Shadow

பிக் பாஸ் 3: நாள் 92 | கவினை ஏன் யூத்களுக்குப் பிடிக்கிறது?

Bigg-boss-3-day-92

கவினை இத்தனை பேர் வெறுக்கிறதுக்கு காரணம் தான் என்ன? இந்த சீசன் ஆரம்பித்த முதல் சில வாரங்கள் கடந்ததுக்கு அப்புறம் கவின்-சாண்டி கூட்டணி தான் செம்ம ஹிட். பாடல் வரிகளை மாற்றிப் போட்டுப் பாடி, செம்ம ஜாலியாக இருந்தார். பார்க்கிறதுக்கும் நல்லாருந்தது. அதற்கப்புறம் தான் சாக்‌ஷியோட ஒரு லவ் எபிசோட் ஓடியது. அப்பவும் யாரும் வெறுக்கவில்லை. அதெப்படி ஒரே வாரத்தில் காதல் வருமெனக் கேட்டவர்கள் கூட, அந்த எபிசோட்ஸை என்ஜாய் பண்ணிருப்பார்கள். அப்புறம் தான் பாய்ஸ் டீம் உருவானது. அப்பவும், தினசரி அத்தியாயத்தில் ஸ்ட்ரெஸ் பஸ்ட்ரே பாய்ஸ் டீம் தான். ஒரு பக்கம் சாண்டி அல்டிமேட் எண்டர்னெயினராக இருக்க, இன்னொரு பக்கம், எவிக்சன் வந்தா பாட்டு பாடி அனுப்பி ஜாலி பண்ணிட்டு இருந்தார்கள்.

அதற்கப்புறம் தான் கவின் பாதையில் லாஸ்லியா வருகிறார். சாக்‌ஷி கூட ஒரு ட்ராக் ஓடிக்கொண்டு இருக்கும் போதே, இந்தப் பக்கம் லாஸ் கூட இன்னொரு ட்ராக் ஓட ஆரம்பித்தது. இந்த விஷயத்தில், கவின் மேல் எந்த தப்பும் நான் சொல்ல மாட்டேன். லாஸ் தான் பிளான் பண்ணி சாக்‌ஷியிடம் இருந்து கவினைத் தட்டிப் பறித்தாரென நான் உறுதியாக நம்புகிறேன். ஏன்னா லாஸ்க்கும் கவினைப் பிடித்திருக்கு (நினைவூட்டக்: கவின் போலீஸாக இருந்த டாஸ்க், லாஸை விசாரிக்கும் காட்சி). சாக்‌ஷியை கம்பேர் செய்யும் போது, லாஸ் அவனுக்கு நல்ல தேர்வாகத் தெரிந்ததில் வியப்பே இல்லை. இந்தப் பக்கம் பொறாமையில் இருந்த சாக்‌ஷி, தப்புத் தப்பாகப் பழிவாங்கி, கெட்ட பேரோட வெளியே போகிறார். ‘கன்டென்டுக்கு தான் சாக்‌ஷி கூடப் பழகினேன்’ என பொதுவில் சொல்ல, ‘அடுத்தவங்க உணர்வுகளோட விளையாடாதீங்க’ என கமலும் சொன்னார். அதில் தான் முதல் அதிருப்தி கவின் மேல் வருகிறது.

லாஸ் கூட அதே வார்த்தைகளைச் சொல்லி, ‘நமக்குள்ள எல்லாம் முடிஞ்சுது’ என சொன்னார். ஒரு கட்டத்தில், கவினை விட்டுக் கொடுக்க மனதில்லாமல், ‘சாக்‌ஷி ரிலேஷன்ஷிப்பைப் பத்தி எனக்கு எதுவுமே தெரியாது’ என ஒரே போடாகப் போட்டது லாஸ் மீது அதிருப்தி வர முதல் காரணம்.

சேரனைப் பார்த்து, ‘நீங்க என் அப்பா மாதிரி இருக்கீங்க’ எனச் சொன்னது லாஸ் தான். அதற்கப்புறம் தான், ‘என்னை அப்பான்னே கூப்பிடும்மா’ என சேரன் சொன்னார். 10 வருடமாக தந்தை பாசம் பார்க்காத பெண். அதனால் ஒரு அப்பாவாக அவரும் நடந்து கொள்ள ஆரம்பிக்கிறார். ஆனால் அந்த உறவின் மேல் சந்தேகப்பட்டு, ‘ட்ராமா’ எனச் சொன்ன போது, கவின் மேலான விமர்சனங்கள் இன்னும் அதிகமானது.

