Search

பிக் பாஸ் 3 – நாள் 13

ஒரு புதிய நாள், சாண்டியோட பிறந்த நாள் வாழ்த்துக்களோட ஆரம்பித்தது. முதல் டாஸ்க் அபிராமி மத்த ஹவுஸ்மேட்ஸுக்கு நவரசங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அபிராமி என்ன சொல்லிக் கொடுத்தாங்களோ தெரியவில்லை. ஆனால், சாண்டி + பாத்திமா ஜோடி அப்ளாஸ் அள்ளிவிட்டது. கிச்சனில் வனிதா கிட்ட மதுவைப் பற்றி கம்ப்ளெயின்ட் பண்ணிக் கொண்டிருந்தார் மீரா. புடவை கட்டிவிட வந்ததாகவும், ஆனா கடைசி நேரத்தில் மாட்டேன் எனச் சொல்லி பாத்திமா தான் ஹெல்ப் பண்ண வந்ததாகவும் மீரா சொல்ல, வனிதா மண்டைக்குள்ள உடனே பல்பு எறிந்திருக்கும் போல.

சினிமாவில் எதிரெதிராக இருக்கிற இரண்டு கேங்ஸ்டர்கள் ஒன்று சேரும் போது, எதிரி கூட்டத்தில் இருந்து தனக்கு உளவு பார்த்த அடியாள் ஒருத்தனைப் போட்டுக் கொடுத்துவிடுவார்கள். கிட்டத்தட்ட அதே மாதிரி, ‘பாத்திமா உன்னைப் பார்த்து நேரோ மைண்டட்னு சொன்னா’ என மீராவிடம் போட்டுக் கொடுத்தார் வனிதா. மீராவும் உடனடியாக தன் மூளையைக் கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு, பாத்திமாவிடம் சண்டைக்குப் போய்விட்டார். அந்த வார்த்தையை எதற்காகச் சொன்னேன் என பாத்திமா சொன்ன எந்த விளக்கத்தையும் மீரா கேட்கத் தயாராக இல்லை. கடைசியில் தர்ஷன் கொஞ்சம் சத்தம் போட்டதுக்குப் பின் தான் அடங்கி, அழுது கொண்டே நகர்ந்து போனார் மீரா.

புதுசா க்ரூப்புக்கு வந்த மீராவிடம் நல்ல பேர் வாங்கவும், நேற்று தனக்கு எதிராகப் பேசின பாத்திமாக்கு ஒரு பஞ்சாயத்தைக் கொடுத்து பழிவாங்கியாகிவிட்டது. அதே சமயம் இதுவரைக்கும் தனித்தன்மையோட இருந்த மீராவோட கேரக்டரைக் கூட்டத்தில் கோவிந்தா போடுறா மாதிரி மாத்தியாச்சு. இப்படி ஒரே கல்லில் 3 மாங்காய் அடித்தார் வனிதா. இதில் பெட்ரூமில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது இன்னொரு பெட்டில் படுத்துச் சிரித்துக் கொண்டிருந்தது எல்லாம் சாடிஸ்ட் தனத்தின் உச்சம்.

கமல் செஷன் ஆரம்பித்தது. போன வாரம் வீடு எப்படி இருந்தது, பெண்கள் சண்டையைப் பற்றிக் கவனமாகப் பெண்களைத் தவிர்த்துவிட்டு, ஆண்கள் கிட்ட மட்டும் பேசிக் கொண்டிருந்தார். பெண்கள் எல்லாம் பேசாமல் இருக்க வேண்டுமென கமலே டிஸ்கி போடற லெவலில் இருக்கிறது வீடு. போன வார கேப்டன் மோகனோட பெர்ஃபாமன்ஸ் எப்படி எனக் கேட்ட உடனே எழுந்த வனிதா, ‘அவரு என் செல்லம், புஜ்ஜிமா’ எனக் கொஞ்சிக் கொண்டிருந்தார். மதுவும், சேரனும் சில விமர்சனங்களை வைக்க, சரவணன் நல்லவிதமாகச் சொன்னார். மதுவின் விமர்சனத்திற்கு உடனே எழுந்து எதிர்விமர்சனம் செய்தார் மோகன். ‘எப்பப்பாரு கத்திட்டே இருக்காங்க’ என ஓர் இடத்துல சொல்லிவிட்டு, யார்கிட்டேயும் பேசாமல் எப்பப்பாரு மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு, ‘நமசிவாய’ சொல்லிக் கொண்டு, மற்றவர்கள் கூடச் சேர மாட்டேங்கிறாங்க என ஒரு இடத்துல சொன்னார் மோகன். இப்படி இரண்டு மாறுபட்ட ஸ்டேட்மெண்டை மதுவைப் பற்றிச் சொன்னார் மோகன். இப்படி பச்சையாக ஒரு பக்கமாகச் சாய்ந்து நின்று ஒரு கேப்டன் இவராகத்தான் இருப்பார்.

