முந்தின நாள் கவின் – சாக்ஷி – லியா பஞ்சாயத்தே இன்னும் முடியவில்லை. சாக்ஷியிடம் பேச வேண்டுமெனக் கவின் பாத்ரூம் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார். சாக்ஷி உள்ளே உட்கார்ந்து அழுது கொண்டே இருக்கார். ஷெரின் சமாதானப்படுத்தி கூட்டிக் கொண்டு போகிறார். அப்பவும் கவின் அங்கேயே இருக்கிறார். ‘நீ எனக்காக வெயிட் பண்ணாத. போய் சாப்புடு’ எனச் சொல்லிவிட்டுப் போனார் சக்ஷி. கோவமாக இருந்தாலும் பாசமாக இருக்காங்களாம்.
அடுத்து 9 மணிக்கு மேலே சாக்ஷி பாத்ரூம் ஏரியா வர அங்கே வைத்துப் பிடித்துக் கொண்டான். மறுபடியும் அதே ப்ளா ப்ளா, ஆனால், ‘ஒரு தடவை ட்யூப்ல இருந்து வெளியே வந்த பேஸ்ட் மறுபடியும் உள்ள போகாது கவின்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றார் சாக்ஷி. அதே நேரத்தில், அந்த பக்கம் லியா பாட்டு பாடி ஜாலி பண்ணிக் கொண்டிருந்தார். வெளியே சோகமாக வந்த கவின் நேரா லியா அருகே போய் அமர்ந்தார். ‘மறுபடியும் முதல்லேர்ந்தா?’ என மைண்ட் வாய்ஸே சத்தமாகக் கேட்டது. ‘நான் தெளிவா இருக்கேன். நீ சாக்ஷி கிட்ட பேசு, அவளைச் சமாதானப்படுத்து, எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. எங்கூட கதைக்க வேணாம்’ எனச் சொன்ன லியா, கிட்டத்தட்ட 1.40 மணி வரைக்கும் கவின் கூடக் கதைத்துக் கொண்டிருந்தார்.
‘பொண்டாட்டி ராஜ்யம்’ என்றொரு படம் இருக்கு. அதில் சித்ரா ஒரு கேரக்டர் பண்ணிருப்பார். ‘பாகி, ஒரு நிமிஷம் உள்ள வாயேன்’ எனக் கூப்பிட்டார் என்றால், அங்கே மந்திரம் ஓதப்போறார் என்று அர்த்தம். ரேஷ்மா இப்ப அப்படி தான் இருக்கார். கூட ஷெரின் வேற. வேப்பிலை அடித்துக் கொண்டே இருந்தார். 12.30 மணிக்கு எழுந்து வெளியே வந்த சாக்ஷி இவங்க இரண்டு பேரும் பேசிக் கொண்டிருக்கிறதைப் பார்த்து விட்டு உள்ளே போகிறார். இரண்டு பேரும் பக்கத்தில் பக்கத்தில் படுத்துக் பேசிக் கொண்டிருக்காங்க என அங்கே போய் பற்ற வைத்தார்.
சாக்ஷி, பயங்கர இன்செக்யூராக இருக்காரெனத் தெரிகிறது. அதீத கற்பனை இருக்கு. மற்றவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அர்த்தம் கண்டுபிடித்து, அதில் தன்னைச் சம்பந்தபடுத்திக் கொண்டு, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விட்டு மேலும் சிக்கலை பெரிதாக்கிக் கொண்டே இருந்தார். அபியை விட்டு விலகவும் இதே தான் காரணம். இப்போ கவின். இந்தப் பிரச்சினைகள் எல்லாமே முழுக்க முழுக்க அவங்க கற்பனையில் உருவாக்கிக் கொண்டதுதான். பின் அதை மறப்பதே இல்லை. இன்னிக்கு தேதிக்கு பிக் பாஸ் வீட்டில் பயங்கர டிப்ரஷனில் இருக்கிற ஒரு நபர் சாக்ஷியாகத்தான் இருப்பார். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், உண்மை என்னவென்று தெரிந்து கொள்ள சாக்ஷி நினைப்பதே இல்லை. ஆரம்பத்தில் இருந்தே இப்படித்தான் இருக்கார். லொஸ்லியாவுக்கு அதிகமாகக் கைதட்டல் கிடைத்ததைப் பார்த்துதான், கவின் அவர் பக்கம் சாய்ந்துவிட்டாரென யோசித்து முடிவுக்கு வருவதெல்லாம், ஏலியன் லெவல் திங்கிங். சாக்ஷி யுனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட் என்பது ஒரு கூடுதல் தகவல்.
