Shadow

பிக்பாஸ் 3 – நாள் 9

ஓ மை டார்லிங் பாடலுடன் ஆராவாரமாக ஆரம்பித்தது நாள். நடனம் ஆடுவதில் யாருக்கும் ஆர்வம் இல்லையெனச் சொன்னது யாருக்குக் கேட்டதோ இல்லையோ பிக்பாஸுக்குக் கேட்டுவிட்டது. நேற்று டோஸ் கொடுத்துருப்பாரு போல். இன்று சரவணன் வரைக்கும் எல்லாரும் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

காலை முதல் டாஸ்க் லெட்டர் வந்தது. மது மத்த ஹவுஸ்மேட்ஸ்க்கு மோட்டிவேசன் ஸ்பீச் கொடுக்கனும். ‘லொஸ்லியா நல்லா பாடுவார்; அவருக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்க வேண்டும்’ என வந்தது. அதே மாதிரி தான் மற்றவர்களுக்கும். ஆனா பிரச்சினை வரவேண்டும் என்றே மதுவுக்கு இதைக் கொடுத்த மாதிரி இருக்கு. ஆரம்பத்துலேயே, ‘என்னை விடப் பெரியவங்க இருக்கிறாங்க. அதனால் எனக்குத் தெரிந்ததை சொல்றேன்’ என டிஸ்கியோட ஆரம்பித்தார்கள். எதிர்பார்த்த மாதிரி எதை எதையோ பேசிட்டு இருந்தாங்க. ஒரே விஷயம் தான். மதுவுக்குக் கொடுத்த தலைப்பில் என்ன பேசனும் என்று சுத்தமாகத் தெரியவில்லை. வழக்கம் போல வனிதா முதல் ஆளா, “ஏய் இப்ப நீ என்ன சொல்ல வர்ற?” என ஆரம்பிக்க, அதுக்கு மது விளக்கம் கொடுக்க, இடையில் சேரன் உள்ள புகுந்து கரெக்‌ஷன் சொல்ல, மத்த ஹவுஸ்மேட்ஸும் ஆளாளுக்கு ஒன்று பேச, டென்ஷனான மது, ‘காலையில எந்திருச்சு பல்லு விளக்குங்க, முக்கியாம கக்கா போங்க, குளிக்க மறக்காதீங்க’ என பாதையை மாற்றி, ‘சாவுங்கடா’ எனச் சொல்லி முடித்துக் கொண்டார்

அதாவது, ‘நான் ஒரு கண்டிப்பான குடும்பத்தில் இருந்து வந்தவள். சினிமாவிற்கு நடிக்க வரும்போது, அங்க அப்படி இருக்கணும், இப்படி இருக்கணும் எனச் சொன்னார்கள். ஆனா எனக்கு அப்படியான பிரச்சினை வந்ததில்லை. ஆரம்பத்துல நான் யாரிடமும் பேச மாட்டேன், ஆடியோ பங்ஷனுக்குப் போக மாட்டேன், பார்ட்டீஸ்க்கும் போக மாட்டேன். அதுக்கப்புறம் மத்தவங்க எல்லாரும் சொல்லி என்னை நான் நிறைய மாத்திக்கிட்டேன்’ என்பதுதான் அவங்க சொல்ல வந்ததின் சாராம்சம். (ஏம்பா நான் சரியா தான் பேசுறேனா? )