‘அன்னிக்குப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால இப்ப சொல்லுங்க’ என மது சொன்ன மோட்டிவேஷனல் கதையை முடிக்கச் சொன்னார். கொடுத்த தலைப்புக்கு எனக்குப் பேசத் தெரியலை எனச் சொல்லி ஒரு வழியாக அவர் பேசி முடித்தார். இப்ப மது பேசும் போதும் வனிதாவோட பேஸ் ரியாக்ஷனை தான் காட்டியது கேமரா. ‘இதுல மோட்டிவேஷனே வரலையே!’ என கமல் சொன்னதுக்கு கை தட்டிச் சிரித்தனர் வனிதா & கோ.

முகின் கிட்ட விசாரணை பண்றதாக ஆரம்பித்தார். சரி எப்படியும் குறும்படம் போடுவாங்க என நிமிர்ந்து உட்கார்ந்தால், சப்பென முடித்துவிட்டார். அந்த விஷயத்தில் முக்கியமான கல்ப்ரிட்டே சாக்‌ஷியும், ஷெரினும் தான். அவர்களிடம் கேள்வியே கேட்காமல், அட்வைஸ் மட்டும் பண்ணியது ரியல் போங்காட்டம்.

ஏற்கனவே கன்டென்ட் சப்ளையராக இருக்கிற சாண்டி, விளையாடின ஒரு கேமை கமல் ஹவுஸ்மேட்ஸ் கிட்ட விளையாடினார். அதன் படி ஒருத்தரைப் பற்றிப் பாராட்டிப் பேசவேண்டும், கை தட்டினால் நெகட்டிவாவும் பேசவேண்டும். முதல் ஆளே, மது தான். பேசியது ஷெரினைப் பற்றி. ஏற்கனவே எரிகின்ற நெருப்பில் இன்னும் கொஞ்சம் பெட்ரோலை ஊற்றினார் கமல். இப்படியே ஒரு சுற்று வந்தது. லொஸ்லியா பேரை அழைத்த போது எழுந்த கைதட்டல் ஓவியாவை ஞாபகப்படுத்தியது.

‘இந்த வாரம் எலிமினேஷன் இருக்கு. அதனால அதுக்கு முன்னாடி நாமினேஷன் ஆனா 7 பேர்ல யார் வீட்டை விட்டுப்போகவேண்டும்?’ என நினைக்கிறதை ஒரு போர்ட்ல மார்க் பண்ணச் சொன்னார் கமல். முந்திரிக்கொட்டை மாதிரி எழுந்து வந்த வனிதா மது போட்டோவுக்குக் கீழே வரிசையா மார்க் பண்ணிக் கொண்டே போனார். மத்தவங்களுக்கும் சேர்த்து நானே போடறேன்னு சொன்னதை கமல் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார் எனத் தெரியவில்லை. வனிதா செய்தது தன் க்ரூப்புக்கான ஒரு சிக்னல். சில சரவணன் வீட்டுக்குப் போக ஆசைப்படுகின்றார் எனச் சொல்லி அவருக்கு மார்க் போட, அதை மாற்றச் சொன்னார் கமல். வனிதா க்ரூப் வழக்கம் போல மதுவை டார்கெட் பண்ண, சில மீரா பக்கம் ஒதுங்கினர். மது பேரைச் சொல்லி, அதற்கான காரணத்தைச் சொன்ன போது வனிதா & கோ காட்டிய அட்டிட்யூட் ரொம்ப மோசம். அவர்கள் யாரும் தப்பே செய்யாத மாதிரியும், மது மட்டும் மன்னிக்கவே முடியாத தவறு செய்த மாதிரியும் பேசினர்.

அபி மட்டும் மீரா பேரைச் சொன்னதில் வனிதா பயங்கர அப்செட். அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அப்பவே அபியிடம், ‘நீ கன்ஃப்யூஸ் ஆகிட்டன்னு நினைக்கிறேன்’ எனச் சொன்ன போது, ‘நான் சரியா தான் செய்யறேன்’ எனச் சொல்லிட்டார். மதுவோட டர்ன்ல கவின் பேரைச் சொன்ன போது எழுந்த கை தட்டல் கவினுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். லொஸ்லியா மீராவை மார்க் பண்ணி அதுக்கு கொடுத்த விளக்கம் கிளாஸ். எதிலும் பட்டும் படாமல் இருந்தாலும், ‘நடக்கிறதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டு தான் இருக்கேன்’ எனத் தெளிவாகப் புரிய வைத்துள்ளார் லியா. அதே மாதிரி தான் தர்ஷனும்.

