Shadow

பிக் பாஸ் 3: நாள் 105 | கிராண்ட் ஃபைனல்

bigg-boss-3-grand-finale

நாம் வேலை பார்க்கிற ஆஃபிசுக்கு இரண்டு பேர் வேலைக்கு வருகிறார்கள். அதில் ஒருத்தரைப் பார்த்த உடனே நமக்குப் பிடித்துப் போய்விடும். இன்னொருத்தரைப் பிடிக்கவே பிடிக்காது. இரண்டுக்குமே எந்த காரணமும் இருக்காது. ஏதோ ஒரு சினிமாவில் சொல்ற மாதிரி, ‘பிடிக்கறதுக்கும் பிடிக்காம போறதுக்கும் காரணமே தேவையில்லை’. ஆனால் கொஞ்ச நாள் கடந்ததும், பார்த்த உடனே பிடித்துப் போன நபரின் உண்மை முகம் தெரிய வரும். அதே மாதிரி நமக்குப் பிடிக்காமப் போனவரோட நல்ல குணங்கள் தெரியவரும். கொஞ்ச கால இடைவெளியில் இரண்டு மனிதர்கள் மீது நமக்கு இருந்த மதிப்பீடுகள் முழுதாக மாறியிருக்கும். நிஜ வாழ்க்கையில் நம்மைச் சுற்றி எந்த கேமெராவும் இல்லை. அதனால் நம்ம முடிவுகள், மாற்றங்கள் பெரிதாக யாருக்கும் தெரியாது.

ஒரு வீடு, வீட்டைச் சுற்றி கேமெரா, நமக்கு அறிமுகமில்லாத 16 பேர். அவர்களுடன் இணைந்து ஒரே வீட்டில் வாழவேண்டும். இப்பொழுது மேலே சொன்ன விஷயத்தை யோசித்துப் பாருங்கள். எந்த உணர்ச்சியையும் மறைக்க முடியாத அளவுக்குச் சுற்றியும் கண்ணாடிகள். அது நம்ம முகத்தை மட்டும் இல்லை, அகத்தையும் காட்டும். முகத்தைத் திருப்பிக் கொண்டு கூட அழ முடியாது. ஆரம்பத்தில் ரொம்பப் பிடித்தவர்கள், நடுவில் பிடிக்காமல் போகிறார்கள். கடைசி வரைக்கும் எதிரியாக இருந்தவங்க நண்பராக வெளியே போறாங்க. சிலருக்கு ஆரம்பத்தில் கிடைத்த நட்பு அப்படியே தொடர்கிறது.

இது தான் பிக்பாஸ். கற்றதும் பெற்றதும் என கமல் பேசும் பொழுதெல்லாம் கிண்டல் செய்தவர் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது எனச் சொல்லப்படுவது போல் நம்ம வாழ்க்கையிலேயும் தொடர்ச்சியான மாற்றங்கள் இருந்து கொண்டே தான் இருக்கு. உள்ளே இருக்கிறவங்க மட்டும் இல்ல, வெளியே இருக்கிற நாம கூட, உள்ளே இருந்தவர்களைப் பற்றின நமது மதிப்பீடுகளை மாற்றிக் கொண்டதும் நடந்தது. வனிதாவே அதற்கு ஒரு பெரிய உதாரணம். அந்தளவு இந்த சீசன் கவனிக்கப்பட்டிருக்கு.

‘இந்த ஷோ உங்களை எந்த விதத்துல பாதிச்சுருக்கு?’ எனக் கேட்கப்பட்ட போது ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எல்லாமே அட்டகாசமாக இருந்தது. நாம் செய்வது தப்பு என்றே தெரியாமல் சில விஷயங்களைச் செய்து கொண்டு இருக்கோம்.

சாண்டி தன் குடும்பத்தை நினைத்து வருத்தப்படுவது, வெளியே எத்தனையோ பேரை பாதித்திருக்கு. குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனத் திரும்பத் திரும்ப சாண்டி சொன்னது சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்திருக்கு. அது சில பேரோட வாழ்க்கையை அழகாக மாற்றியிருக்கு.

அதே மாதிரி சாண்டி கலாய்ச்சதால் மோகன் மனவருத்தம் அடைந்ததைப் பார்த்து ஒருத்தர் தன்னை மாற்றிக் கொண்டதாகச் சொன்னதும் அழகான மொமென்ட். இது மாதிரி எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். இதெல்லாம் இந்த நிகழ்ச்சி பார்த்து தான் கற்றுக் கொள்ள வேண்டுமா என கேள்வி வரும். ஏதோ ஒரு விதத்தில் நல்ல மாற்றங்கள் வந்தால் நல்லது தானே!

