Shadow

பிக் பாஸ் 3 – நாள் 30

காலையில் வெளிய வந்து பார்த்த ஹவுஸ்மேட்ஸ் எல்லாருமே திகைத்துப் போய்விட்டனர். அட்டகாசமான கிராமிய செட் போடப்பட்டிருந்தது. ‘ஆஹா இன்னிக்குப் பெருசா ஒரு டாஸ்க் கொடுக்கப் போறாங்க, நிறைய கன்டென்ட் கிடைக்குமென நம்பி உட்கார்ந்தேன். அதற்கேற்ற மாதிரி டாஸ்க்கும் வந்தது. வீட்டை இரண்டு அணியாகப் பிரித்து, இரண்டு கிராமமாக மாற்றினர். இந்த இரண்டு கிராமத்துக்கும் ஒத்துக்காது, எப்பொழுதும் சண்டை. வீட்டில் இருக்கின்ற கிச்சன் ஏரியாவுக்கு, மதுமிதா தலைவி, பாத்ரூம் ஏரியாவுக்கு சேரன் தான் தலைவர். இந்த அணியைச் சேர்ந்தவங்க அடுத்த ஏரியாவுக்கு போகனும் என்றால் அவங்க சொல்ற டாஸ்க் செய்யவேண்டும்.

பிக் பாஸ் ஒவ்வொருவரையாக அழைத்து, கேரக்டர் எப்படிச் செய்யணுமெனச் சொல்லிக் கொண்டிருந்தார்.

சேரன் – ஊர் நாட்டாமை
மீரா – மகனை கைக்குள் வைத்துக் கொள்ளும் தாய்
தர்ஷன் – அம்மாவுக்கு அடங்கின பையன், ஆனா பொண்டாட்டி மேல பாசமாக இருப்பவர்
ஷெரின் – கணவன், மாமியாருக்கு அடங்கின மருமகள்
மதுமிதா – ஊர் தலைவி
ரேஷ்மா – கையில எது கிடைத்தாலும் திருடவேண்டும்
முகின் – வீட்டில் எலி, வெளியே புலி
அபிராமி – புருசனை அடக்கி ஆளவேண்டும்
லோஸ்லியா – வாயாடி பெண்
கவின், சாண்டி – வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள்
சாக்‌ஷி – சங்கத் தலைவர்
சரவணன் – ஊர் சண்டியர், ப்ளே பாய்.

தர்ஷனுக்கு பொண்டாட்டி ஷெரினெனச் சொன்ன உடனே ‘டபுள் ஓக்கே பிக் பாஸ்’ எனச் சொல்கிறார். ஆஹா, என்னய்யா நடக்குது அங்க? ஷெரினுக்கு வெட்கமே வந்துவிட்டது.

‘அம்மா கிட்ட வந்து பொண்ணு கேளு’ எனச் சொன்ன மீராவை தர்ஷனுக்கு அம்மாவா மாத்திவிட்டனர். பிக் பாஸ் அணியிலேயும் மீரா மேல் காண்டான ஒருவர் இருப்பார் போல!

அபிராமியையும், முகினையும் இப்பவே சேர்த்து வைத்துவிட்டனர். சாக்‌ஷி தலைவர் என்றால் சாண்டி அவங்க கூட தான் இருக்கவேண்டும். லோஸ்லியா எப்பவும் போல கையைக் காலை ஆட்டிக் கொண்டு, பாட்டு பாடிக் கொண்டு சுத்தச் சொல்லிவிட்டனர்.

ஏற்கெனவே நெருக்கமாக இருப்பவர்கள் இந்த டாஸ்கில் இன்னும் நெருக்கம் ஆவார்கள். அதீத நெருக்கமே பிரச்சினையைக் கொடுக்குமென ஐடியா செய்துள்ளனர். அது வொர்க் அவுட் ஆகுமா எனப் பார்ப்போம்.