எல்லாத்தையும் கேட்ட கமல் இந்த வாரம் சேஃப் ஆன முதல் நபர் மதுமிதா எனச் சொல்லி விட்டுக் கிளம்பிட்டார். அதற்கு மது காண்பித்த்ச் ரியாக்ஷன் ஓவர், ரொம்ப நடிக்கறாங்க என சில விமர்சனங்கள் பார்த்தேன். இன்னிக்கு நிலைமைக்கு வனிதா டீம் மட்டும் தான் மதுவுக்கு எதிரியா தெரிந்தாலும், நாம் ஆதரவாக பேசினால், எங்கே தனக்குப் பிரச்சினை வந்துவிடுமோ என நினைத்து, வனிதாவுக்குப் பயந்தோ, இல்ல வேற காரணங்களுக்காகவோ மத்த ஹவுஸ்மேட்ஸும் மதுவுக்குச் சப்போர்ட் செய்வதில்லை. இருக்கின்ற 15 பேர்ல தனக்கு ஆதரவாகப் பேசறதுக்கு ஒருத்தர் கூட இல்லாத ஒரு நிலை தான் மதுவுக்கு.

அப்படி மொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில, 7 பேர்ல முதல் ஆளா சேஃப் ஆன செய்தி, அவங்களை வெடித்து அழ வைத்ததில் எந்த நடிப்பும் தெரியவில்லை. மக்கள் அவங்களுக்குக் கொடுத்திருக்கிற ஆதரவு, ஒரு பெரிய பூஸ்ட் மதுவுக்கு. குறும்படம் போட்டு, இவ்வளவு வெறுப்பு காமிக்கற அளவுக்கு மது எதுவும் தப்பு பண்லை என நிரூபிக்கறதுக்குப் பதிலா, இப்படிச் செய்ததும் நன்றாகத்தான் இருக்கு.

ஆனா இந்த விஷயத்தை வனிதாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இது ஓரு அதிர்ச்சி என்றால், அபிராமி மீராவுக்கு ஓட்டு போட்டது இன்னொரு பெரிய அதிர்ச்சி. பேசி வைத்த மாதிரி நடந்து கொள்ளவில்லையென அபிகிட்ட கேட்க, ‘எனக்கு என்று சுய விருப்பம் இருக்கு’ என அபி சொன்ன பதிலால், வனிதா – அபிக்கு நடுவில் விழுந்த விரிசல் ரெண்டாவது நாளாகப் பெரிதாகிக் கொண்டுள்ளது.

வெளியே வந்த ஷெரின், ‘பிரச்சினை பண்றவங்களைத்தானே வச்சிருப்பாங்க’ என அவங்களுக்கே ஆறுதல் சொல்லிக்கொண்டார். திருந்த வாய்ப்பே இல்லை.

அந்தப் பக்கம் கவின் பேய் அடிச்ச மாதிரி உட்காந்திருந்தான். மது அவன் பேரைச்சொன்ன போது எழுந்த கைதட்டலை பத்தி சரவணன் கவினுக்கு எடுத்து சொல்லிக் கொண்டு இருந்தார். அப்பொழுது அங்கே வந்த வனிதா, ‘வெளியஎ உனக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்குடா’ எனச் சொன்னதை கவின், சரவணனே அதிர்ச்சியோட பார்த்த்ச்னர். ‘மது ஜெயிச்சிருக்கா + கவின் பேர் சொல்லும் போது எழுந்த கைதட்டல் கண்டிப்பாகக் கவினுக்கு எதிர்ப்பு தான்’ என சரவணன் சொன்னதை, வழக்கம் போல இடது கையால் ஒதுக்கிவிட்டு, ‘உங்களுக்கு ஒன்னும் தெரியாது’ எனப் பேச ஆரம்பித்தார் வனிதா. ‘எப்படியோ எக்கேடோ கெட்டுப் போங்க’ என சரவணன் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

கவினுக்கு இது ஓர் அபாய மணி எச்சரிக்கை. என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கலாம். மது ஜெயித்தது வனிதா க்ரூப்பை எந்த விதத்திலும் மாற்றாது. ஆனால் இவ்வளவு நாள் நமக்கெதுக்குப் பிரச்சினை என ஒதுங்கிப் போன மத்த ஹவுஸ்மேட்ஸ்கிட்ட கண்டிப்பா சில மாற்றங்களைக் கொண்டுவரும் என நம்புவோம்.

எண்டர்டெயினர் சாண்டிக்கு ஓரு ஷொட்டு;

தன்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கூடத் தெரியாத மோகனுக்கு ஒரு குட்டு;

மதுவோட வெற்றி தான் ஹிட்டு.

– மகாதேவன் CM