ஆனா இதை அவர் தொடங்கி முடிப்பதற்குள், ஒரு பிரளயமே நடந்தது நேத்து. இந்த வனிதா தன்னை இன்னும் ஒரு தலைவராகப் பாவித்துக் கொண்டுள்ளார். தனக்குச் சம்பந்தமே இல்லாத விஷயம் என்றாலும் தலையிட்டு, அந்தப் பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கி விட்டு தானும் டென்ஷனாகி, சுத்தி இருக்கறவங்களையும் கதற விடுகிறார். கிட்டத்தட்ட, சீசன் 2வின் காயத்ரியாக மாறிக் கொண்டு வருகிறார்கள் எனச் சொல்லலாம். வீட்டுக்குள்ளேயும் அதே பிரச்சினை தொடர்ந்தது. மது தாலியைக் கழட்டி வைத்து விட்டு வந்ததைச் சுட்டிக் காட்டி பேசினதை எல்லாம் எந்த கேட்டகிரில எடுத்துக் கொள்வது என்றே தெரியவில்லை. ஆன்னா ஊன்னா கேரக்டர் அசாசினேஷன் என்று சொல்கிறார் . ஆனா வனிதாவும் நேத்து அதை தான் பண்ணார். பேச்சு ஆடியோ பங்ஷனுக்குப் போகமாட்டேன் எனச் சொன்னதுக்குத் திரும்பியது. ‘அதெப்படி நீ அப்படி சொல்லலாம்? சம்பளம் வாங்கற இல்ல, நம்ம படம் அது, நம்மளோட கடமை அது!’ என வனிதா சாக்‌ஷியிடம் பேசிக் கொண்டிருந்தார். பல சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்த இரண்டு பேர் பேசுகின்ற மாதிரியே இருந்தது. ‘உன் கருத்த மற்றவர்கள் மேல் திணிக்காதே’ எனச் சொல்ற வனிதா, அதையே தான் அடுத்தவங்களுக்குச் செய்கிறார்.

முகின், கவின், லொஸ்லியா இவங்கெல்லாம் பாத்ரூம் ஏரியால நின்று இதையே பேசிக் கொண்டு இருந்த்ந்னர். ‘மதுவிற்கு சொல்லத் தெரில, அவங்களை முழுசாவும் பேச விடலை’ என முகின் சொன்னதை கவினும் ஆமோதித்தார்.

அடுத்த ஹவுஸ்மேட்ஸ் நாலு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, இந்த வார லக்சரி பட்ஜெட்டுக்கான டாஸ்க் ஆரம்பிச்சது. சிங்கம் டீம் சார்பா வனிதாவும், அவருக்கு டாஸ்க் படித்துக் காட்ட மோகனும் உள்ள சென்றனர். ஒரு சின்ன பொருட்களை ஏத்திட்டு போகிற கைவண்டி ஒன்று இருந்தது. இதில் என்ன செய்வது என யோசிக்கும் போதே ஒரு பீம்பாய் வாழைப்பழத் தாரோட உள்ளே வந்து, டாஸ்க் லெட்டரைக் கொடுத்துட்டு, அந்த கைவண்டியில் உட்கார்ந்து கொண்டார். அந்த கைவண்டியை அந்த நபரோட சேர்த்து கைப்பிடியை அழுத்திப் பிடித்து, மேலே தூக்கி, பஸ்ஸர் அடிக்கும் வரைக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்பது தான் டாஸ்க். ஆரம்பத்தில் வாய்ப்பே இல்லை எனச் சொன்ன வனிதா, கொஞ்ச நேர முயற்சிக்குப் பின் அந்த டாஸ்க்கைச் சூப்பராகச் செய்து முடித்து, 1000 பாயிண்ட் பெற்றார். இதை மத்த ஹவுஸ்மேட்ஸ், உள்ளே இருந்த திரையில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்ததாக தர்ஷன், சாக்‌ஷி. அவர்களுக்கு டாஸ்க் படித்துக் காட்ட மீராவும் உள்ளே சென்றனர். துண்டு துண்டுகளாக இருக்கிற அட்டைகளைச் சரியாகச் சேர்த்து முழுமையான ஓர் உருவம் கொண்டு வரவேண்டும். பஸ்ஸர் அடித்த உடனே பேச ஆரம்பித்த மீரா, மறுபடியும் பஸ்ஸர் அடித்த உடனே தான் நிறுத்தினார். தர்ஷன், சாக்‌ஷி ரெண்டு பேரும் அந்த டாஸ்கில் தோல்வி அடைந்தனர். இதை பார்த்துக் கொண்டு இருந்த ஹவுஸ்மேட்ஸ், அப்பவே மீராவைத் திட்டத் தொடங்கினர். வெளிய வந்த உடனேயே கவின் மீராவோட தவறைச் சுட்டிகாட்ட, மீராவோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு, ‘நான் அப்படி செஞ்சதால தான் இந்த அளவுக்காவது வந்தது’ என பிடிவாதம் காட்ட ஆரம்பித்தார். யார் சொல்லியும், அவங்க பண்ணினது தப்பு என மீரா ஒத்துக் கொள்ளவே இல்ல. மோகன் ஏதோ சொல்ல வர, எப்பவும் நோஸ்கட் பண்ற மாதிரி மீரா பேச, மோகனுக்குக் கோபம் வந்தது. ‘வயசுக்கு மரியாதை கொடுத்துப் பேசு’ எனக் கத்த, அந்த இடமே அமைதியாகிறது.

