புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன.
சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவேற்கத்தக்க முயற்சி.
இன்றைய கருத்தரங்கில், மறைந்த சுதந்திரப் போராட்டப் போராளியும், கிராம தொழில்வளர்ச்சிக்கு வித்திட்ட தொழிலதிபர் ஸ்ரீ அப்பா ராவ் மற்றும் நரம்பியல் துறையில் முதன்மையராகப் பொறுப்பு வகித்த மறைந்த மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீநிவாஸ் ஆகிய இரண்டு சிறந்த இந்திய ஆளுமைகளை நினைவு கூர்ந்து கெளரவிக்கப்படுவதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன்.
‘பிராப்லம் சைல்ட்’ குறித்த பிரக்ஞை போதுமான அளவிற்கு இன்னும் பெறப்படவில்லை. இது போன்ற வல்லுநர்கள் பங்கேற்கும் கருத்தரங்குகள், குழந்தைகள் சார்ந்த பிரச்சனைகளைக் குறுகிய காலத்தில் முழுமையாக உணரவும், புரிந்து கொள்ளவும் வழி வகுக்கும். புரிந்து கொண்டவுடன், அதை காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்தி தீர்வு காணலாம்.
வாழ்க்கை என்பது கடவுளின் அழகான வரபிரசாதம். நாம் அதைப் பொக்கிஷமாகப் பாவித்துக் கொண்டாடக் கற்பதோடு, அவ்வரத்தைச் சமூக முன்னேற்றத்திற்காகவும் பயன்படுத்தவேண்டும்” என்றார்.
‘ஆட்டிசம் – தி புத்தி புக்’ என்ற ஆட்டிசம் பற்றி கேஸ் ஸ்டடி புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பையும் வெளியிட்டார் இந்நிகழ்வில் வெளியிட்டார் ஆளுநர்.
அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜாய் ஹாரிசனும், ஜே சல்பேகரும், இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர் பிரமித் ரஸ்தோகியும் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றினார்கள். சுமார் 15 – 20% பள்ளி செல்லும் குழந்தைகளுக்குக் கற்றலில், கவனித்தலில், இயங்கு முறையில், புரிந்து கொள்ளுதலில் குறைபாடு உடையவர்களாக உள்ளனர். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது நம் முன் இருக்கும் மிகப் பெரிய சவால். ஸ்மார்ட் ஃபோன்களைக் குழந்தைகளிடம் தருவதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். பெற்றோர்களாலோ, ஆசிரியர்களாலோ, சக மாணவர்களாலோ, கிண்டல் செய்யப்பட்டோ, அவமானப்படுத்தப்பட்டோ குழந்தைகள் தங்களுக்குள் ஒடுங்கிக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் ஜே சல்பேகர். மேலும், பெற்றோர்கள் முன்னிலையில் தங்கள் பிரச்சனைகளையோ, உள்லத்தில் இருப்பதையோ பேசவே தயங்குகின்றனர் என்றார். அவர்கள் சொல்வதைத் தீர்வு சொல்லும் நோக்கில் கேட்காமல், பாசாங்கின்றிக் கேட்டுக் கொள்ளவேண்டும் என்றும், பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பதை குழந்தைகளிடமே ஆலோசித்து முடிவெடுப்பது பலனளிக்கும் என்றும் அறிவுறுத்தினார்.
ட்ரைமெடும், நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தும் இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்குகளைப் பாராட்டிய இதய நோய் மருத்துவர் சொக்கலிங்கம், “கர்ப்பக் காலத்தில் தாய்மார்களின் மனநலனில் ஏற்படும் சிறு மாற்றங்களும் குழந்தையின் நலனைப் பாதிக்கிறது. பிராப்ளம் சைல்ட்களுக்கு இதுவுமோர் காரணம். கர்ப்பினிகள் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்” என வலியுறுத்தினார்.