
லாக்கப் எனும் நாவல் விசாரணை ஆனதை விட, பல மடங்கு வீரியத்துடன், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாக மாற்றியுள்ளார் வெற்றிமாறன். எழுத்தாளர் பூமணியின் மூலக்கதையை மிஞ்சும் அளவு, மிகச் சிரத்தையுடன் திரைக்கதை அமைத்து அசக்தியுள்ளனர் மணிமாறனும் வெற்றிமாறனும். ஒரு நாவல் திரைப்படமான முயற்சியில், இயக்குநர் மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’ பெற்ற இடத்திற்கு நிகராக வைக்கக் கூடிய கலைப்படைப்பாக வந்துள்ளது அசுரன்.
நிலத்தைக் கையகப்படுத்துவதில் ஏற்படும் தகராறும், அது தொடர்பான கொலையும் பழிவாங்குதலும் தான் படத்தின் கதை என்றாலும் கூட, சமூகத்தில் நிலவி வரும் சாதிய அடக்குமுறைகளும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஏவப்படும் வன்முறைகளுமே படத்தின் அடிநாதம். ஹிந்திப்படமான ஆர்ட்டிகிள் 15 போல் எதையும் உடைத்துப் பேசாவிட்டாலும், இன்னது தான் பேசுகிறோம் என தனது திரைமொழியால் புரிய வைத்துவிடுகிறார் வெற்றிமாறன். அவரது படைப்புகள் தனித்துத் தெரிவதற்கும், பார்வையாளர்களை ஈர்த்துக் கொள்வதற்கும் காரணம், திரைமொழிக்கு அவர் காட்டும் மெனக்கெடல். திரைமொழிக்கு மட்டுமில்லாமல், நிலத்தையும், அந்நிலத்திற்கான வட்டார மொழியையும் படைப்பில் கொண்டு வருவதில் காட்டும் துல்லியமும் அக்கறையும் இன்னொரு பிரதான காரணம். ஆடுகளத்தில் மதுரைத் தமிழ், வடசென்னையில் சென்னைத்தமிழ், அசுரனில் நெல்லைத்தமிழ் என கதைக்களத்தின் மக்களைக் கண் முன் கொண்டு வந்துவிடுகிறார்.
பூமணியின் வெக்கை நாவல் படிக்கும் பொழுது ஒரு மனச்சித்திரம் எழும். அவரது வர்ணனைகளில் விரியும் நிலத்தை அப்படியே கண் முன் கொண்டு வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். சம்சாரியான தனுஷிடமிருந்து அசுரன் வெளிப்படும் முன்பாகவே, வேல்ராஜின் சினிமா கோணங்கள் படத்தின் வெம்மையை நமக்குக் கடத்துகின்றன. சிறுவனைக் கடித்துக் குதறத் தாவியோடும் நாய்கள், உணவு தேடி வயலை நாசம் செய்யும் பன்றியின் சீற்றம், காட்டின் விஸ்தாரனத்தைக் காட்டும் பறவைக்கோணக் காட்சி, சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் என வேல்ராஜ் ஒவ்வொரு ஃப்ரேமிலும் மிளிருகிறார். அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல், அரை இருளில், ‘ஆடுகளம்’ நரேனுக்கு திரையரங்குக் கழிவறையில் ஏற்படும் மறக்கவியலா அனுபவத்தை, வேல்ராஜின் கேமெரா கோணங்கள் பார்வையாளர்களுக்குக் கடத்தும் அழகியல் அட்டகாசம்.
பன்றி வயலில் புகுந்துவிட்டதென அறிந்ததும், தனுஷ் குத்தீட்டியை எடுக்கிறார். பார்வையாளர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்குகிறார்கள். தனுஷ் ஃப்ரேமின் இடது புறத்தில் இருந்து, கையில் ஆயுதத்துடன் வெளிப்படும் ஒவ்வொரு முறையும், திரையரங்கம் அதிர்கிறது. போதாக்குறைக்கு பார்வையாளர்களின் அட்ரினலினை ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை எகிற வைக்கிறது. வன்முறைக்கு ஏங்கும் கிளாடியேட்டர் அரங்கினில் அமர்ந்திருக்கிறோமோ என சிறிது பதற்றம் தொற்றிக் கொண்டாலும், ‘நிலத்தையும் பணத்தையும் வேண்டுமெனில் அவர்களால் பிடுங்கிக் கொள்ள முடியும். ஆனால் உன்னுடைய படிப்பை மட்டும் யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது’ என்ற வசனத்திற்கு எழுந்து நின்று கைதட்டும் ரசிகர்களைத் தமிழ்த் திரையுலகம் பெற்றுள்ளது என்பது சமூகத்தின் மீதும், எதிர்காலத்தின் மீதும் மிக பெரிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
தனுஷின் இளைய மகன் சிதம்பரமாக கென் கருணாஸ் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு முழு நியாயம் செய்திட மிகவுமே தடுமாறியுள்ளார். தனுஷுடன், மலையேறும் காட்சியில், பாவம் அவரால் வேட்டியணிந்து கொண்டு நடக்கவே முடியவில்லை. அவர் பேசும் வசனங்களில் தொனிக்கும் ஏமாற்றமும் கோபமும், அவரது உடற்மொழியில் பிரதிபலிக்கப்படவில்லை. கென்னுக்குக் கேடயமாக இருப்பது எழுத்தாளர் சுகாவின் வசனங்களே!
தனுஷ், பசுபதி, மஞ்சு வாரியர், ஆடுகளம் நரேன், பவண், பிரகாஷ் ராஜ், இயக்குநர் பாலாஜி சக்திவேல், இயக்குநர் சுப்ரமணிய சிவா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ் என அத்தனை பாத்திரங்களுமே நினைவில் நிற்கும்படி சிறப்பான நடிப்பை அளித்துள்ளனர். அனைவரிலும் சிறப்பான நடிப்பை தனுஷின் மூத்த மகன் முருகனாக நடித்திருக்கும் டீஜே அருணாச்சலம் வழங்கியுள்ளார். அந்தப் பாத்திரத்திலும் தானே நடித்து விடும் யோசனை இருந்ததாம் தனுஷிற்கு. காரணம், கொஞ்ச நேரமென்றாலும் மிக வலுவான கதாபாத்திரம் அது. தனுஷால் ஒரு படி கூட நடித்திருக்க முடியும், ஆனால் லண்டன் வாழ் டீஜே-வோ அந்தப் பாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு மனதில் ஒட்டிக் கொள்கிறார்.
திரைக்கதை யுக்தியில் நடந்த மிகப் பெரிய பாய்ச்சல் – வடசென்னை (17 அக்டோபர், 2018) திரைப்படம். ஓராண்டு நிறைவிற்குள்ளாகவே, வெற்றிமாறனின் மற்றுமொரு அசுரத்தனமான பாய்ச்சல் வந்துள்ளது இப்படம். வடசென்னையின் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளார். வெற்றிமாறனின் அசுரன் தான், இந்த வருடத்தில், இதுவரை வெளிவந்த திரைப்படங்களிலேயே மிகச் சிறப்பான படம். மேலும், காட்சிகளின் அழகியல், பேசும் அரசியல், இசை, ஒளிப்பதிவு, கதாபாத்திரங்களின் நடிப்பு, நாவலைப் படமாக்கின முயற்சி என இப்படம் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகக் காலாகாலத்திற்கும் நினைவுகூரப்படும்.