சித்தார்த் ட்ராஃபிக் போலீஸாக நடிக்கிறார் என்பதால், சிக்னல் கம்பத்தில் ஒளிரும் மூன்று வண்ணங்களை, நில், கவனி, செல் என்ற நேரடி குறியீட்டுத் தலைப்பாகக் கொள்ளலாம். உட்பொருளாக, மாமன் மச்சானுக்குள்ளான மோதலைச் சிவப்பாகவும், சமாதானம் ஆவதை மங்கலக்கரத்தைக் குறிக்கும் மஞ்சளாகவும், ஒன்று சேருவதைச் செழுமையின் நிறமான பச்சையோடும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
படத்தின் முதற்பாதி அசரடிக்கிறது. காரணம் குழந்தைகள். பெற்றோரை இழந்த ஒரு பள்ளிச் சிறுவன் தன் அக்காவின் வகுப்புக்குச் சென்று, அக்காவின் வகுப்பு ஆசிரியையிடம், ‘பூனைக்கு நான் தான் அப்பா, அவ தான் எனக்கு அம்மா. இனி நான் தான் அவள் ரேங்க் கார்டில் சைன் போடுவேன்’ எனச் சொல்லும் பொழுதே பார்வையாளர்கள் க்ளீன் போல்ட். ஒரே ஒரு காட்சியின் மூலம் முழுப் படத்துக்கும் ஜீவன் கொடுத்துவிடுகிறார் இயக்குநர் சசி.
அச்சிறுவர்களின் அத்தையாக யூ-ட்யூப் நக்கலைட்ஸ் புகழ் தனம் நடித்துள்ளார். அவரது அழகான கொங்கு பாஷையின் மூலமாக மட்டுமல்லாமல், ஒரு கதாபாத்திரமாகப் படத்தில் வாழ்ந்து படத்திற்கு மேலும் அழகு சேர்க்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷும், அக்காவாக லிஜோமோல் ஜோஸும் கச்சிதமான தேர்வுகள். படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கான நடிகர்களைக் கச்சிதமாகத் தேர்வு செய்துவிட்டாலே, படம் பாதி வெற்றி என்பதற்கு இப்படம் ஓர் உதாரணம்.
விறைப்பாகவும், அதே அளவு க்யூட்டாகவும், ஏற்ற பாத்திரத்திற்குச் செம பொருத்தமாய்த் திரையில் ஜொலிக்கிறார் சித்தார்த். அதே போல், முதிர்ச்சியற்ற, பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட, லைசென்ஸ் எடுக்காத பொறுப்பற்ற இளைஞன் பாத்திரம், ஜி.வி.பிரகாஷுக்காக நெய்தது போலவே உள்ளது. தம்பியைத் தவிர வேறொன்றும் விரும்பாத அக்காவாக லிஜோமோல். முதற்பாதி, பார்வையாளர்கள் மேல் செய்யும் மேஜிக்கிற்கு இவர் ஒரு முக்கிய காரணம். கணவருக்கும், தம்பிக்கும் இடையில் ஊசலாடும் அவரது தவிப்பே மொத்தப் படமும். தொட்டாசிணுங்கி ரேவதி டீல்ஸ் சேம் பிராப்ளம். ஆனால் அதில் கணவர் சந்தேகப்பிராணி; இங்கே தம்பி முதிர்ச்சியற்ற முன்கோபி, அக்காவையே துரோகியாகப் பார்ப்பவன்.
ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் கிடைக்கவில்லை என்றாலும், ‘தம்பியின் மீதான பாசத்திற்காகத் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்’ என்ற மெச்சூர்டான முடிவை லிஜோமோல் எடுக்கக் காரணமாக உள்ளார். இது ஒன்று போதாதா? குறைவு எனினும் காஷ்மீராவின் இருப்பு, அழுத்தமாய்ப் படத்தில் பதிந்துவிட்டது.
ஆனால், இவை அனைத்தும் முதற்பாதியிலேயே தான். இதனோடு ஒப்பிட்டால், இரண்டாவது பாதி ஒரு மாற்றுக் குறைவுதான். மாமன், மச்சானுக்கான எமோஷனல் உரசல்கள் தான் படத்தின் கரு. அதைச் சிதைப்பதற்கு என்றே படத்தில் ஒரு வில்லன் வருகிறார். படத்தொகுப்பாளர் சான் லோகேஷ், மனசாட்சியே இல்லாமல் க்ளைமேக்ஸை அப்படி இழுத்து முடிக்கிறார். முடிவின் நெகிழ்வை இரட்டிப்பாக்கும் நடிப்பும் ஜி.வி.க்கு கைவரவில்லை. ‘ஃபீல் குட் க்ளைமேக்ஸ்’ என்ற நோக்கத்திற்காகப் பார்வையாளர்களின் பொறுமையைச் சற்று அசைத்துப் பார்த்து விடுகின்றனர். படத்தின் தொடக்கமே ‘ஃபீல் குட்’ தான் என்பதால், ‘போதும்ய்யா சாமீ’ என்று பார்வையாளர்களைக் கதறவிட்டே படம் முடிகிறது. க்ளைமேக்ஸ் சண்டையே நீளம், அதற்கு இடையில், சுற்றியுள்ள ஆபத்தைப் பொருட்டுபடுத்தாமல், சித்தார்த்தும் – ஜி.வி.யும் ஆற அமரத் தங்களுக்குள்ளான பஞ்சாயத்தைப் பேசியே தீர்க்கின்றனர். பைக் ரேஸ் காட்சிகளும் சரி, சண்டைக் காட்சிகளும் சரி, இன்னும் கொஞ்சம் சுவாரசியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். வசனத்தில் RX 100 பைக் எனச் சொல்லிவிட்டு, RX 135 பைக்கைக் காட்டுகின்றனர்.
பலரின் உயிரைக் காவு வாங்கும் பைக் ரேஸ் தவறு என அழுத்தமாகப் படம் சொல்லத் தவறியிருந்தாலும், ‘பெண் உடையில் அப்படியென்ன அசிங்கத்தைக் கண்டீர்கள்?’ என்ற ஒற்றை நேர்கொண்ட கேள்வியைப் படத்தில் வைத்ததற்காக இயக்குநர் சசிக்குப் பிரத்தியேக பாராட்டுகள். இக்கேள்வியைப் படத்தில் கேட்பது, சித்தார்த்தின் அம்மாவாக நடித்துள்ள தீபா ராமானுஜம். அம்மா சென்ட்டிமென்ட்டால் பிச்சைக்காரன் ஓடி, அவருக்குத் தற்காலிக புகழைத் தேடித் தந்திருந்தாலும், இந்த ஒரு வசனப்பதிவு சமூக நோக்கியலில் முக்கியமான ஒரு சாட்சியாக என்றென்றும் தீபாவிற்குப் புகழினை நல்கும்.
காலாவதியாகி விட்டதாகக் கருதப்படும் அம்மா சென்ட்டிமென்ட், அக்கா – தம்பி பாசம் போன்று மென் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு படமெடுத்து அசத்துகிறார் சசி. பிச்சைக்காரன் போல் இப்படமும் சசிக்கு நல்லதொரு படமாய் அமையும்.