அடுத்ததாக க்ரூப்பிசம். 5 பேர் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, குறிப்பிட்ட ஒருத்தரை டார்கெட் செய்ய ஆரம்பித்த போது தான் எல்லோருக்கும் இதோட விபரீதம் புரிய ஆரம்பித்தது. ஒரே காரணத்தைச் சொல்லி 5 பேரும் சேரனை நாமினேட் செய்தது ஞாபகம் இருக்கலாம். கேப்டன் பதவி, யார் ஜெயிலுக்குப் போறது இப்படி எல்லா முடிவிலும், க்ரூப் இன்ஃப்ளூயன்ஸ் இருந்தது. இது எல்லாவற்றிற்கும் மாஸ்டர் ப்ளான் கவின் தான் எனத் தெரிய வந்த போது, அந்த வெறுப்பு அடுத்த கட்டத்துக்குப் போகிறது.

கவின் – லாஸ் காதலிக்கறாங்க என உறுதியாகத் தெரிந்ததுக்கு அப்புறம் யாருமே அதற்குக் குறுக்க நிற்கவில்லை. ‘இங்க வச்சு எதுவும் முடிவு பண்ணாதீங்க. எதுவா இருந்தாலும் வெளிய போய் பார்த்துக்கலாம்’ எனச் சொன்ன சேரனை, இவங்க காதலுக்கு வில்லன் மாதிரி மாற்றி, சீன் போட்ட போது, அந்த வெறுப்பு இன்னும் அதிகமானது. சேரன் மட்டும் இல்லை, சாண்டி, ஷெரின், வனிதா வரைக்கும் இது தேவையில்லை எனச் சொல்லியுள்ளனர்.

இப்பொழுது கடைசியாக, லாஸ் குடும்பம், கவின் நண்பன் வந்துவிட்டுப் போனதுக்கு அப்புறம் நடந்த விஷயங்கள்.

கவின் – லாஸ் பொருத்தமான ஜோடி. அவர்கள் காதலில் நேர்மை இருந்தது என்றால், இங்கே எல்லோருமே கொண்டாடியிருப்பார்கள். காதலே வேணாம் என யாருமே சொல்லவில்லை. ‘கேமரா முன்னாடி காதலிக்காதீங்க, அது தேவையில்லை’ என்று தான் சொல்கிறார்கள். ஆனால் அப்படிச் சொன்னவர்கள் எல்லோரையும் வில்லனாக்கினது கவின் ரசிகர்கள்.

கவின் மேல் தீராத வெறுப்பு வர இன்னொரு முக்கியக் காரணம், கவினோட ரசிகர்கள். இல்லை, ரசிகர்கள் எனச் சொல்லிக் கொண்டவர்கள்.

கவினைத் தூக்கி பிடிக்கவேண்டும் என்கிற ஒரே காரணத்துக்காகச் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் அசிங்கப்படுத்தின போது தான் இந்த வெறுப்பு பல மடங்கு அதிகமானது. கமல், சேரன் வரைக்கும் யாருக்குமே மரியாதையே இல்லாமல், அவங்க அடித்த கமென்ட்ஸ், மீம்ஸ் எல்லாம் சேர்ந்து தான், இன்னிக்கு கவின் மேலான வெறுப்பாக வளர்ந்து நிற்கிறது. இதில் சாண்டி, தர்ஷன், ஷெரின் கூட விதிவிலக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.

கவின் புத்திசாலி. அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தன்னோட சுயநலத்துக்குத்தான், நட்பையும் காதலையும் பயன்படுத்துகிறார் என உறுதியாக நம்புகிறவர்கள் இங்கே அதிகம். நண்பர்களை முன்னிறுத்துகிறேன் என தன்னையும் சேர்த்து தான் முன்னிறுத்திக்கறார். இன்னும் சொல்லப்போனால், அந்த ஒரு விஷயத்தை வைத்து தான் இத்தனை நாள் தப்பித்து வந்திருக்கிறார்.

மேலே சொன்ன எந்த விஷயமும் தப்பே இல்லை என்று தான் கவின் ரசிகர்கள் விவாதம் செய்கிறார்கள்.

