Shadow

பிக் பாஸ் 3: நாள் 74 | வனிதா: பற்ற வைக்கும் வத்திக்குச்சியா? நஞ்சைக் கக்கும் விஷப்பூச்சியா?

bigg-boss-3-day-74

முந்தைய நாள் – ஷெரினும் தர்ஷனும் பேசிக் கொண்டிருந்தனர். தர்ஷன் கூட இணைத்து தன்னைப் பற்றி வனிதா பேசிக் கொண்டே இருப்பது ஷெரினுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதைப் பற்றி தர்ஷனிடம் நேராகப் பேசி க்ளியர் பண்ணிக்க நினைக்கிறார் ஷெரின். சில வாரங்களுக்கு முன்னாடி சாண்டியும் கவினும், ஷெரின் பெயரைச் சொல்லி தர்ஷனை கிண்டல் பண்ணினது ஞாபகம் இருக்குமென நினைக்கின்றேன். அதில் இருந்து தர்ஷனும் கொஞ்சம் விலகி தான் இருக்கார். இது ஷெரினுக்கும் தெரிந்திருக்கு, தர்ஷனும் அதைத் தான் சொல்கிறார். ஒரு மெச்சூர்ட் கான்வர்சேஷன், ரொம்பவும் ஆர்டிபிஃஷியலா இல்லாமல் இயல்பாக இருந்தது. பார்க்கவே நன்றாக இருந்தது. தர்ஷனால் தன்னைக் கண்ணுக்கு நேராகப் பார்த்துப் பேச முடியவில்லை எனத் தெரிந்து கொண்ட ஷெரின் முகத்தில் ஒரு வெட்கப் புன்னகை இருந்துகொண்டே இருந்தது. ‘எனக்கும் உனக்கும் நடுவுல ஒன்னும் இல்லை; ஒரு நல்ல ப்ரெண்ட்ஷிப் நமக்கு நடுவுல இருக்கு; அது அப்படியே இருக்கட்டும்’ என இரண்டு பேருமே முடிவு செய்கின்றனர். அவங்க இரண்டு பேருக்கும் ஒரு குழப்பமும் இல்லை.

“அந்த சாக்லேட் பேப்பரைக் கீழ போடுறியா? நான் வேணா வேற ஒரு சாக்லேட் தரேன் உனக்கு” எனச் சொன்னது பேரழகு.

ஷெரின் சில சமயங்களில், தர்ஷன் கூட நெருக்கமாக இருந்தது உண்மை தான். நமக்கும் அது காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இயல்பான, எதிர்பாலினம் மீது வரக்கூடிய கவர்ச்சி தான். ‘சுத்தியும் இத்தனை கேமரா இருக்கு’ என கன்ட்ரோல் பண்ணிக்கிட்டாலும், அந்த மனநிலை வெளிப்பட்டே தீரும். இரண்டு பேரும் கண்ணாலேயே பேசிக் கொண்ட அந்தத் தருணங்கள் செம்ம லவ் ஃபீல் கொடுத்ததும் உண்மை. கிட்டத்தட்ட ஒரு மூட் ஸ்விங் மாதிரி. ஒரு தகுதியான ஆணான தர்ஷன் மேல் ஈர்ப்பு உண்டானது உண்மை தான் என ஷெரினும் ஒத்துக் கொள்கிறார். இரண்டு பேருக்குமே தங்களின் எல்லை தெரியும், விளைவுகள் தெரியும். ஆக, சேரன் சொன்ன மாதிரி நட்புக்கு மேல், காதலுக்குக் கீழ் என ஒரு விவரிக்க முடியாத உணர்வு. அந்த மூட்ஸ்விங்கில், டிஸ்டர்ப் ஆன போது தான் தர்ஷனைப் பற்றியும், அவர் தனக்குள் ஏற்படுத்துகின்ற தாக்கத்தைப் பதல்யும் வனிதா, சாக்‌ஷியிடம் பகிர்ந்தார். ஆனால் அதில் இருந்து வெளியே வந்து சாதாரணமாக இருக்கவும் அவருக்குத் தெரிந்திருக்கு.

