Shadow

பிக் பாஸ் 3 – நாள் 24

‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம்’ என்ற பழைய பாட்டோடு ஆரம்பித்தது நாள்.

‘இதுக்கு என்னத்த ஆடறது?’ என நினைத்த பாதி பேர் வேடிக்கை பார்க்க, சாண்டியும் சாக்‌ஷியும் மட்டும் கடைசி வரை ஆடினர். நேற்றைய பஞ்சாயத்துக்களின் மிச்சங்கள் இன்னிக்கும் பேசப்பட்டது. ‘கவின்-மீரா பிரச்சினையில என் ஃபுல் சப்போர்ட்டும் உனக்கு தான் பேபி’ என சாக்‌ஷிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார் மோகன்.

இந்த ரேஷ்மா நல்லவங்களா இல்ல கெட்டவங்களா என்றுதான் தெரியவில்லை. அந்தப் பக்கம், இந்தப் பக்கம் போய்விட்டு வரும்போதெல்லாம், காற்று வாக்கில் காதில் விழும் மேட்டரையெல்லாம் கேட்டு விட்டு, அதைப் பக்காவாக சம்பந்தப்பட்ட நபர்களிடம் சொல்லி விடுகிறார். ஒரே ஒரு நல்ல விஷயம், ஒன்றுக்கு இரண்டாகக் கூட்டிச் சொல்லாமல், நடந்ததை அப்படியே சொல்வதுதான். அப்படிச் சொல்லிவிட்டு, அதற்கு என்ன செய்யலாம் என்கிற தீர்வும் கொடுக்கறார். பல சமயங்களில் அது நல்ல தீர்வாகத்தான் இருக்கு. ஆனால் அதை எக்சிகியூட் பண்ற இடத்தில் மற்றவர்கள் சொதப்பி விடுகின்றனர். ஆக, இப்படி தன் க்ரூப்புக்கு காட்மதராக அவர் இருப்பதால், நாம செல்லமாகத் தாய்க்கிழவியெனக் கூப்பிடலாம்.

நேற்று சாக்‌ஷி – கவின் – லொஸ்லியா முக்கோண பிரச்சினையை பற்றின பேச்சும் வந்தது. லியாவுக்கும் கவினுக்கும் என்ன பிரச்சனை, ஏன் லியா அழுதாரென சாக்‌ஷி டீமுக்குத் தெரியாது. இன்று அதைத் தெரிந்து சொன்னார் தாய்க்கிழவி. அதைக் கேட்டு சேரனுடன் உட்கார்ந்து பேசினார் சாக்‌ஷி. லியாவுக்குக் கவின் மேல் நட்பைத் தாண்டி ஒன்றுமில்லை எனச் சொன்னார் சேரன்.

லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடர்ந்து நடந்தது. முந்தைய நாள் அலாரம் அடிக்கும் 2 கடிகாரங்களைக் கண்டுபிடிக்க 10 செகண்ட் கொடுத்த பிக்பாஸ், நேற்று 15 கடிகாரங்களைக் கண்டுபிடிக்க 30 செகண்ட் கொடுத்து தன் தாராள மனதைக் காண்பித்தார். அடுத்து 25 கடிகாரங்களைக் கண்டு பிடிக்கனும். உண்மையிலேயே இது போங்காட்டம் மாதிரி தான் இருந்தது. அபி-முகின், தர்ஷன்-சாக்‌ஷி இரண்டு டீமும் எந்த பாயின்ட்ஸும் எடுக்காமல் போனதால், நேற்று வென்ற 1200 பாயின்ட்ஸ் மட்டும் தான் இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கென பிக் பாஸ் அறிவித்தார்.

இந்த கேமில் முதல் ரவுண்ட்லேயே சாண்டியை இறக்கி விட்டது ரொம்பத் தப்பு. டாஸ்க் வரும்போது ஜெயிக்கறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தர்ஷன், சாண்டி இவங்க இரண்டு பேருமே எல்லா டாஸ்க்கையும் நல்லா விளையாடறாங்க. கஷ்டமான டாஸ்க் வரும்போது இவங்களை அனுப்பலாம்.