அவர்களிடம் இருப்பது ஒரே ஒரு லாஜிக் தான். கவின் செய்தது தப்பென்றால், அவர் ஏன் வெளியே போகவில்லை? அவ்வளவு தான். கவினிடம் இருக்கிறதும் இதே லாஜிக் தான். ‘நான் செஞ்சது தப்புன்னா, மக்கள் என்னை வெளிய அனுப்பிருப்பாங்க இல்லை?’ என கவின் சொல்வதை தான் அவர் ரசிகர்களும் சொல்கிறார்கள். அவர் வெளியே போகவில்லை, அதனால் அவர் தப்பே செய்யாத உத்தமன் என எங்கே சுற்றி எங்கே வந்தாலும், இங்கே வந்து தான் முடியும்.

ஒரு பக்கம் இத்தனை விமர்சனம் இருந்தாலும், கவினுக்கு எப்படி இத்தனை ரசிகர்கள்? அதுவும் டிவிட்டர்ல ட்ரெண்டிங் செய்கின்ற அளவுக்கு!?

முதல் காரணம், லாஸ் சொன்னது தான். ‘நான் தப்பே செஞ்சாலும் அவன் என் பக்கம் நிக்கிறான். அதனால தான் நான் அவன் கூட இருக்கேன்’ எனச் சொன்னது ஒரு பெரிய ஸ்டேட்மென்ட். இது சரியா, தப்பா என்கிற விவாதம் இருக்கட்டும். நட்புக்காக ஸ்ட்ராங்காக நிற்பதை யாரும் தப்பு சொல்லமாட்டார்கள். கர்ணன் – துரியோதனன் நட்பை உதாரணம் சொல்லக்கூட யாராவது வரலாம். ஒரு தவறு நடந்துவிட்டது. ஆனாலும், ‘அவன் என் நண்பன்’ என கவின் நிற்பது இன்றைய யூத்களுக்கு ஜிவ்வென இருக்கு. அதை ஒரு பெரிய விஷயமாக அவங்க பார்க்கிறார்கள்.

ஆனால் தப்பு செய்த நண்பனைக் காப்பாற்ற, தப்பே செய்யாத சிலரை பலி கொடுக்கறோமே என்ற குற்ற உணர்வு யாரிடமும் இல்லை. முகினை ஜெயிக்க வைக்க ஷெரினை காலி பண்ணிவிட்டு, கன்ஃபெஷன் ரூமில் கண் கலங்கினாரே சாண்டி, அதற்குப் பெயர் தான் குற்ற உணர்வு. அது துளி அளவு கூட கவினிடம் இல்லை.

‘என் நண்பன் ஜெயிக்கணும், அதுக்கு நான் தோத்தா கூட பரவால்ல’ எனச் சொல்ற கவினோட ஸ்டேட்மென்ட் இரண்டாவது காரணம். இது ஒரு கேம் ஷோ. இங்கே விளையாட வந்துவிட்டு, ‘நான் அவனுக்காக வந்தேன், இவனுக்காக நிக்கறேன்’ எனச் சொல்றது எல்லாம் போலித்தனம். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் ரசிகர்கள் இல்லை. அவர்கள் கவினை ஒரு தியாகி ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஷெரின் சொன்ன மாதிரி, “இங்கு தியாகம் செய்யப்படும்” என போர்டு மாட்டி செய்வதற்குப் பெயர் தியாகமே இல்லை.

மேலே சொன்ன மாதிரி கவின் புத்திசாலி. தன் மீதான விமர்சனங்களைக் கண்டு பயப்படுவது இல்லை. ‘நான் ஏன் இதைச் செஞ்சேன்?’ என ஆரம்பித்து, விளக்கம் கொடுக்கிறதில் வனிதா ஒரு எண்ட் என்றால், கவின் இன்னொரு எண்ட். பதில் சொல்ல ஆரம்பித்து, நியாயமாக சில பாயின்ட்ஸ் பேசி, தன் மீதான குற்றச்சாட்டின் வீரியத்தைக் குறைக்கிறதில் கவின் பிரில்லியன்ட்.

இந்தத் திறமையால் தான், ‘விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல், அதை நேரிடையாகச் சந்திக்கறான் பாருய்யா’ என்ற இமேஜ் கவினுக்கு கிரியேட் ஆகிறது. சேரன் சொன்ன நேர்மையும் இது தான்.