இது சாதாரணமான ஆண், பெண்களுக்கு இருக்கறது தான். ஒரு ஆபிஸில் இரண்டு பேர் மட்டும் பயங்கர க்ளோசாக இருப்பார்கள். எப்பவும் ஒன்றாக இருப்பார், எந்த விஷயமாக இருந்தாலும் அவன் / அவள் கிட்ட கேட்கவேண்டுமெனச் சொல்லுவாங்க. சில சமயம் அவங்களுக்கும் சேர்த்து முடிவு எடுக்க கூடிய அளவுக்கு வேவ்லென்த் இருக்கும். இரண்டு பேரையும் புரிந்து கொண்டவர் கண்ணுக்கு அது தப்பாகத் தெரியாது. ஆனால் அதுவே வெளியே இருந்து பார்க்கிறவர்களுக்கு அது காதல் போல் தெரியும். இங்கேயும் அது தான் நடந்தது.

நாள் 74

தினம் ஒருத்தர் சமையல் திட்டத்தின்படி ஷெரின் தான் டிஃபன் செய்யவேண்டும். தாமதம் ஆனதால், ப்ரேக் ஃபாஸ்ட்டை மோகன் செய்துவிட்டார். இதைப் பற்றி வனிதா கேட்க, ஏற்கனவே தர்ஷனையும் தன்னையும் இணைத்து பேசினதால், வனிதா மேல் காண்டில் இருந்த ஷெரின் ஆரம்பத்திலேயே டென்ஷனாகத்தான் பேசினார். கேம், ஃபோகஸ், டிஸ்ட்ராக்ட் என்கிற வார்த்தைகளைக் கேட்ட உடனே இன்னும் காண்டாகிப் பேச, அந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாக மாத்திக் கொண்டார் வனிதா.

உண்மையில் நேற்று வனிதா பேசினது, போகிறப் போக்கில் பேசி சரி பண்ண வேண்டியது. “ஏம்ப்பா நேத்து நைட் டின்னர் செய்ய நீ வரல? உன்னால முடிலன்னு முன்னாடியே சொல்லிட்டா கொஞ்சம் வசதியா இருக்கும். எல்லாருக்கும் லேட்டாகுது, பார்த்துக்கோ” எனச் சொல்லிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்ல. அதற்கு யாரும் சண்டைக்கு வரப்போறதில்லை. ஆனால் வனிதா நேற்று பேசினதெல்லாம் வொர்ஸ்ட்.

பேசினதோடு இல்லாமல், ‘நான் ஏன் பேசினேன்?’ என விளக்கம் வேற கொடுத்து கொல்லுகிறார். ‘உனக்குப் புரியுதா நான் சொல்றது? உனக்குப் புரியவே மாட்டேங்குது நான் சொல்றது!’ என்ற விதம் மாறாமல் பேசி கழத்தை அறுக்கிறார்.

ஒரே விஷயத்தை 10, 15 தடவைக்கும் மேல திருப்பித் திருப்பிச் சொல்லி மனதில் பதிய வைத்து, கடைசியில் அதை உண்மையென நம்ப வைக்கின்ற டெக்னிக். சோஷியல் மீடியாவில் நடக்கின்ற விஷயம் தான். அதை தான் வனிதாவும் செய்கிறார்.

ஏற்கெனவே கொதிநிலையில் இருந்த ஷெரிமிடம் மறுபடியும் விளக்கம் கொடுக்கறேன் எனப் போக, ஷெரின் தன்னோட நிலையைத் தெளிவாகச் சொன்னார். ‘தர்ஷனுக்கும் எனக்கும் இருக்கிற ரிலேஷன்ஷிப்பைப் பத்தி யாரும் பேசாதீங்க. யாருக்கும் ரைட்ஸ் கிடையாது’ என கட் & ரைட்டாகச் சொல்லிவிட்டார். அப்பவும் கேட்காமல் வனிதா அதையே பேசிக் கொண்டிருக்க, அங்க வந்த சேரனும், ஷெரினோட மன நிலையைத் தெளிவாக எடுத்துச் சொல்லியும் கேட்காமல் திரும்பப் பேச, அங்கிருந்து நகர்ந்து போறார் சேரன்.

