Search

பிக் பாஸ் 3 – நாள் 31

Bigg-boss-day-31

காலையில், லியாவும் மீராவும் கோலம் போட்டுக் கொண்டிருக்க, கவின் கருமமே கண்ணாக தன் கடமையைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே பேசிப் பேசி தான் இம்புட்டு பிரச்சினையும். இன்னுமும் அதையே தான் பண்ணிக் கொண்டிருந்தார். காலையில் முதல் டாஸ்க்காக சாண்டி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கு மாடு மேய்க்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். இப்படி பாடாவதி எபிசோட்ஸ் பார்த்து தினம் ரீவியூ எழுதுவதற்கு, ‘நீ போய் மாடு மேய்க்கலாம்டா’ என சிம்பாலிக்காகச் சொன்ன மாதிரி இருந்தது. எருமை மாட்டை எப்படி மேய்க்க வேணுமெனச் சொல்லிக் கொடுத்த சாண்டி, மீராவை எருமையாக்கி ஓட்டிக் கொண்டிருந்தார். சாண்டி ஒருநாள் மீராவிடம் மாட்டுவார். அன்னிக்கு இந்த மேட்டர் பேசப்படும்.

லியாவும் மீராவும் போட்ட கோலத்தை அலங்கோலம் பண்ணிக் கொண்டிருந்தாரு சாண்டி. ‘வருக, நல்வரவு’ என எழுதிருந்ததை, ‘வாந்தி, நல்வாந்தி’ என மாற்றியது மீரா கவனத்துக்கு வர, அவங்க வந்து அதை மாற்றிக் கொண்டிருந்தார்.

டாஸ்க் பஸ்ஸர் அடித்தவுடனே, முதல் பஞ்சாயத்தே கோலத்தை மாற்றி எழுதினது தான். நேற்று மாதிரியே ஆளாளுக்குப் பேசி சீனை டோட்டலாக வேஸ்ட் பண்ணிக் கொண்டிருந்தனர். ஒரு வழியாக சாண்டி மன்னிப்பு கேட்க வேண்டுமெனத் தீர்ப்பு வந்தது. இது நடக்கும் போதே லியா, நாட்டாமையின் சொம்பைத் திருடிக் கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டுத் திரும்ப வரும்போது சேரன் கண்டுபிடித்து விட்டார். ‘என் சொம்பைத் திருடிட்டா’ என அடுத்த பஞ்சாயத்து. ‘நான் எடுக்கல’ என லியா அடம்பிடிக்க, சொம்பு திரும்பக் கிடைக்கின்ற வரைக்கும் லியாவைக் கட்டிக் போட வேண்டுமெனத் தீர்ப்பு கொடுத்தார் நாட்டாமை.

வெயிலில் லியாவைக் கட்டிப்போட, அங்கு கவினுக்கு நரம்பு புடைத்தது. ‘ஒருத்தரை வெயிலில் கட்டிப் போடுவதும், பாத்ரூம் போக விடாமல் செய்வதும் தான் டாஸ்க்கா? இது தான் நகைச்சுவையா?’ எனக் கேட்க, சேரனிடம் சரியான பதில் இல்லை. ஆனால், ‘ஊர் பெரிய மனுஷனை மதிக்க மாட்டேங்கறீங்க’ என நாட்டாமை கேரக்டராகக் கத்திக் கொண்டிருந்தார் சேரன். சாக்ஷி, கவின், சாண்டி ஆகியோர் தான் நாட்டாமைக்கு மரியாதை கொடுப்பதே இல்லை. அவர்களைத்தான் கத்திக் கொண்டிருந்தார். இடையில ரேஷ்மா வர, அதே டோனில் ரேஷ்மாவிடமும் பேச, முடிந்தது கதை. சேரன் அவருக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரைச் சரியாகப் பண்ண முடியாமல், நாட்டாமையாக இருந்தும் யாரையும் கன்ட்ரோல் பண்ண முடியவில்லை என்கிற ஆதங்கத்திலேயும் கத்தியது அவருக்கே வினையாக முடிந்தது.

காணாமல் போன சொம்பைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார் முகின். உடனே லியாவின் கட்டை அவிழ்த்து விட ஓடினார் கவின். அப்பவும் சேரன், ‘நான் சொல்றேன் வெயிட் பண்ணுடா’ எனக் கதறிக் கொண்டிருந்தார்.

