Shadow

உலகக்கோப்பை அரையிறுதிக்குள் இந்தியா

ind-vs-ban-rohit

இந்தியா – வங்கதேசம் மோதும் போட்டிகள் என்றாலே இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டாம் தான். கடந்த சில ஆண்டுகளாக இந்தியா – பாகிஸ்தான் ரசிகர்கள் மோதல் இல்லாத குறையை இந்தியா – வங்கதேசம் தான் தீர்த்து வருகிறது.

ரசிகர்கள் மட்டுமில்லாமல் வீரர்களும் அவ்வப்போது இந்த ஆட்டத்தில் கலந்து கொள்வர்கள். 2016 டி20யில் இந்தியா அரையிறுதியில் தோற்றவுடன், இன்று நிம்மதியாகத் தூங்குவேன் என் முஸ்தபிஷர் ரஹிம் ட்வீட் போட்டது, ரன் ஓடும்போது குறுக்க வந்த முஸ்தபிஷர் ரஹ்மானை தோனி இடித்து தள்ளியது என பல ரகளையான சம்பங்கள் கடந்த சில வருடங்களாக நடக்கிறது. இந்தியாவிற்கு எதிராக 2007 உலகக்கோப்பையில் பெற்ற வெற்றிக்குப் பின் எந்த ஐ.சி.சி. போட்டிகளிலும் வங்கதேசம் இந்தியாவை வென்றதில்லை. 

கடந்த சில போட்டிகளில் ரசிகர்களின் கடும் விமர்சனத்தைச் சந்தித்த இந்திய அணியில் இரண்டு மாற்றாம் செய்யப்பட்டது. ஜாதவிற்கு பதில் தினேஷ் கார்த்திக்கும், குல்தீபிற்குப் பதில் புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர். தினேஷ் கார்த்திக்கிற்கு இது தான் முதல் உலகக்கோப்பைப் போட்டி, சுவாரசியமாக இன்று விளையாடிய அணியில், இந்தியாவிற்காக சர்வதேச அணியில் விளையாடிய முதல் வீரரும் அவர் தான்.

டாஸ் வென்ற கோலி போட்டிங்கைத் தேர்வு செய்ய, ராகுலும் ரோகித்தும் களமிறங்கினர், முர்தசா வீசிய முதல் ஓவரிலயே சிக்ஸ் அடித்து தன் கணக்கை துவங்கினார் ரோகித். போன போட்டியில் கடைசி ஓவரில் தான் இந்தியா தன் முதல் சிக்ஸை அடித்திருந்தது. இந்தப் போட்டியில் முதல் ஓவரிலயே சிக்ஸர் என்பதால் ரன் மலை போல் குவியும் என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ராகுல் மறுமுனையில் தனது ஆமை வேகத்தில் ஆரம்பித்தார்.

ஐந்தாவது ஓவரில் ரோகித் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தமீம் இக்பால் தவற விட்டார். கண்டிப்பாக இன்னிக்கு ரோகித் சதம் அடிப்பார் என ரசிகர்கள் உற்சாகம் கொண்டணர். காரணம் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இதே போல் கேட்ச் கண்டத்திலிருந்து தப்பிய ரோகித் சதம் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருமுறை ரன்-அவுட்டில் தப்பிய ரோகித் சதமடித்தார். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் ரூட், ரோகித் கேட்சைத் தவற விட அதிலும் சதமடித்தார்.

முதல் பவர் ப்ளே முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 69 ரன்களைக் குவித்தது. 15வது ஓவரில் ரோகித் தன் அரை சதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து ராகுலும் பத்தென்பதாவது ஓவரில் தன் அரை சதத்தை நிறைவு செய்தார். 22 ஓவரில் பௌண்டரி அடித்து, இந்த உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்தார். அதற்கு முந்தைய ஓவரில் அடித்த சிக்ஸ் மூலம் இந்தியாவிற்காக சர்தேச ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் இந்த உலகக்கோப்பையில் தன் நாலாவது சதத்தைப் பதிவு செய்தார். ஒரு உலகக்கோப்பையில் அதிக சதமடித்த வீரர் என்ற சங்ககாரா சாதனையை சமன் செய்தார். ஒரு உலகக்கோப்பையில் இந்திய வீரர் அடித்த அதிக சதமும் இது தான்.
இன்னும் நிறைய ஓவர் இருக்கு, ரோகித்திடம் இன்னொரு இரட்டை சதத்தை எதிர்பார்க்கலாம் என்று நம்பின நிலையில் ரோகித் 104 ரன்னில் வெளியேறினார்.