தான் லைம்லைட்டில் இருக்கவேண்டும், நல்லதோ, கெட்டதோ, தன்னைப் பற்றிப் பேச வேண்டும் என்கிறது தான் கவினோட ப்ளான். இப்பொழுது அதில் முழுதாக ஜெயித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும். அந்த வீட்டில் எனக்குப் பிடித்தவர்கள் வரிசையில் கடைசி இடத்தில் இருக்கிறவருக்கு, இத்தனை பெரிய ரைட்டப் எழுத வைத்ததும் ஒரு வகையில் சாதனை தானே!

பொதுவாக இந்தத் தலைமுறை இளைஞர்களுக்கு, வயதில் மூத்தவர்கள் மேலான மரியாதை என்பது குறைவாகத்தான் இருக்கு. சில இடத்தில் இல்லவே இல்லை. எவ்வளவு பெரிய சாதனைகள் செய்தவராக இருந்தாலும், இன்றைய தேதிக்கு எல்லோருமே கன்டென்ட் தான். அப்படித்தான் டீல் செய்கிறார்கள்.

இதற்குக் காரணமும் சோஷியல் மீடியா தான். அரசியல் காரணங்களுக்காகச் சுயநலத்திற்க்காகத் தனிப்பட்ட வெறுப்பு, இப்படி பல காரணங்களுக்காக, லெஜெண்ட்ஸ் எனச் சொல்கிறவர்களைக் கூடக் கேவலபடுத்துவது சோஷியல் மீடியாவில் சகஜம். வரலாறு தெரியாத அல்லது தெரிந்து கொள்ள விரும்பாத இக்கால இளைஞர்கள், இதையெல்லாம் பார்க்கும் போது, அப்படியான சாதனையாளர்களை, இடது கையில் டீல் செய்ய ஆரம்பிக்கிறார்.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் அப்துல் கலாம் பிறந்த நாள் வரும் போது பாருங்கள். ‘அவர்லாம் ஒரு ஆளா?’ என 20, 22 வயது பசங்க பதிவு போட்டுக் கொண்டிருப்பார்கள். காந்தி, நேரு, ராஜாஜி, காமராஜர், பெரியார், அம்பேத்கர், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெ, ரஜினி என இவர்களுக்கு யாருமே விதிவிலக்கு இல்லை. ‘உன்னைப் பார்த்தா அப்படி ஒன்னும் சாதனை செஞ்சவன் மாதிரி இல்லையே!’ என்று தான் டீல் செய்கிறார்கள்.

அப்படியான இளைஞர்களின் பிரதிநிதியாகக் கவின் இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கவினை நன்றாகக் கவனித்துப் பார்த்தால், ‘ஓ… கமல் சார் பேசுறாரே!’ என்கிற ஒரு அட்டென்ஷன், அவனிடம் இருக்கவே இருக்காது. ‘இப்ப என்ன கமல் பேசறாரா? வெயிட் பண்ணச் சொல்லு வரேன்!’ என்கிற ஆட்டிட்யூட், பாடி லாங்வேஜ் தான் இருக்கும். 4 தேசிய விருது வாங்கின இயக்குநரான சேரனையும், இப்படித்தான் ஜஸ்ட் லைக் தட் ஹேண்டில் செய்தார்.

இதனால் கவினுக்கு இவர்கள் மேல் மரியாதை இல்லையென்று சொல்லவில்லை. இன்றைய யூத்கள் மரியாதை கொடுக்கிறதையே ஒரு மாதிரியான போலித்தனமாகப் பார்க்கிறார்கள். ‘நாங்க சாதாரணமா இருக்கோம். இதுல என்ன தப்பு?’ என அவர்கள் கேட்கலாம். கவினும் அப்படித்தான் இருக்கார். தலைமுறை இடைவெளியினால் ஏற்படும் முரண்பாடுகள்.

இதோட பாசிட்டிவ் பக்கம், வேறெந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு, பிக் பாஸும் இறங்கி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்த ஒரு முக்கியமான காரணம், “நோ சென்டிமென்ட்ஸ்”. ‘நான் நட்புக்காக தியாகம் செய்றேன்’ என கவின் சொன்னாலும், அதை வைத்து சீன் போடவில்லை. போகிற போக்கில், ‘எனக்குத் தோனுச்சுச் சொன்னேன்’ என்று தான் ஹேண்டில் செய்கிறார். இதனால் நமக்கும் மைலேஜ் தான் என அவர் உள்மனதிற்குத் தெரியும். ஆனாலும் அந்த விஷயத்தை ரொம்பவும் சட்டிலாக ஹேண்டில் பண்ணினார் என்று தான் சொல்லவேண்டும். அதை எந்த இடத்திலும் சொல்லிக் காண்பித்துத் தனக்கு ஆதரவு தேடவில்லை. அந்த விஷயம் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதில் ஆச்சரியம் இல்லை.