பேசிட்டிருக்கும் போதே, ‘Affair’ என ஒரு வார்த்தையை வனிதா சொல்ல, அதைக் கேட்டு எரிமலையாக வெடித்துவிட்டார் ஷெரின். Affair வார்த்தைக்கு நேரடி தமிழ் அர்த்தம் பார்த்தோம் என்றால் விவகாரம், சங்கதி, தொடர்பு, ரகசியக் காதல் என இப்படி நிறைய அர்த்தங்கள் வருகின்றது. ஆனால் இந்த இடத்தில் ஒரு ஆணையும், பெண்ணையும் குறிப்பிட்டுச் சொல்வதால், இதைத் தவறான பொருள் தருவதாகத்தான் எடுத்துக் கொள்ளமுடியும். அப்படிப் பேசுவதற்கு வனிதாவுக்கு எந்த உரிமையும் கிடையாது.

வனிதா கூட சண்டை போட்டவர், வெடித்துஅழ ஆரம்பிக்கிறார். ‘வனிதா ஏன் இதைப் பேசவேண்டும்? ஒருவேளை நாம நடந்துகிட்டது வெளியே அப்படி போர்ட்ரெயிட் ஆகியிருக்கா? யாருமே நம்ம சப்போர்ட்டுக்கு வர மாட்டேங்கிறாங்க? நாம பர்சனலா சொன்ன விஷயத்தை ஏன் பொதுவுல பேசறாங்க? நாம உண்மையிலேயே தப்பு செஞ்சுட்டோமா?’ என பல கேள்விகளுக்கு நடுவில், ஷெரினை யாராலேயும் கன்ட்ரோல் செய்ய முடியவில்லை.

சாக்‌ஷி ஒரு பக்கம் மொக்கைத்தனமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆன்னா ஊன்னா, ‘நான் வெளிய பார்த்துட்டு வந்துருக்கேன்’ எனச் சொல்கிறார். தெலுங்கு பிக் பாஸ் பார்த்துவிட்டு வந்திருப்பார் போல! ‘வனிதாக்கா சொல்றதைக் கேளு, வனிதாக்காவை எதிர்த்துப் பேசாத, அவங்க நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க’ என்பதெல்லாம் உச்சபட்ச எரிச்சல். இதனிடையில், ‘குரைக்கிற நாயைப் பத்தி நமக்கென்ன?’ என சாக்‌ஷி கேட்டது வனிதாவைப் பற்றி இல்லையாம். ஓட்டு போடுகின்ற மக்களைப் பற்றியாம். விளங்கிடும்.

தர்ஷன் பேச வந்தால், ‘உனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை நீ வராத!’ எனச் சொன்ன பொழுது தான் வனிதா ஒரு அரை வேக்காடு என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. ஸ்ஸப்பா…

இவ்வளவு நடந்தும் பாய்ஸ் டீமில் இருந்து ஒருத்தரும் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பிரச்சினை முடிந்ததுக்கு அப்புறமும், ஷெரினை வந்து பார்த்து என்னவென்று கேட்கவில்லை. அல்லது அவர்கள் கேட்டு, இன்னும் நமக்குக் காட்டவில்லையோ எனத் தெரியவில்லை. சேரன் மட்டும் தான் வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இலிலிருந்து உடனே மீண்டு வருவது கஷ்டமென அவருக்கும் தெரியும்.

அதோடு அப்படியே முடித்துவிட்டனர். இன்றாவது பாய்ஸ் டீம் மிக்சர் தட்டை கீழ வைக்கிறார்களா எனப் பார்ப்போம்.

மகாதேவன் CM