டீ குடிக்க உள்ளே போன ரேஷ்மாவுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. ‘இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்லு, இங்க இருக்கறவங்களேயே நீதான்டா ஃபூலூ’ என சேரனைப் பார்த்து சொல்லவேண்டுமென டாஸ்க் கொடுத்த உடனே, ஏற்கனவே சேரன் மேல மசக்கடுப்பில் இருந்த ரேஷ்மா, மமகிழ்ச்சியாகப் போய், சேரனைப் பார்த்து சொல்லிவிட்டு வந்தார். இந்த கிராமத்தில் எல்லாம் அதீத கோபத்தில் பெண்கள் மண்ணை வாரித் தூற்றி சாபம் கொடுப்பாங்களே, கிட்டத்தட்ட அதே உடல் மொழி இருந்தது ரேஷ்மாவிடம். காரணம் பர்சனல் கடுப்பு. சேரனுக்கு ஒன்றுமே புரியாமல் முழித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு டயலாக் சொன்ன ரேஷ்மா, குறைந்தபட்சம் இது டாஸ்க் என ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்திருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் இங்கே, ஈகோவும், பழிவாங்கற குணமும் தான் அடிப்படையாக இருக்கு.

‘எதற்கு இப்படிப் பேசி விட்டுப் போறாங்க?’ என ரேஷ்மாவிடம் கேட்க, ‘நீங்க மட்டும் எங்க்கிட்ட கத்துனீங்க இல்ல? எதுக்கு கத்துனீங்க?’ எனப் பிரச்சினையை ஆரம்பித்தார். சேரன் ரேஷ்மாவைத் திட்டவில்லை, நாட்டாமை கேரக்டராகச் சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தார். அதை பர்சனலாக எடுத்துக் கொண்டு பஞ்சாயத்து பண்ணிட்டிருந்தார் ரேஷ்மா. “எனக்குக் கொடுத்த கேரக்டருக்குத் தகுந்த மாதிரி நடந்துகிட்டேன், அது வேணும்னு செய்யல, தவறா இருந்தா மன்னிச்சுடுங்க” என மூன்று தடவை சொல்லியும், அதை காதிலேயே வாங்கவில்லை ரேஷ்மா. திருப்பித் திரும்பி அதையே தான் பேசிக் கொண்டிர்ந்தார். வயதில் பெரியவர் ஒருத்தர் வந்து மன்னிப்பு கேட்கும் போது மரியாதை நிமித்தமாகவாவது, ‘சரிங்க ஓக்கே’ எனச் சொல்வது தான் முறை. அதைக் கூட செய்யவிலை ரேஷ்மா. சேரன் போனதுக்குப் பின்பும் அதையே தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஏற்கெனவே சொன்ன மாதிரி மன்னிப்பு கேட்பது இந்த வீட்டில் ஒரு ஃபார்மாலிட்டி அவ்வளவு தான். கேட்கிறவங்களும் அதை முழு மனதோடு கேட்பதில்லை, சில சமயம் அப்படிக் கேட்டாலும், சம்பந்தபட்டவங்களும் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்வதே இல்லை. வந்த முதல் நாள் ஷெரினைப் பார்த்து, ‘குண்டாயிட்டீங்களே!’ என சரவணன் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதை ஞாபகம் வைத்திருந்து, இரண்டாவது வாரம் சரவணனை நாமினேஷன் பண்ணியதற்கு, ‘குண்டுன்னு சொல்லி என்னை ஹர்ட் பண்ணிட்டாரு’ என்பதைக் காரணமாகச் சொன்னார் ஷெரின். கிட்டத்தட்ட இங்க எல்லோரும் அப்படித்தான் உள்ளனர்.

தவறு எல்லாரும் தான் செய்கின்றனர். ஆனால் இங்கே மேட்டர், அப்படித் தவறு செய்தவர் நமக்குப் பிடித்தவர்களா, பிடிக்காதவங்களா என்று தான் பார்க்கறோம். பிடித்தவர்களாக இருந்தால் சாரி சொல்லக்கூடத் தேவையில்லை. பிடிக்காதவர்களாக இருந்தால் ஆயிரம் சாரி கேட்டாலும் நடந்த விஷயத்தை மறக்கறதுக்கு நாம் தயாராக இல்லை. அபிக்கு மீராவைப் பிடிக்காது, ஆக, மீராவை எந்த விதத்திலும் மன்னிக்கத் தயாராக இல்லை. சரவணனுக்குச் சேரனைப் பிடிக்காது, ஷெரினுக்கு மது, மீரா இரண்டு பேரையும் பிடிக்காது. இங்கேயும் அடிப்படையில் ரேஷ்மாவிற்குச் சேரனைப் பிடிக்கவில்லை. சேரன் செய்தது தப்பென்றால், ஆங்காரத்தோடு ரேஷ்மா பேசியதும் தப்பு தான். சாட்சியாக வந்த லியா கூட, ‘இது டாஸ்க் தான்’ என சேரனிடம் சொல்லாமல் போனது ஏனெனத் தெரியவில்லை. பிடிக்காத மருமகள் கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என எதையும் மறக்காமல் மனதைக் குப்பைத் தொட்டியாக்கி வைத்துள்ளோம்.