ராகுல் 77 ரன்னில் வெளியேற, கோலி – பன்ட் ஜோடி சேர்ந்தது. 36 ஓவரில், கோலி பந்தை அடித்து விட்டு இரண்டு ரன் ஓடி முடிக்க, சம்பந்தமே இல்லாமல், வங்கதேச கேப்டன் முர்த்தசா ரெவ்யூ கேட்க, எதுக்கு என யாருக்கும் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் நேரம் முடிந்து விட்டதென நடுவர் பிரச்சனையை முடித்து விட்டார்.

நல்ல தொடக்கம், கோலி – பன்ட் இணையும் நல்லா விளையாடுகிறார்மள், கண்டிப்பாக 350+ வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 39வது ஓவர் வீச ரஹ்மான் வந்தார். இரண்டாவது பந்தில் கோலி அவுட். தொடர்ந்து ஐந்து அரை சதம் அடித்த கோலி 26 ரன்னில் வெளியேறினார். அடுத்து பாண்டியா களமறிங்க, போன போட்டியில் அவர் ஆடின விதத்தினால் நம்பிக்கை இருந்தது. அவரும் அதற்கு ஏத்த மாதிரி முதல் பந்துக்குப் பிறகு பேட்டெல்லாம் மாத்தினார். ஆனா அடுத்த பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து பூஜ்ஜியத்தில் வெளியேறினார்.

அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக மூன்று பௌண்டரி அடித்து, பன்ட் நம்பிக்கையைக் கொடுத்தார். பின்னர் 48 ரன்னில் வெளியேறினார். அடுத்த களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 8 ரன்னில் வெளியேற, கடைசி ஓவரில் முதல் ரெண்டு பந்தில் சிங்கிளை மறுத்த தோணி, மூன்றாவது பந்தில் 35 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரில் புவனேஷ்வர், ஷமி அவுட்டாக, 350+ என எதிர்பார்க்கபட்ட ஸ்கோர், 314/9 என்றளவில் முடிந்தது.

வங்கதேசம் இந்த உலகக்கோப்பையில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 322 ரன்னை 42 ஓவரில் சேஸ் செய்திருந்தது, ஆஸிக்கு எதிராக சேஸிங்கில் வெற்றி பெறாவிட்டாலும் 338 ரன்களைக் குவித்து ஆச்சிரியபடுத்தியது. அதனால் இந்திய ரசிகர்கள் சற்று கிலியிலயே இருந்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பால், சௌமியா சர்கார் களமிறங்க, அணிக்குத் திரும்பிய புவனேஷ்வர் முதல் ஓவரை வீசினார். ஒரு ரன்னை மட்டும் கொடுத்து அந்த ஓவரை முடித்தார். அடுத்த ஓவரை பும்ரா வீச, அருமையான இரு பௌண்டரிகளை தமீம் இக்பால் அடித்தார். இரு தொடக்க ஆட்டக்காரர்களும் பொறுப்பாக விளையாட, ஷமி இந்த இணையைப் பிரித்தார். பத்தாவது ஓவரில் தமீம் இக்பாலை போல்ட் செய்து வெறியேற்ற, அடுத்து சாகிப் களமிறங்கினார்.

இந்தியாவிற்காக ரோகித்தும், பும்ராவும் செய்யும் வேலையைத் தனி ஒருவனாக வங்கதேசத்திற்கு இந்த உலகக்கோப்பையில் சாகிப் செய்து வந்தார். இரு சதம், இரு அரைச்சதம், பத்து விக்கெட் என மிகச்சிறந்த ஆல்ரவுண்டாராகக் கலக்கி வருகிறார். ஷமி வீசிய பன்னிரெண்டாவது ஓவரில், இந்தியா சௌமியா சர்காருக்கு LBW கேட்க, களநடுவர் மறுத்தார். நீண்ட யோசனைக்குப் பிறகு கோலி DRS எடுத்தார், ரீப்ளேவில் பந்து பேட், பேடில் கிட்டதட்ட ஓரே சமயத்தில் பட்ட மாதிரி தெரிய, மூன்றாவது நடுவர், களநடுவர் தீர்பை மாற்ற முடியாது எனச் சொல்ல, இந்தியா தன் ரீவியூ வாய்ப்பை இழந்தது, கோலி நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இச்சம்பவம் நடக்கும் போது தோனி களத்தில் இல்லை. பன்ட் தான் கீப்பிங் செய்தார். இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் போது, DRS எடுக்க கோலி விரும்ப, தோனி அதனை வேண்டாம் எனச் சொல்ல, ரீப்ளேவில் அது அவுட் எனத் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டியா வீசின முதல் ஓவரில், சௌமியா சர்காரை 36 ரன்னில் வெளியேற்றினார். பின்னர் வந்த ரகீம், சாஹல் பந்துவிச்சில் ஷமியிடம் கேட்ச் கொடுத்து 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து லிட்டன் தாஸ் களமிறங்க, சாகிப் – தாஸ் இணை மேற்க்ய் இந்தியத் தீவுகளுக்கு எதிராகச் செய்த மாதிரி, மீண்டும் சேஸிங்கைச் செய்யுமா என வங்கதேச ரசிகர்கள் ஆர்வமாகினார்கள். சாகிப் 28வது ஓவரில் தன் அரைசதத்தை நிறைவு செய்தார்.