இந்த சீசனோட கிராண்ட் ஃபைனல் இப்படி தான் ஆரம்பித்தது. வழக்கமா அகம் டிவி வழியே செல்லும் கமல், இந்த தடவை நேரடியாக அகத்திற்குள் சென்றார்.

நான்கு பேருமே செம்ம ஹாப்பி. உள்ளே போனவர் தன் ஸ்டைலில் ஒரு கவிதை எழுதி தனித்தனியா எல்லோருக்கும் கொடுத்தார். சாண்டிக்கு மெட்ராஸ் பாஷைல எழுதிக் கொடுத்தது அக்மார்க் கமல் குறும்பு.

நான்கு பேருக்கும் மறுபடியும் சில குறும்படங்கள். அப்புறம் மேடையில் இருந்து சந்திக்கறதாகச் சொல்லிக் கிளம்பினார். மீண்டும் மேடையில் தோன்றுவதற்கு முன்னர் டான்ஸ் பெர்ஃபாமன்ஸ் நடந்தது. முன்னாள் மற்றும் இந்நாள் ஹவுஸ்மேட்ஸ் இணைந்து ஆடினார்கள். இடையிடையில், ‘மானே, தேனே; போட்டுக் கொள்கிற மாதிரி, இரண்டு ப்ரேக்குக்கு ஒரு தடவை ஒருத்தரோட பெர்ஃபாமன்ஸ். அபிராமி, சாக்ஷி, கஸ்தூரி, யாஷிகா, வனிதா என எல்லோருமே பெர்ஃபாமன்ஸ் கொடுத்தனர்.

உள்ளே இருக்கிறவர்கள் ஃபைனல் வரைக்கும் வருவதற்குக் காரணமான மற்ற ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் மேடைக்கு வந்து தங்களுக்கெனப் போடப்பட்டிருந்த சோஃபாவில் அமர்ந்தனர்.

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்குக் கொடுக்கப்படும் கோப்பையைச் சென்ற சீசன் வின்னர் ரித்விகா எடுத்துக் கொண்டு வந்தார். அந்தக் கோப்பையை வீட்டுக்குள் எடுத்துக் கொண்டு போய், ஹவுஸ்மேட்ஸிடம் காட்டிவிட்டு, அதோட ஒரு எவிக்சனும் செய்யவேண்டும். இது ரித்விகாவுக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

உள்ளே போனவர் பாட்டு பாடி, நடனம் ஆடி டைம் எடுத்து அதைச் செய்தார். அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல், ஷெரின் பேரைச் சொல்ல, ரொம்ப மகிழ்ச்சியாக வெளியே போனார் ஷெரின்.

வெளியே வந்த ஷெரின் ஜாலியாக கமல் சாரிடம் பேசிக் கொண்டிருந்தார். இந்த வீட்டில் இருந்த 16 பேரில் கிட்டத்தட்ட 12 பேர் வரைக்கும் ஷெரினின் நண்பர்கள் தான். அதுவே ஒரு பெரிய சாதனை. ‘நீங்க நினைத்ததை சாதித்து விட்டீர்கள்’ என ஷெரினைப் பாராட்டினார் கமல். ஷெரினுக்கான குறும்படம் போடப்பட்டது.

‘ஒரு வீட்ல இருக்கோம். சண்டை போடறோம். முடிஞ்ச உடனே அதைக் கடந்து போகப் பழகிக்கணும். மறுபடியும் அதையே நினைச்சுட்டு இருக்கறது வேஸ்ட்’ என ஷெரின் சொன்ன வார்த்தைகள் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அந்த நேரத்தில் இருந்த மூட்ல, அந்த நேரத்து பிரச்சினைக்காக ஏதோ ஒரு விவாதம் நடக்குது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்களென இரண்டு தரப்புமே நிற்பார்கள். ஏதோ ஒரு வகையில் விவாதம் பெரிதாகி, ‘இனிமே உன் கிட்ட பேசினேனா கேளு!’ என ஒரு தற்காலிக முடிவு எடுத்து, அந்த சண்டை முடியும். அதோட அதை விட்டு வெளியே வரக் கற்றுக் கொள்ளவேண்டும். கடந்து போகப் பழகிக் கொள்ளவேண்டும். கடந்து வந்துவிட்டாலும் அதை மனதில் வைத்துக்கொண்டு, அடுத்த சண்டையில், எனக்கு அப்பவே தெரியும் என ஆரம்பிக்கக்கூடாது. இதை அழகாக வாழ்ந்து காண்பித்துவிட்டுப் போயிருக்கார் ஷெரின்.