அடுத்து மீராவிடம், யார் இதைப் பற்றிப் பேசினாலும், தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் தான் என படுபயங்கர பிடிவாதமாக இருந்தார். ஒரு மரியாதைக்குக் கூட மற்றவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் எனக் கேட்பது கூடக் கிடையாது. அப்புறம், ‘எல்லாரும் என்னை ஒதுக்கி வைக்கறாங்க’ என அழ வேண்டியது. அப்பக்கூட ஆறுதல் சொல்பவர் பேச்சையும் கேட்பதில்லை. மீராவைச் சமாதானப்படுத்த வந்த மோகன், ‘என் பொண்ணு மாதிரி’ எனச் சொல்லிக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததை எல்லாம் எந்த வகையில சேர்க்கிறது எனத் தெரியவில்லை. இதைப் பற்றி பெண்கள் கருத்து சொல்வது தான் சரியாக இருக்கும்.

மீராவுக்கும், முகினுக்கும் ஏதோ பிரச்சினை. 3 நாளா முகின் கிட்ட பேசவே இல்லையாம். மத்தவங்க எல்லாம் சேர்ந்து தனக்கு எதிராக சதி பண்ணி, தன்னிடம் இருந்து எல்லோரையும் பிரிக்கிறார்கள் என்றொரு புகார் மீராவுக்கு. ‘எனக்குன்னு சொந்தமா அறிவிருக்கு, யார் சொல்றதையும் கேக்கணுங்கிற அவசியம் எனக்குக் கிடையாது’ என முகின் சொல்ல, வழக்கம் போல சுற்றிச் சுற்றி ஒரே விஷயத்தைப் பேசிக் கொண்டிருந்தார் மீரா. முகின் எழுந்து போனதுக்குப் பின், லொஸ்லியா, மீரா, மது மூன்று பேரும் பேசுகிறார்கள். அப்பவும் லொஸ்லியா சொல்வதை மறுத்துப் பேசுகிறார் மீரா.

அதே சமயம் உள்ளே போன சாக்‌ஷியிடம் இந்த சந்திப்பு பற்றிப் போட்டு கொடுக்கறார். மறுபடியும் அபியைப் பத்தி தான் பேசறதாகவும், முகினை என் கிட்ட பேசவிடாம செய்யறதாகவும் சொல்ல, வனிதா சந்திரமுகியாக ஆரம்பித்தார். இங்க ஒன்று பேச, அங்க ஒன்று பேச, ஸ்ப்பா.. இடையில அபி வேற வந்து, ‘5 நிமிஷம் ஆகுமா எனக்கு கரெக்ட் பண்ண’ எனக் கேட்டது முகினுக்கா இல்ல வேற யாருக்காவதா எனத் தெரியவில்லை. அப்படியே முடிந்தது இந்த நாள்.

இரண்டு அணியும் பேசுவதை மாற்றி மாற்றி கட் பண்ணிக் காட்டிய எடிட்டருக்கு ஷொட்டு;

என்ன சொன்னாலும், என்ன கையை பிடிச்சு இழுத்தியா வடிவேலு ரேஞ்சுல பதில் சொல்லும் மீராவுக்கு ஒரு குட்டு;

அப்பப்போ அட்டகாசமா பாடி சூழ்நிலையை இலகுவாக்கும், கவின் முகின், சாண்டி குரூப் தான் ஹிட்டு.

– மகாதேவன் CM