அந்தக் காரணத்தினால்தான், நமக்கு உணர்வுப்பூர்வமா இருந்த சேரன் – லாஸ் எபிசோட், கவினுக்கு ட்ராமாவாகத் தெரிந்தது. இன்றைய யூத்களுக்கும் அது அப்படித்தான் தெரிந்திருக்கும்.

கவின் மேல் நாம் வைக்கும் விமர்சனங்கள் அனைத்தையும் அவர் ரசிகர்கள் பாசிட்டிவாகப் பார்க்கிறார்கள். இது தான் இத்தனை நாள் அவர் உள்ளே இருக்கிறதுக்குக் காரணமென எனக்குத் தோன்றுகிறது.

நாள் 92

‘டசக்கு டசக்கு’ பாடலுடன் ஆரம்பித்தது நாள். முகின், ஷெரினைத் தவிர, எல்லோரும் நடனம் ஆடினார்கள்.

நாமினேஷன் ப்ராசஸ். வழக்கத்துக்கு மாறாக யாரை காப்பாற்ற வேண்டுமென கேள்வி. லாஸ் கவினைச் சொல்ல, ‘கவினைக் காப்பாத்தணும்னா ஒரு பச்சை மிளகாயைச் சாப்பிடுங்க’ என பிக் பாஸ் சொல்லிட்டார். கூடவே காரணம் கேட்ட போது, கையை ஆட்டி ஆட்டி லாஸ் பேச, ‘இப்ப சொன்னதை கையை ஆட்டாமல் சொல்லுங்க’ என லாஸை கலாய்த்தார்.

தர்ஷன், ஷெரினுக்காகவும், சாண்டிக்காகவும் இரண்டு மிளகாய் சாப்பிட்டார். சாண்டி, கவின், லாஸுக்காக. முகினும், ஷெரின்-சாண்டிக்காக மிளகாய் சாப்பிட்டது டச்சிங். சாண்டிக்குப் பதிலாக வேற பேர் சொல்ல சொன்ன போது, தர்ஷன் பேரை சொன்னது ஸ்வீட். தர்சன், சாண்டிக்காக ஷெரின், ‘சில்லி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு’ எனச் சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்.

எல்லாம் முடிந்ததுக்குப் பின், முகினைத் தவிர எல்லோருமே நாமினேஷனில் இருக்காங்க எனச் சொன்னது அல்டிமேட். செம்ம ஜாலி எபிசோட் இது.

இந்தியா கேட் பாஸ்மதி அரிசி வழங்கிய டாஸ்க். சாண்டி தான் குக். அவன் செய்த புலாவைப் பார்த்துவிட்டு, ‘இனிமே வாழ்க்கையில புலாவே சாப்பிட மாட்டடேன்டா’ என சபதமெடுத்தவர்கள் எத்தனை பேரோ! அதை சாம்பிளுக்கு பிக் பாஸுக்கு வேற அனுப்பி வைத்தார்.

அடுத்ததாக கேப்டன் டாஸ்க். முகின், சாண்டி, கவின் மூன்று பேரும் போட்டி போட்டார்கள். உடம்பு ஃபுல்லா ப்ளாஸ்டிக் ரேப்பரைச் சுற்றிக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் எழுந்து நிற்கவேண்டும். சாண்டி செம்மையாக ட்ரை பண்ணினார். இருந்தும் கவின், சாண்டி உதவியோட எழுந்து நின்று முகின் கேப்டன் ஆனார். சூப்பர் மொமன்ட்.

அடுத்ததாகவும், ஒரு விளம்பர டாஸ்க். குறைந்த தண்ணியில் துணி துவைத்துக் காட்டவேண்டும்.

தப்பு தப்பாக ஆங்கிலத்தில் சாண்டி பாட, அதை தர்ஷன் ரிப்பீட் செய்வதோடு நாள் முடிந்தது.

திங்கள் என்றால் ஒரு கன்டென்டும் கிடையாது என முடிவே பண்ணிவிட்டார்கள் போல.

மகாதேவன் CM