அடுத்து சாண்டி, கவின், தர்ஷன், முகின் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கூடவே அபியும். ஒருவேளை இந்த வாரம் மோகன் வெளியே போனால், அவருக்கு ஒரு பாட்டு தயார் பண்ணிக் கொண்டிருந்தனர். பேச்சு ஜாலியாகப் போய்க் கொண்டிருக்க, அபி தன் காலைத் தூக்கி முகின் கால் மேல போட்டு உக்காந்தார். அதற்கு முகின் ஏதோ சொல்ல, கோபமாக எழுந்து உள்ளே போனார் அபி. ‘தம்பி நீயாவது சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சேன். உனக்குமாடா?’ என முகினைக் கலாய்த்தார் கவின்.

பேச்சு, நேற்றைய கவின் பிரச்சினைக்குத் திரும்பியது. ‘ஒன்னுமே இல்லாததை பிரச்சினை பண்ணிட்டாங்க’ என கவின் புலம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் புலம்புவதிலும் நியாயம் இருக்கு. சாக்‌ஷி அவருக்கு எனக் கொடுத்த சாக்லேட்டை அவர் இன்னும் வைத்துள்ளார். இதை தெரிந்து கொள்ளாமல், ‘இப்படித்தான் நடந்துருக்கும்’ என எதையோ யோசித்து, பிரச்சினை பண்ணியது சாக்‌ஷி தான். ‘தன்னால தான் கவினுக்கு இந்தப் பிரச்சினையோ?’ எனக் குழம்பினார் லியா. இதில் இன்னொரு கூத்து, சாக்லேட்டைத் திருப்பிக் கொடுக்க வந்தபோது, ‘மேக்கப் போட்ருக்க, வெயில்ல நின்னா கரைஞ்சுரும், அதனால உள்ள போய் உக்காரு’ என கவின் யதார்த்தமா சொல்லிருக்கார். சாக்‌ஷிக்குப் பிடிக்காது என நம்ம கூடப் பேசுவதை தவிர்க்கத்தான் இப்படிச் சொல்றார் என முடிவுக்கு வந்தார் லியா. நேற்று லியா அழ, ‘இது தான் காரணம்’ என தர்ஷன் சொல்லி கவின் தெரிந்து கொள்கிறார்.

கவின் உள்ளே வந்த இரண்டாவது நாள் அபிராமி அவனுக்கு ப்ரொபோஸ் பண்றா. அப்ப இது வேண்டாம் என வெளியே வந்து விடுகிறான் கவின். அதுக்கப்புறம் பார்க்கும் போது வீட்டுல 4 இளம்பெண்கள், தனக்கான டிமாண்ட் தெரிகிறது அவருக்கு. ‘ஓக்கே! இப்படியும் விளையாடலாம்’ என முடிவு பண்ணி களத்தில் இறங்குகிறார். பெண்கள் கூட்டத்துக்கு நடுவில் வளர்ந்ததால் கம்யூனிகேசன் செய்வது ஈசியாக இருக்கு கவினுக்கு (தகவல் உதவி – வனிதா). சார்மிங்கான ஒரு பையன், டீசன்ட்டாகப் பேசுகிறான், லிமிட் தெரிந்து நடந்து கொள்கிறான், நல்ல காமெடி சென்ஸ், சோ இத்தனை க்வாலிட்டியோடு இருக்கின்ற்ந் கவினிடம் பெண்கள் விழுந்தது ஆச்சரியமே இல்லை. அதே சமயம் அவர் தெளிவாக இருக்கார். நண்பர்களாக இருப்போம், மிச்சத்தைப் பின்னாடி பார்த்துக்கலாம் என்பது கவினோட எண்ணம். பெண்கள் சூழலில் வளராத, பெண் வாசனையே படாத, ஸ்பரிசம் கூடக் கிடைக்காத ஆண்கள் கவினோட செயல்களைப் பார்த்தால், தவறாகப் புரிந்து கொள்ளத்தான் வாய்ப்பு அதிகம்.

தன்னை விட அழகான பெண், தன்னை விட கொஞ்சம் சக்சஸ் பார்த்த பெண் காதலைச் சொன்ன போது ரிஜக்ட் பண்ணின ஒரு ஆண், ‘தன் பின்னாடி வரான், தன்கிட்ட பேசறதுக்கு வெயிட் பண்றான்’ எனத் தெரியும் போது, எந்த ஒரு பொண்ணும் அந்த ஆண் பக்கம் சாய்வது நியாயம் தான். சாக்‌ஷியும் அதை தான் செய்தார். இவனை இழந்துடக்கூடாது என்கிற கான்ஷியஸ் சாக்‌ஷிக்கு நிறைய இருக்கு.

