியாவா என ஒத்தையா ரெட்டையா போட்டு விளையாடிட்டு இருக்கான். ஃபுல் டைம் ஜாப்பா ஒருத்தன் கடலை போடறதை இப்பத்தான் பார்க்கிறேன்.

11ஆம் நாள், மாஸு மரணம் பாட்டோட ஆரம்பிக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் எந்திரிக்கறதுக்குள்ள பாதி பாட்டு முடிந்துவிட்டது.

முந்தின நாள் கவின் பேசியதை ஷெரின் கிட்ட சொல்லிக் கொண்டு இருந்தார் சாக்‌ஷி. கவின், லியா பின்னாடி போன போதெல்லாம் சாக்‌ஷி கண்ணுல பொறாமை தெரிந்தது.

பாத்திமா பாபு செய்திகள் வாசிப்பது எப்படி எனச் சொல்லி கொடுத்தார். சாதரணமாகப் பேசிக் கொண்டு டக்கென செய்திகள் வாசிக்கும் போது குரலில் ஒரு கம்பீரத்தைக் கொண்டு வந்து நான் சீனியர்டா என ப்ரூவ் பண்ணினார்.

வழக்கம் போல அபி & கோ கிச்சனில் நின்று கொண்டு பேசிக் கொண்டு இருந்தனர். கவினும் அங்கே இருந்தான். அப்ப பேச்சு லியாவைப் பற்றிப் போனது. ‘அவளுக்கு ஏதோ கோபம் போல, நாம பேசிட்டு இருக்கும் போது எந்திரிச்சு போய்ட்டா’ எனப் பேச, இதைக் கேட்டு துள்ளிக் குதித்து எழுந்த கவின் நேராக பாத்ரும் போனான். ஏன்னா அங்க தான் லியா இருந்தாங்க. இதை நான் சொல்லியே ஆகனும், லியா நேத்து அவ்வளவு அழகு. ‘எதுக்கு மச்சான் கோபம், ஏன் எந்திரிச்சு வந்த?’ன்னு கேக்க, லியாவுக்கு ஒன்னும் புரில. அதே சமயம் சாக்‌ஷியும் அங்க வந்தாங்க. அவங்க கதைச்சிட்டு இருந்தாங்க, எனக்கு அது புரியவும் இல்ல, அதனால நான் எந்திரிச்சு வந்தேன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்புறம் வெளிய வந்த சாக்‌ஷி, இது நாங்க போட்ட திட்டம். லியா ரெண்டு டீம் கூடவும் பேசிட்டு இருக்கா. நம்ம கூட பேசினதை எல்லாம் அங்க சொல்றாளான்னு கண்டுபிடிக்க இப்படி ஒரு ப்ளானாம். நீ வந்து கெடுத்துட்டன்னு சாக்‌ஷி சொல்ல, கவின் வழிஞ்சுட்டே இருந்தான்.

ஏம்மா, இதைத் தெரிஞ்சுக்க எதுக்கும்மா ப்ளான்? அந்த டீம் பேசினதை எப்பவாவது லியா உங்ககிட்ட சொல்லிருக்காளா? இல்லைன்னா அதே மாதிரி இங்க பேசறதையும் அங்க சொல்றதில்லை என தானே அர்த்தம். தன்னைப் பெரிய புத்திசாலியாகக் காட்டிக்க மத்தவங்களை முட்டாளாக்கிட்டு இருக்கார் சாக்‌ஷி.

அடுத்ததாக அன்னப்பறவை அணிக்கு லக்சரி பட்ஜெட் டாஸ்க். உடனே மீரா ரெடியாக, சாண்டி டரியல் ஆகிட்டாரு. ஹவுஸ்மேட்ஸ் தான் செலக்ட் பண்ணனும் என்பதால் அவங்க மதுவை செலக்ட் பண்ணினாங்க. மணல் சேறுல இறங்கி அதுல இருக்கற காயின்ஸை எடுக்க வேண்டும். எத்தனை எடுத்தார்ளோ அத்தனை பாயிண்ட்ஸ். ரெண்டு பேருமே நல்லா விளையாடினாங்க. அந்த டாஸ்க்ல 590 பாயிண்ட்ஸ் கிடைச்சது.