இத்தனை பேருக்கும் கேரக்டர் டிசைன் பண்ணி, அதுக்கு ரூல்ஸும் போட்டு, செட் போட்டு எல்லாம் பண்ணி என்ன பிரயோசனம்? மல்டி ஸ்டார்ஸை வைத்துப் பண்ணின மணிரத்னம் படம் மாதிரி ப்ளாப் ஆகிப்போனது தான் மிச்சம். ஏதாவது நடக்குமென காதைத் தீட்டி வைத்துக் கொண்டு உட்கார்ந்தால், யார் என்ன பேசறாங்க என்று கூடப் புரியாத அளவுக்கு ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தனர்.

எவ்வளவோ அழகாகப் பண்ணிருக்கலாம். ஆனா மொத்த பேரும் ஒரே இடத்துல இருந்து பேசினால் எப்படி இருக்கும்? அபி சொன்ன ஃபிஷ் மார்க்கெட் மாதிரி தான் இருந்தது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜய் சேதுபதியிடம் விசாரிக்கும் பசுபதி நிலைமை போல் ஆகிவிட்டது பார்வையாளர்கள் நிலைமை. கடைசி வரைக்கும் ஒன்றும் நடக்கவில்லை.

Bigg boss - Day 30

சாண்டி, ஷெரின் கையைப் பிடித்து இழுத்துட்டானென ஒரு பஞ்சாயத்து. விசாரித்த நாட்டாமை, ‘இடது கையைத்தானே புடிச்சு இழுத்தான்? இன்னொரு கையையும் புடிச்சு இழுத்தா சரியா போய்டும்’ எனத் தீர்ப்பு கொடுத்தார். இந்த மாதிரி கோக்கு மாக்காக நடந்துகிட்டாலே போதும். ஆனால் ஆளாளுக்குக் கத்தி, கலாட்டா பண்ணிக் கொண்டிருந்தனர்.

கடைசியில் மீராவுக்கும் சேரனுக்கும் பஞ்சாயத்தாக முடிந்தது. இரண்டு பேருக்கும் ஏற்கனவே ஏதோ வாய்க்கால் தகராறு இருக்கும் போல. அது என்னவென்று தெரியவில்லை.

இந்த மீரா வேற, தனக்கு மட்டும் ஜோடி கொடுக்காமல் விட்டுட்டாங்களே எனக் காண்டாகி, சாண்டியை ரூட் விட்டுக் கொண்டிருந்தார். ‘உன்னைப் பார்த்தாலே பத்திட்டு வருது’ என தர்ஷனுக்குச் சொல்கின்ற மாதிரி மீராவுக்குச் சொன்னார். ஆனாலும் கண்டுக்கவில்லை மீரா.

மதுமிதா, ரேஷ்மா மட்டும் தான் கொடுத்த கேரக்டராவே மாறி நல்லா பண்ணினார்கள். சாண்டி கூட, ‘ஆய், ஊய்’ எனக் கத்தினதோடு சரி. ஏதாவது செய்து எங்களைக் காப்பாற்றியிருக்க வேண்டிய சாண்டியே இப்படிப் பண்ணினால், பின் எங்கே போய் முறையிடுவது?

கையைப் பிடித்திழுத்த பஞ்சாயத்து நீண்டு கொண்டே போனதால், இரண்டு அணியும் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். ஆனால் அதற்குள் நேற்றைய நாளே முடிந்துவிட்டது. ரசித்துப் பார்க்க சில மொமெண்ட்ஸ் இருந்தாலும், எல்லாரும் சேர்ந்து கத்தியே கெடுத்துவிட்டனர்.

ஷெரினும், லியாவும் புடவைல அழகாக இருந்தார்கள். இந்த வாரம் ஃபுல்லா இதே தான் டாஸ்க். நாளைக்காவது ஏதாவது நடக்குமா எனப் பார்ப்போம்.

மகாதேவன் CM