நாள் 25
‘ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க’ என கவினுக்காகப் பாட்டைப் போட்டார் பிக் பாஸ். நேற்றே குறிப்பிட்டது போல், பிக் பாஸின் மொத்த போகஸும் கவின் மேல் தான். லியாவும் சாண்டியும் தான் ஆடிக் கொண்டிருந்தனர். சாக்ஷி உள்ளே ஆடிக் கொண்டிருக்க, கவின் எழவே இல்லை. வெளியே சாண்டி கவுண்டமணியோட ட்ரேட் மார்க் ஸ்டெப்ஸ் போட்டு ஆடிக் கொண்டிருந்தார்.
டைனிங் டேபிளை க்ளீன் பண்ணவில்லையென, சாக்ஷிக்கும் மீராவுக்கும் சண்டை. ‘நானே பண்ணுவேன், எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை, ஏன்னா நானும் தான் கேப்டன்’ என புது ரூட்டில் போய்க் கொண்டிருந்தார் மீரா.
தர்ஷனுக்காக ஷெரின் ஒரு ஆர்ட்டின் சப்பாத்தி போட, அங்கே வந்த லியா கத்தியை எடுத்து அதைக் குத்திவிட்டுச் சென்றார். ‘ஏம்மா இப்படி?’ எனக் கேட்க, ‘ஆமா நான் அப்படித்தான், இன்னொரு சப்பாத்தி போட்டா மறுபடியும் குத்துவேன்’ எனச் சொன்னார் லியா. டைனிங் டேபிளில், ஷெரினும் தர்ஷனும் ஒரே தட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, கொலை காண்டில் பார்த்தும், பார்க்காத மாதிரி லியாவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒரு புதுப்பகை உருவானது.
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாகச் செயற்பட்ட இரண்டு பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்ன போது, தர்ஷனையும் ரேஷ்மாவையும் தேர்ந்தெடுத்தனர். ஓவர் ஆலாக நல்லா பெர்ஃபாமன்ஸ் கொடுத்த நபருக்கு சேரன், சரவணன் இடையே போட்டி வந்தது. கடைசில சரவணன் செலக்ட் ஆனார். சோ இவங்க மூன்று பேரும் தான் அடுத்த வார தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்.
வொர்ஸ்ட் பெர்ஃபாமர் பற்றி அறிவிப்பு வந்த போது, மீரா தன்னை செல்ஃப் நாமினேஷன் பண்ணிக் கொண்டார். லக்சரி பட்ஜெட்ல கிடைத்த பாயிண்ட்ஸில், 100 பாயிண்ட்ஸ் மைனஸ் ஆகக் காரணம் சாக்ஷி தான். அதனால சாக்ஷி பேரையும் சொல்லவேண்டும்னென சேரன் சொல்ல, அதை சாக்ஷியும் ஏத்துக் கொண்டார். மீரா, சாக்ஷி இரண்டு பேரும் ஜெயிலுக்குப் போக வேண்டுமெனத் தீர்ப்பு கொடுத்தார் பிக்பாஸ். சாக்ஷி ரொம்ப ஜாலியாக உள்ளே போனார். உண்மையிலேயே, கைதி உடையில், லைட்டான மேக்கப்பில், சாக்ஷி ரொம்ப அழகாக இருந்தார். ஷெரினும், ரேஷ்மாவும் மொத்தமாக அங்கேயே டேரா போட்டு ஜாலி பண்ணத் தொடங்கினர்.
இதைப் பார்த்துக் கடுப்பான மீரா, ‘எனக்கு தலைவலிக்குது’ என பாத்ரூமுக்குள் போய் 1மணி நேரமாக வெளிய வரவே இல்லை. சேரனும் சாண்டியும் கவலைப்பட, மெதுவாக வெளியே வந்தார் மீரா. வந்தவர் கேமிரா முன்னாடி நின்று, மறுபடியும் அடுத்த பஞ்சாயத்துக்குத் தயாரானார்.
அடுத்து சாக்ஷியை அழைத்து, மறுபடியும் பழைய பஞ்சாயத்து பேசத் தொடங்கினர். ‘நீ என்னை லூசுனு சொன்ன. என்னைத் திட்டின’ எனச் சொல்ல, ‘ஆமா ஒரு லூசை லூசுனு தான் சொல்ல முடியும்’ என சாக்ஷி பதிலடி கொடுத்தார். எப்பவும் போல சாக்ஷியைப் பேசவே விடாமல், அவர் மட்டும் பேசிக் கொண்டே இருந்தார் மீரா. உச்சபட்ச எரிச்சல் தருணங்கள். அம்மணி பாத்ரூமில் அமைதியாக அமர்ந்து மனப்பாடம் செய்து கொண்டு வந்திருப்பார் போல.
இதை பாத்ரூம் ஏரியாவில் இருந்து கேட்ட கவின், பயங்கர ஹாப்பி அண்ணாச்சி ஆனார். ‘ஆமா, எத்தனை நேரம் என் தலையவே உருட்டுவாங்க?’ என கவின் அடித்த கமெண்ட் பிக் பாஸுக்குத்தான்.
– மகாதேவன் CM