வனிதாவோட அவ்வளவு சண்டை நடந்தும், கொஞ்ச நேரத்தில் அவரால் சகஜமாகப் பேச முடிகிறது. ஒரு தடவை கூட மற்றவர்கள் தன்னைக் காயப்படுத்தினதைச் சொல்லிக் காண்பிக்கவில்லை. ஏதாவது பிரச்சினை என்றால், சம்பந்தபட்டவங்களோடு நேரில் அமர்ந்து பேசி முடித்தார். ஆரம்பத்தில் மதுவோட தமிழ்ப்பெண் பிரச்சினையில் சண்டை வந்தது. பின்னாடி அது தொடரவும் செய்தது. அதற்கப்புறம் மதுவும் ஷெரினும் ரொம்ப வெருக்கமானதும் நடந்தது. உடம்பு சரியில்லாத போது தன்னைப் பார்த்துக் கொண்ட மதுவுக்கு ஒரு விருது கூட கொடுத்தார். கமலே சொன்ன மாதிரி, இந்த நிதானம் தவறுவதற்கான அனைத்து சூழலும் அங்கே இருந்தது. ஆனால் அதையும் மீறி, யார் மனதையும் காயப்படுத்தாமல் ஷெரின் வெளியே வந்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள்!

அடுத்ததாக இந்த சீசனில் இருந்தவங்களுக்கு விருது கொடுத்தனர்.

கேம் சேஞ்சர் – கவின்
Guts & Grit – வனிதா
Most Disciplined – சேரன்
Best Buddy – ஷெரின்
All Rounder – தர்ஷன்

நன்றாகக் கவனித்தால், இந்த சீசன் மேலே இருக்கும் ஐந்து பேர், உள்ளே இருந்த மூன்று பேர் ஆகியோரைச் சுற்றி தான் நடந்துள்ளது. இந்த சீசனோட பெரிய வெற்றிக்கு அது தான் காரணம். இந்த 8 பேருக்கும் இந்த சீசனை ஜெயிக்கத் தகுதி இருக்கு. அவங்களுக்காகப் பேச, சப்போர்ட் பண்ண ஒவ்வொருத்தருக்கும் தனியாக ஃபேன் பேஸ் இருந்தது. கா, இது எல்லாமே பொருத்தமான விருதுகள் தான்.

கேம் சேஞ்சர் கவின், வழக்கம் போல பேசினார். ஸ்ட்ராட்டஜிங்கற வார்த்தையில் தப்பொன்னும் இல்லையென மறுபடியும் அழுத்திச் சொன்னார் கமல். ஆக, ரூல்ஸ்படி பார்த்தால் கவின் போட்ட பிளானில் எந்த தப்பும் இல்லை. அதனால் தான் யாருமே, அதைத் தப்பு எனச் சொல்லவில்லை. ஆனால் நியாயப்படி பார்த்தால், இது தப்பு தான்.

வனிதா தன் குழந்தைகளை வரவழைத்து அந்த விருதினைக் கொடுத்தார். ‘உங்களுக்காக தான் சார் வந்தேன்’ என கமலுக்கே ஐஸ் வைத்தார்.

‘டிசிப்ளினா இருக்கிறதைக் கத்துகிட்டதே உங்க கிட்ட தான் சார்’ என பீமபுஷ்டி அல்வா கொடுத்தார் சேரன்.

Best buddy. இந்த விருதுக்கு, அபிக்கும் ஷெரினுக்கும் தான் போட்டி எனச் சொன்ன உடனே, அபிராமியை மேடைக்கு கூப்பிட்ட ஷெரின், நாம இதை ஷேர் பண்ணிக்கலாம் எனச் சொன்னது செம்ம. இதெல்லாம் உள்ளிருந்து அப்படியே வரவேண்டும் அல்லவா?