சேரன் அந்தப் பக்கம் போய் விரக்தியாகச் சிரித்துக் கொண்டடிருந்ததைப் பார்க்க கஷ்டமாகத்தான் இருந்தது. போதும் சார். வந்துவிடலாமே!

இந்தப் பிரச்சினை சூடு குறைவதற்குள், அடுத்த எரிமலை வெடித்தது. பாத்ரூம் போவதற்கு வந்த மதுவிடம், முகத்தில் பேஸ்ட் தடவிக் கொள்ளச் சொன்னார் சாக்ஷி. அதற்கப்புறம் மாரியம்மா பாட்டுக்கு ஆடச் சொன்னார் சாண்டி. அதையும் ஏத்துக் கொண்டு ஆடத் தயாரானார் மது. ஆனா ஹெவியாக ஆட வேண்டுமென டீஸ் பண்ணிக் கொண்டே இருந்தார் சாண்டி.

கழிவறைக்குப் போக முடியாத உடல் உபாதை, முகத்தில் பூசப்பட்ட பேஸ்ட் தந்த எரிச்சல், ஏற்கெனவே பலமுறை தன் உயரம் குறித்து கிண்டல் செய்யப்பட்ட தருணங்கள், இப்படி எல்லாம் சேர்ந்து மது கோபத்டதின் உச்சிக்குப் போய் விட்டார். அவருக்குள் இப்படி ஒரு எரிமலை இருக்குமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். நொடிக்கு நொடி அவங்க கோபம் ஜெட் வேகத்தில் ஏறிக் கொண்டிருந்தது. பயங்கர ஹைப்பர் ஆன மது அழுகை, கோபம், ஆற்றாமை எனக் கலவையான உணர்ச்சிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார். ஆனால் கண்டிப்பாக அது நடிப்பு இல்லை.

ஒரு வழியாகக் கோபம் குறைந்து, சாண்டி வந்து மன்னிப்பு கேட்டு, மதுவைச் சிரிக்கவும் வைத்தார். இது நடந்து கொண்டிருக்கும் போதே, மீரா சிரித்துக் கொண்டிருந்ததை எத்தனை பேர் கவனித்தனரெனத் தெரியவில்லை. இந்த இடத்ததில் ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

கோலப் பஞ்சாயத்துல நாட்டாமை சரியாக நடந்து கொள்ளவில்லை என ஃபீல் பண்ணிய மீரா, ‘ஊர்த்தலைவியிடம் சொன்னாலும் எதுவும் நடப்பதில்லை, அவங்க எப்படிச் சாப்பிடறாங்க என நானும் பார்க்கறேன்?’ எனச் சரவணனிடம் சொல்ல, அவரும் ‘நீயே டாஸ்க் கொடும்மா’ என ஒத்து ஊதினார். இதைப் பார்த்த மது, ‘மைனர் எப்படி அப்படிச் சொல்லலாம்?’ எனக் கேட்கவும், சரவணனும் மீராவை அதட்டினார். ஆனால் மீரா கேட்கவே இல்லை. ‘நான் கொடுக்கின்ற டாஸ்க்கில் யாரும் சாப்பிடவே கூடாது’ எனப் பேச, அங்கேயே மது டென்ஷன் ஆனார். ‘தலைவி நான் இருக்கும் போது நீ யாரு டாஸ்க் கொடுக்க?’ என ஆரம்பித்த மது, அபியை அழைத்து, ‘தலைவிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு போய் ஆப்பிள் சாப்பிடும்மா’ என மீராவின் மூக்கை உடைத்தார். டைமிங்கில் சரவணன், ‘எனக்கும் ஒரு ஆப்பிள் வேணும்மா’ என மதுவுக்கு முத்தம் கொடுக்க வந்ததுஅக்மார்க் லந்து.

ஆக, இந்த டாஸ்க் எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது நன்றாகவே நடந்தது. இப்போதைக்குத் தற்காலிகமாக டாஸ்க் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வந்தது.

மதுவைப் பற்றி சரவணன், கவின், சாண்டி பேசிக் கொண்டிருக்கும் போது, மீரா பேசியதைக் கேட்டு சரவணன் கொடுத்த ரியக்ஷன் அல்டிமேட்.

மகாதேவன் CM