Shadow

பிக் பாஸ் 3: நாள் 91 | வெளுத்தது யார் சாயம்?

day-91 bigg-boss-3-

ஒரு கேள்வி கேட்டால், அதற்கு சம்பந்தமே இல்லாமல் பதில் சொல்றதில், கவின் எக்ஸ்பெர்ட் ஆகிட்டாரென நேற்று எழுதியிருந்தேன்.

‘சாயம் வெளுத்துப் போச்சு’ டாஸ்க் பற்றிப் பேசிக் கொண்டு இருந்த போது, அதிகபட்ச கேள்விகள், கவின்-லாஸ்க்கு தான் இருந்தது. தொலைந்து போனவர்கள் கேள்விக்கு, எல்லோரும் கவின் – லாஸ்க்கு தான் திரவத்தை ஊத்தினர். சேரன் மட்டும் கவின் – முகினுக்கு ஊத்தினார். இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்பது தான் கேள்வியே!

‘இந்த வாரம் நாங்க நல்லா தான் டாஸ்க் செய்றோம். ஆனா சும்மா உக்காந்து பேசினா கூட, அவங்க பேசிட்டு இருக்காங்கன்னு எங்களுக்கு பின்னாடி பேசறாங்க. அதை அழிக்க முடியாது, எங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் வெளிய போனா தான் இது அழியும்’ என லாஸ் பதில் சொன்னார்.

பின்னாடி பேசறாங்க என யாரைச் சொல்கிறார்? சேரனையும் ஷெரினையுமா? அப்படி யாரும் பேசவே இல்லை. இவர்களுக்கே அப்படித் தோன்றியிருக்கு. ‘எல்லோரும் சொல்லியும், நாம இப்படி இருக்கோமே, இதே தப்பைத் திரும்பச் செய்யறோமே!’ என்று வர குற்ற உணர்ச்சி தான் அது.

‘ஒரு மூன்று வாரமாவே நாங்க கேமுக்குள்ள வந்துட்டோம். முட்டை டாஸ்க்குல கூட, மழை வரதுக்கு முன்னாடி, ரெண்டு பேரும் தனித்தனியா தான் இருந்தோம். மழைக்கு அப்புறம் தான், அங்கேயே உக்காந்து விடிய விடியப் பேசிட்டு இருந்தோம். அது கூடத் தூங்காம இருக்கணுமேன்னு தான் அப்படி செஞ்சோம். ஆனா அதுவே பிரச்சினை ஆகுது’ என்றார் கவின்.

இந்த வீட்டில் பேசறதுக்கு லாஸைத் தவிர யாருமேவா இல்லை? இருந்தாலும் கவின் கண்ணுக்குத் தெரிவது இல்லை போலிருக்கு.

சாயம் வெளுத்துப் போச்சு டாஸ்க், இந்த வாரத்தின் இரண்டாவது டாஸ்க், இல்லையென்றால் மூன்றாவதாக இருக்கும். அந்த டாஸ்கில் நடந்ததுக்கு, அதற்கப்புறம் நடந்த விஷயத்தைப் பதிலாகச் சொல்கிறார். ஒருவேளை நேரடியாகப் பதில் சொல்லாமல் இருக்கிறதுக்கும், பிளான் பண்ணி ட்ரெயினிங் எடுத்திருக்காங்களோ என்னமோ.

இந்தப் பதிலைச் சொல்லும் போது, லாஸோட உடற்மொழியைக் கவனித்துப் பாருங்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கிற போது, கன்ஃபெஷன் அறை போய் அழுதுவிட்டு வந்தவர், கிட்டத்தட்ட, டோண்ட் கேர் மூடில் தான் கமல் சாரை எதிர் கொண்டார். இந்தப் பதிலைச் சொல்லிவிட்டு, ஏற்கெனவே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தவர், காலை ஆட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அங்கே பெரிய ஸ்கிரீனில், எல்லோரும் பார்த்து, அப்பவே முணுமுணுப்பு எழுந்தது. கால் ஆட்டுவதெல்லாம் ஒரு மேட்டரா என்றால் இல்லைதான். ஆனால் அந்த அலட்சிய உடல் மொழியோடு, செருப்பு காலை ஆட்டிக் கொண்டு பேசுவது, எதிரில் பேசுகிறவர்களுக்கு அவமரியாதை தான். அது கமலுக்கு மட்டும் இல்லை, மக்களுக்கும் தான்.

பிறகு எவிக்சன் நிகழ்வு தான். அடுத்ததாக கவின் காப்பாற்றப்பட, ரொம்ப கேவலமான ஒரு ரியாக்ஷனை முகத்தில் கொடுத்தார். ஒவ்வொரு வாரமும் இதே ரியாக்ஷன் தான். ‘எனக்கு விளையாடவே விருப்பம் இல்லை, ஏதோ நீங்க சொல்றதால நான் விளையாடறேன்’ எனச் சொல்லாம சொல்கிறாரோ என்னவோ!

நேற்று கவினை, விஜய் படத்துக்கு ஈக்வலாக ட்ரெண்டிங் வேற பண்ணியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு கவின் தகுதியானவரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ப்ளான் போட்டு அடுத்தவர்களை வெளியே அனுப்பினது, அனுதாபத்தையே ஆயுதமாக யூஸ் பண்ணினது, எல்லா வேலையும் பின்னாடி இருந்து செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாத மாதிரி முகத்தை வைத்துக் கொள்வது, எதற்கெடுத்தாலும் நீட்டி முழக்கிப் பேசி டைவர்ட் பண்றது என கவினைப் பிடிக்காமல் போனதுக்கு நிறைய காரணங்கள் இருந்தாலும், இன்றைய இளைஞர்களுக்குக் வினை இவ்வளவு பிடித்துப் போகக் காரணம் என்னவாக இருக்கும் என யோசிக்க வேண்டும். அதைப் பற்றி அவங்க பார்வையில் எழுத முயற்சி செய்து பார்க்கவேண்டும். செய்யலாம்.

அடுத்ததாக சேரன் – லாஸ் இரண்டு பேரையும், எல்லார்கிட்டேயும் சொல்லிவிட்டு, ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு வரச் சொன்னார். லாஸ் பின்னாடியே தான் சுற்றிக் கொண்டிருந்தார் கவின். இரண்டு பேர் போக வாய்ப்பில்லை, ஒருத்தர் திரும்ப வருவாங்க என அப்பவே சாண்டி சொன்னார். இந்த மாதிரி ப்ளானிங் எல்லாம், கவினிடமே கேளுங்க பிக்பாஸ். இன்னும் கொஞ்சம் நல்லாவே இருக்கும்.

சேரனும் – லாஸும் ஆக்டிவிட்டி ஏரியாவுக்குப் போக, அங்கே இருந்த கவரைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார் கமல். சேரன் தான் இந்த வார எவிக்சன். ‘அவருக்குப் பதிலா நான் போலாமா?’ எனக் கேட்டதைப் பார்த்தால், பார்க்கிறவங்களை முட்டாளாக நினைத்துவிட்டார் போல.

சேரன் ஏற்கெனவே நிறைய பேசிவிட்டார். ரொம்பவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தார் என்று தான் சொல்லவேண்டும். அவர் கவினுக்குச் சொன்ன அட்வைஸை லீடா வச்சு தான் அனாலிசிஸ் எழுதவேண்டும். சாண்டியை வெகுவாகப் பாராட்டினார்.

சேரனுடன் சேர்ந்து விடை பெற்றார் கமல்.

மகாதேவன் CM