ஆல் ரவுண்டர் அவார்ட் வாங்கின தர்ஷனைத் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்திற்காக ஒப்பந்தம் செய்தார் கமல். செம்ம மொமென்ட் அது. எதையும் கற்றுக் கொள்வதற்கு ஆர்வமாக, ஒரு பேஷனோடு இருக்கிற தர்ஷன் இதற்குத் தகுதியானவர் தான். அவங்க அம்மா ஆனந்த கண்ணீரோட எல்லோருக்கும் நன்றி சொன்ன காட்சி, இந்த சீசனோட பெஸ்ட் சீன்ஸில் ஒன்று.

பிக் பாஸ் முடித்து விட்டு வெளியே வந்தவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பற்றி சிலர் கிண்டல் செய்கிறார்கள். முதல் சீசனில் ஆரவ் ஹீரோவானார். ஆனால் இன்னும் படம் வெளியாகவில்லை. அதற்கு அவரோ, பிக் பாஸ் நிகழ்ச்சியோ எப்படிப் பொறுப்பாக முடியும்? ஓவியாவுக்கு இருந்த கிரேஸ்க்கு நிறைய ஆஃபர்ஸ் வந்திருக்கும். ஆனால் ஓவியாவுக்கு முதலில் விருப்பம் இருக்கவேண்டும் தானே? போன சீசனில் வந்த ஹரீஷ், ரைஸாவுடன் சேர்ந்து ஒரு படம் நடித்தார். ஹரீஷ்க்கு படம் கையில் இருக்கு. யாஷிகா, ஜனனி, ரித்விகா, மஹத், ஐஸ்வர்யா இப்படி எல்லோருக்குமே வாய்ப்பு கிடைத்திருக்கு. அந்தப் படங்கள் ரிலீஸ் ஆகுமா? அவங்க டாப்புக்கு போவாங்களா எனத் தெரியாது. ஆனா அவங்க யாரும் சும்மா இல்லை.

தோணி சொன்னா மாதிரி ரிசல்ட்டை விட ப்ராசஸ் தான் முக்கியம். அவங்க வாழ்க்கையில் மட்டும் இல்லை, நம்ம வாழ்க்கைலேயும் அந்த ப்ராசஸ் நடந்து கொண்டு இருந்தாலே போதும். ப்ரேக்கிங் பாயிண்ட் ஏதோ ஒரு கட்டத்தில் வந்தே தீரும். இந்த வாய்ப்பும் தர்ஷனுக்கு ஒரு ஆரம்பம் தான்.

அடுத்ததாக வீணை வித்வான் திரு. ராஜேஷ் வைத்யாவோட வீணை இசை. கமலோட பெஸ்ட் ஹிட் சாங்ஸை வாசித்தார். இசைப் பிரியர்களுக்கு ஒரு ட்ரீட் அது. அதுவும், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி’ பாட்டு அட்டகாசமாக இருந்தது. அப்புறம் கமல் ஒரு சின்ன பிட் பாட, அவர் வேலை முடித்துக் கிளம்பினார்.

நெக்ஸ்ட் வந்தது விஜய் டிவி ஸ்பெஷல். பிக் பாஸை ஸ்பூஃப் செய்து, அதுவும் ஹவுஸ்மேட்ஸ் முன்னாடியே வைத்துச் செய்வதெல்லாம், விஜய் டிவியால் மட்டும் தான் முடியும். சில பெஸ்ட் கவுன்ட்டர்ஸ் கொடுத்து அதகளம் பண்ணிட்டாங்க. ஷார்ட்டாக இருந்தாலும் செம்மையாக இருந்தது.

‘அங்கே வீட்டுக்குள் 3 பேர் இருக்காங்க’ என நம்ம மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணினவர், அகம் டிவி வழியாக அகத்திற்குள். குறும்படம் போட்டது பத்தாமல், ஆடியன்ஸில் இருந்த ஃபேன்ஸை பேச வைத்தார். முகினுக்கு ஒரு பெண் ரசிகை பேச, அவங்களுக்கு ஒரு பாட்டு பாடி அசத்தினார் முகின். தன் கேரியரை சரியாக டிசைன் பண்ணினார் என்றால், தமிழ்நாட்டோட அடுத்த சாக்லேட் பாய் முகின் தான். அதே மாதிரி சாண்டிக்கும், லாஸ் “அக்காவுக்கும்”.

