
இந்தியப் பெருங்கடலில் தோன்றும் செலஸ்டியல் தீவில், அடமான்ட்டியம் கிடைப்பதாகத் தெரிய வர, இந்தியா, ஃபிரான்ஸ், ஜப்பான ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் போட விழைகிறது அமெரிக்கா. அமெரிக்க அதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் தேடியஸ் ராஸ், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் மிகக் கவனமாக இருக்கிறார். ஆனால், தேடியஸ் மீது தனிப்பட்ட கோபத்தில் இருக்கும் உயிரணு உயிரியலாளரான (Cellular Biologist) சாம்யூல் ஸ்ட்ரென்ஸ், ‘மிஸ்டர் ப்ளு (Mr. Blue)’ எனும் பாடலைக் கொண்டு பிறரின் மூளையைத் தன்வயப்படுத்தி, அதிபரின் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி, அதிபரை அசிங்கப்படுத்த நினைக்கிறார். சாம்யூல் ஸ்டெர்ன்ஸால். மீண்டும் போர் ஆரம்பிக்கும் ஒரு சூழல் உருவாகிறது. கேப்டன் அமெரிக்கா அதை எப்படித் தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸின் (MCU) வழக்கமான ஒரு மேஜிக் இந்தப் படத்தில் இல்லை. ஒரு த்ரில்லராக வென்றிருக்க வேண்டிய படம், சூப்பர் ஹீரோ பேனரில் வந்ததால், இரண்டு ஜானரிலும் பொருந்தாமல் போய்விடுகிறது. ‘ஹல்க் (2003)’ எனும் படத்தில் தோன்றிய வில்லனான தேடியஸ் ராஸை, தன் தவறுகளை உணர்ந்து மகளுக்கான அத்தனையும் சரி செய்ய நினைக்கும் கதாபாத்திரத்தில் கொண்டு வந்துள்ளனர். ஹாரிஸன் ஃபோர்ட் அதற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். ஆனால் அவரே ஒரு பிரபல ஹீரோ என்பதால், அவரை மீறி கேப்டன் அமெரிக்காவாக நடித்த ஆன்தோனி மேக்கியால் பிரகாசிக்க முடியவில்லை. அக்கதாபாத்திரம், தான் ‘கேப்டன் அமெரிக்கா’விற்குத் தகுதியானவன் தானா என சந்தேகத்துடன் கழிவிரக்கத்தில் திரிகிறது. படத்தின் ஒரே உருப்படியான விஷயமான ரெட் ஹல்க் Vs கேப்டன் அமெரிக்கா சண்டை பெரிய அளவில் பார்வையாளர்களைக் கவரவில்லை. வில்லனான சாம்யூல் ஸ்டெர்ன்ஸ் மீதும் கோபமோ, பச்சாதாபமோ எழவில்லை. தனித்தனியாக ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு கதையும், வலியும் இருந்தாலும் கூட, ஒட்டுமொத்த படத்தில் அது எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
‘உங்க மீது நம்பிக்கை இல்லை’ என அமெரிக்க அதிபரையே தெறிக்க விடுகிறார் இந்தியப் பிரதமராக வரும் கதாபாத்திரம். இந்திய ரசிகர்கள், இக்காட்சிக்கு மட்டுமே ஆரவாரம் செய்கின்றனர். புது ஃபால்கன் டோரஸாக வரும் டேனி ராமிரஸ், முன்னாள் கேப்டன் அமெரிக்கா இசய்யா பிராட்லியாக வரும் கார்ல் லம்ப்லி, ரெட் ரூமில் பயற்சியளிக்கப்பட்ட முன்னாள் பிளாக் விடோவாக வரும் ஷிரா ஹாஸ் ஆகிய பாத்திரங்களின் அறிமுகம் ரசிக்கவைக்கின்றன. இனி வரும் படங்களில் அவர்களின் பங்களிப்பு தொடரும் எனத் தெரிகிறது.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திற்குப் பிறகு MCU-இல் நிலவி வரும் சுணக்கமான திரைக்கதை, அவரகளது ஃபேஸ் 6 படங்களின் வருகையில் விலகும் என நம்புவோமாக!