ஒரு ரன், இரண்டு ரன்னாக எடுத்துக் கொண்டிருந்த லிட்டன் தாஸ், பாண்டியா வீசிய முப்பதாவது ஓவரில் முதல் சிக்ஸ் அடித்தார். அதே வேகத்தில் அதே ஓவரில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து 22 ரன்னில் வெளியேறினார். 30 ஓவர் முடிவில் 163/4 என்ற நிலையில் இருக்க, கடைசி 20 ஓவரில் வெற்றிக்கு 152 ரன் தேவைப்பட்டாலும், சாகிப் களத்திலிருப்பதால் வங்கதேசம் நம்பிக்கையுடன் இருந்தது. 33 ஓவரில் முஸ்டாக் ஹூசைனை 3 ரன்னில் வெளியேற்றினார். அடுத்த ஓவரில் பாண்டியா முக்கிய விக்கெட்டான சாகிப்பை வீழ்த்தினார். 66 ரன்னில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் சாகிப் . பேட்டிங்கில் மிஸ் பண்ணியதற்கு, பௌலிங்கில் முக்கிய மூன்று விக்கெட்டை வீழ்த்தினார் பாண்டியா. சாகிப் வீழ்ந்தவுடன், மேட்ச் அவ்வளவு தான் என்று நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது, அடுத்து சேர்ந்த சபீர் ரஹ்மான் – சையீப்புதீன் இணை.

வெற்றிக்கு 16 ஓவரில் 136 ரன் தேவை என்ற சேர்ந்த இந்த இணை, இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது, ஷமி வீசிய 38 ஓவரில் தலா இரண்டு பௌண்டரி அடித்து 17 ரன்களைக் குவித்து, தாங்கள் ஆட்டத்தில் இன்னும் இருக்கிறோம் என இந்திய வீரர்களுக்கு அறிவித்தனர்.

ஒருவழியாக பும்ரா இந்த இணையை 44வது ஓவரில் பிரித்தார். 36 ரன்னில் சபீர் போல்டாகி வெளியேறினார். இந்த இணை ஏழாவது விக்கெட்டுக்கு 66 ரன்களைச் சேர்த்தது. வங்கதேசத்திற்கான அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். கடைசி ஆறு ஓவரில் வெற்றிக்கு 64 ரன்கள் தேவைபட்டது.

அடுத்த களமிறங்கிய கேப்டன் முர்த்தசா, புவனேஷ்வர் குமார் பந்தில் சிக்ஸ் அடித்து, அடுத்த பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், சையிப்புதின் மறுமுனையில் தொடர்ந்து போராடினார். ஒன்பதாவது விக்கெட்டுக்கு, ரூபெல் ஹுசையுடன் சேர்ந்து 29 ரன்களைக் குவித்தார். ஒரு நாள் போட்டியில் தன் இரண்டாவது அரைசதத்தை நிறைவு செய்தார்.

பும்ரா அடுத்தடுத்து போல்ட் மூலம் ரூபெல், முஸ்தபிஷுர் ரஹ்மானை வெளியேற்ற வங்கதேச ஆட்டம் 286இல் முடிவுக்கு வந்தது. 28 ரன்னில் இந்தியா வெற்றி பெற்றது. தோல்வியடைந்தாலும் கடைசி வரை போராடிய வங்கதேசம், ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்தது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. வங்கதேசத்தின் அரையிறுதி கனவு தகர்ந்தது.

– இராஜேஷ் ஜெயப்பிரகாசம்