Cute Losliyaலியாவுக்கு தன் அழகின் மேல் கர்வம் இருக்கு. அவரோட பார்வை, சிரிப்பு, செய்கை, கோபம் எல்லாமே அவரோட பழகும் ஆண்களைத் தடுமாற வைக்கும். இது லியாவுக்கும் நல்லாவே தெரியுது. பெண்களின் கர்வம் என்பது தன்னால் வீழ்ந்த ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாறுபடும். அழகான பெண் என்கிற போது எல்லா ஆண்களும் ஏதோ ஒரு விதத்தில் ட்ரை பண்ணிட்டுத்தான் இருப்பாங்க. அவ்வளவு சீக்கிரம் நாம விழக்கூடாது எனும் கான்ஷியஸ் இயல்பாவே லியாவுக்கு இருக்கு. ஆனா கவின் அதை அசைத்துப் பார்க்கறான். கவினிடம் பேசும் போது சில தடுமாற்றங்கள் இருக்கு லியாவுக்கு. ‘எங்க நாம விழுந்துவோமோ?’ எனக் குழப்பம் வரும்போதெல்லாம் தான், வேண்டுமென்றே கவினை டீஸ் பண்ணிட்டு இருக்கார் லியா.

பெண்களைச் சுற்றி எப்பவுமே சில வட்டங்கள் இருக்கும். ஸ்ட்ரேஞ்சர்ஸ், ஆபிஸ் கொலீக், தெரிஞ்சவர்கள், நண்பர்கள், குடும்பம், பெஸ்டி என நம்பகமான ஆணாக இருந்தால் மட்டும் தான் அந்த ஒவ்வொரு வட்டத்தையும் தாண்டி அவங்களை நெருங்க விடுவார்கள். நம்பகத்தன்மைன்னா என்னவென்று கேட்டீங்க என்றால் It’s purely Girl’s Instinct. அவங்க உள்ளுணர்வுக்குத்தான் தெரியும்.

கவின், இப்போ சாக்‌ஷி மற்றும் லியாவோட இன்னர் சர்க்கிள்ல இருக்கார். அவங்களுக்கு நடுவில் ஒரு சின்ன கோடு தான் இருக்கு.
சாக்‌ஷி அந்தக் கோட்டை தாண்டத் தயாராக இருக்கார். லியாவுக்கு ஆசை இருந்தாலும், வேண்டாமென இருக்கார். கவினுக்கு இது ஒரு பிரச்சினையே இல்ல.

‘சரி இப்ப எதுக்கு இந்தப் புராணம்?’ எனக் கேட்டீங்க என்றால், கடந்த இரண்டு நாளாகப் பார்க்கறவங்களுக்கு பிக் பாஸ் மொத்த லைட்டையும் கவின் மேல திருப்பினது தெரிந்திருக்கலாம். மீராவோட பிரச்சினை, சாக்லேட் பிரச்சினை என செண்டர் ஆஃப் அட்ராக்‌ஷனாகக் கவின் தான் இருக்கார். அதனுடைய தொடர்ச்சி தான் நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த, ‘நீயா? நானா?’ பாணியிலான நிகழ்ச்சி. வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு இருப்பது நட்பா, இல்லை அதையும் தாண்டியதா என்கிற கேள்வியே கவினுக்கு என டிசைன் பண்ணினது தான்.

இப்படி ஒரு தலைப்பு கொடுத்து சாக்‌ஷி – கவின் – லியா எப்படி பிகேவ் பண்றாங்க என பார்த்துக் கொண்டு இருக்கோம். அந்த டாக் ஷோ பிஷ் மார்க்கெட்டை விட மோசமானதாகத்தான் இருந்தது. மற்றபடி எதை நினைத்து பிக் பாஸ் இந்த டாஸ்க்கைக் கொடுத்தாரோ, அது நல்லபடியாவே நடந்தது, நடக்கப்போகிறது.

ஆமென்.

– மகாதேவன் CM