நேத்து மீராவையும், மதுவையும், சாண்டி கலாய்ச்சதைப் பார்த்த பிக்பாஸ் டீமுக்கு இதையே ஒரு டாஸ்க் ஆக்கினா என்ன என்று தஒன்றி இருக்கும். உடனே அதைச் செயல்படுத்தினாங்க. ஆண்கள் எல்லாரும் வீட்டுல இருக்கற ஒவ்வொரு பெண்ணையும் பிரதியெடுத்து, வீட்டுல நடந்ததை நடித்துக் காமிக்கனும். சும்மா சொல்லக்கூடாது ஆண்கள் அணி வச்சு செஞ்சுட்டாங்க. கவின் ஷெரினோட ஒரு ட்ரஸ்ஸை அடம் பிடித்து வாங்கிப் போட, அந்தப் பக்கம் சாண்டி மீராவோட ட்ரெஸ்ஸை ஆட்டைய போட்டுட்டாரு. ரெண்டு பேருமே பின்னிப் பெடலெடுத்தாங்க. கவின் ஷெரின் மாதிரியே இங்கிலீஷ் பேசி நடித்ததைப் பார்த்து ஷெரின் உரண்டு புரண்டு சிரித்தார். இந்தப் பக்கம் மீராவை செம்மையா கலாய்த்தார் சாண்டி. மீராவும் நல்லா என்ஜாய் பண்ணினாங்க. மதுவோட கேரக்டர் மோகன் செஞ்சாரு. வனிதாவோட கேரக்டர் பண்ணின தர்ஷன் பிரிச்சு மேஞ்சுட்டான்னு தான் சொல்லனும். சரவணன் ஒரு பக்கம் பாத்திமா மாதிரி மெர்சல் காட்டிக் கொண்டு இருந்தார். ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு என்ஜாய் பண்ணிப் பார்த்த ஒரு டிவி ப்ரொகிராம். கடைசியில் தரஷன் தான் பெஸ்ட் ப்ரைஸ் வாங்கினார்.

இது முடிஞ்சதுக்கு அப்புறம் லிவிங் ஏரியால ஒரு அணி உக்காந்திருக்க, ‘மோகன் மாதிரி யாராவது நடிச்சு காமிப்பாங்க’ எனச் சொல்ல மது முன்வந்து நடித்தார். ஆனா அது மோகனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. தான் மது கேரக்டர் பண்ணியதால் தான் வேணும் என மது தன்னை மாதிரி நடித்துக் காட்டியிருக்கார் என உறுதியாக நம்பினார். மற்றவர்களிடமும் அதையே சொல்ல ஆரம்பித்தார். மது என்னை பழிவாங்கி விட்டதாகச் சொல்லி அனுதாபம் தேடிக் கொண்டிருந்தார்.

வெளியே சாண்டி, மதுவைப் பாராட்டிக் கொண்டிருந்தார். மது சரியாக செய்ததாகவும், மோகன் மது கேரக்டரைச் செய்யும் போது நிறை விஷயங்கள் மது செய்யாததைச் செய்ததாகவும் சொன்னார்.

அட்டகாச பர்ஃபாமன்ஸ் கொடுத்து சிரிக்க வைத்த ஆண்கள் டீமுக்கு மிகப்பெரிய ஷொட்டு;

எப்ப பாரு பொண்ணுங்க பாத்ரூம் போகும் போதெல்லாம் கூடவே துணைக்குப் போகும் கவினுக்கு ஒரு குட்டு;

அழகு லியா தான் ஹிட்டு.

– மகாதேவன் CM