அடுத்ததாக ஸ்ருதி ஹாசன் உள்ளே வந்தார். ரித்விகா செய்த அதே வேலை. உள்ளெ போய் ஒரு எவிக்ஷன் நடத்தவேண்டும். இவர்களும் உள்ளே போய் ஜாலியாகப் பேசிப் பாடிக் கொண்டிருந்தார். மறுபடியும் அகம் டிவி வழியாக வந்து, ‘லாஸ்லியா எவிக்சன்’ எனச் சொல்லி, அவரைக் கூட்டிக் கொண்டு கிளம்பினார் ஸ்ருதி.

லாஸ் பேச வேண்டிய மேடையை பாதி ஸ்ருதி எடுத்துக் கொண்டார். அதற்கப்புறம் லாஸ் பேசி, அவங்க அம்மா பேசி, கமல் பேசி, ஒரு வழியாக அடுத்த செக்மென்ட்டுக்கு போனார்கள்.

உள்ளே சாண்டி, முகின் மட்டும் தனியாக. ஃபைனலில் இருக்கோம் என்கிற டென்ஷனை விட, இந்த வீட்டை விட்டு போகப் போறோம் என்கிற டென்ஷன் தான் அவர்களிடம் இருந்தது. கடைசியாக ஒரு தடவை பிக் பாஸ் பேசினது ஹார்ட் டச்சிங்காக இருந்தது. சாண்டி, முகின் மாதிரி எனக்கும் கண் கலங்கிவிட்டது. ஆப்டர் ஆல் நாம எல்லாரும் செண்டிமென்டல் இடியட்ஸ் தானே!

வீ ஆர் ஆல் கோயிங் டு மிஸ் யூ பிக் பாஸ்.

பின் ஒவ்வொரு இடமாகப் போய் உட்கார்ந்து, நடந்ததைப் பற்றிப் பேசி, பாட்டும் பாடிக் கொண்டிருந்தனர். அதை விரிவாகக் காண்பித்ததும் செம்ம ஐடியா. ஏன்னா 16 பேர் கலகலவென இருந்த வீட்டில், ரெண்டே பேர், அதுவும் கடைசி மொமென்ட்ல இருந்த காட்சி, எல்லோருக்குமே பிரிவுக்கான வலியைக் கொடுத்திருக்கும். அதே மாதிரி ஒரு ஹேப்பி எண்டிங் ஃபீலிங்கும் கொடுத்திருக்கும்.

அடுத்து அகம் டிவி வழியே அகத்திற்குள். சாண்டி, முகின் இரண்டு பேரையும் லைட் ஆஃப் பண்ணிக் கொண்டு வெளியே வரச்சொன்னார். இரண்டு பேருமே சென்டிமென்டாக ரொம்ப ஃபீல் பண்ணி லைட் ஆஃப் செய்து விட்டு வெளியே வர, அங்கே கமலே நின்று கூட்டிக் கொண்டு போனார். ஒரு பெரிய சாரட் வண்டியில், ராஜா மாதிரி கமலும், சாண்டி முகினும் வர, முன்னாடி பெண்கள் நின்று பூப்போட, இன்னும் சில பெண்கள் கையில் ஆர்ட்டிஃபிசியல் விளக்குகளை எடுத்துக் கொண்டு வர, ‘ராஜா கையை வச்சா’ பாட்டு பாட, கிராண்டாக இருந்தது அந்த சீன்.

இவ்வளவு செலவு செய்யும் போதே தெரியுது, இந்த சீசன் எவ்வள்வு பெரிய ஹிட் என. இந்த நிகழ்ச்சியோட ஜி.எம். வந்து பேசின போது, உண்மையும் தெரிந்தது. 200 கோடி ஓட்டுக்கள், ஃபைனலுக்கு மட்டும் 20 கோடி ஓட்டுகளாம். வேர்ல்ட் வைடு வேற எந்த மொழியிலும் இப்படி நடந்ததில்லை என அவர் சொன்ன போது தான் இந்த நிகழ்ச்சியின் வீச்சு புரிந்தது.

அடுத்து ஃபைனல் தான். கொஞ்ச நேர விளையாட்டிற்குப் பிறகு முகின் தான் வெற்றி என அறிவித்தார் ஆண்டவர். எல்லோருக்கும் மகிழ்ச்சி.

பிக் பாஸ் கோப்பையும், செக்கும் முகினுக்குக் கொடுக்கப்பட்டது. மறுபடியும் வருவேன் எனச் சொல்லிவிட்டு விடைபெற்றார் கமல்.

மகாதேவன் CM