
பசுபதி கேட்டுக் கொண்டதற்கிணங்க பாண்டியும் பூச்சியும் சைக்கோ சலீமிடம் பணத்தைத் திருடி, அதை டாஸ்மாக்கில் தொலைக்கின்றனர். அந்தப் பணத்தை ஈடு செய்ய, ஸ்பிலிட் சூசை, மெமரி தாஸ், டமார லால், குடி குமார் எனும் கொள்ளையர்களுடன் இணைந்து வாவ் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். இந்த கேங்ஸ்டர்களின் முயற்சி என்னானது என்பதே படத்தின் கதை.
எழுதி இயக்கியுள்ள இரட்டை இயக்குநர்களான விக்ரம் ராஜேஷ்வரும், அருண் கேசவும் கதாபாத்திர வடிவமைப்பில் அசத்தியுள்ளனர். ஸ்பிலிட் சூசையாக ஆனந்த்ராஜும், மெமரி தாஸாக மொட்டை ராஜேந்திரனும், டமார லாலாக ஜான் விஜயும், கட்டிங் குமாராக வைபவின் அண்ணன் சுனிலும் நடித்துள்ளனர். பதினைந்து வருட காவல்துறை சித்திரவதையில், ஜான் விஜய் கேட்கும் திறனை இழக்கிறார், மொட்டை ராஜெந்திரன்க்கு மறதி பிரச்சனை எழுகிறது, ஆனந்த்ராஜோ அளுமைப் பிளவு ஏற்பட்டு விடுகிறது. சைரன் சத்தம் கேட்டால் ஆனந்த்ராஜ் தன்னைப் போலீஸ் எனக் கருதிக் கொள்வார். மொட்டை ராஜேந்திரனோ கொள்ளையடிக்கப் போகும் இடத்தில் தான் எதற்காக வந்தோம் என்பதை மறந்துவிடுவார். நகைக்கடையில் நகை திருடப் போய், அதை மறந்து நகை வாங்க வந்தோம் என முதலில் நினைத்துக் கொண்டு, அதையும் மறந்து நகைக்கடை ஊழியருக்கே நகையை விற்கத் தொடங்குவார். நகைச்சுவையாகக் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தாலும், பார்வையாளர்களுக்கு சிரிப்பே வந்துவிடக் கூடாதென மெனக்கெட்டு திரைக்கதை எழுதினாற்போல் இருக்கிறது. ஒரு கட்டத்தில் பார்வையாளர்கள், வந்தது வந்துவிட்டோம், கொஞ்சூண்டு நகைச்சுவை ஒட்டினாற்போல் லேசாக வந்தால் கூடச் சிரித்து விடலாம் என கான்சியஷஸாகத் தயாராகிவிடுகின்றனர். எனினும் திரையரங்கில் மயான அமைதி நிலவுகிறது.
வைபவின் காதலியாக அதுல்யா நடித்துள்ளார். வைபவ், அதுல்யாவைக் காதலிக்கிறார் எனக் கண்டுபிடித்து நற்சான்றிதழ் வழங்குவதற்காக சூர்யா கணபதியைப் பயன்படுத்தியுள்ளனர். அதுல்யாவிடம் சைக்கோ சலீமாக ஷிகான் ஹுசைனி பூச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி மணிகண்டா ராஜேஷும், பாண்டியாக வைபவும் நடித்துள்ளனர். டாஸ்மாக்கில் இருந்து பணப்பெட்டி என நினைத்துக் கொண்டு முதுகில் ரெடின் கிங்ஸ்லியைத் தூக்கி வருகின்றனர். Comedy is a serious business. ஆனால் அதை மிக எளிதாகத் திரையில் கொண்டு வந்துமுடியுமென நினைத்துவிட்டனர் போலும்! பணமதிப்பிழப்பைப் பற்றிய காட்சியொன்று படத்தில் வருகின்றது. அத்தகவலை அறிவிக்கும் டிவி தொகுப்பாளினி, ‘நான் என் பணத்தை மாற்ற வங்கிக்கு விரைகிறேன்’ என முடிப்பார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போலீஸ், சைக்கோ சலீம், காமெடி கேங்ஸ்டர்ஸ் அனைவரும் கோடிக்கணக்கான ரூபாயை விட்டுவிட்டு, ‘ஐய்யய்யோ எல்லாம் வேஸ்ட்டா போச்சு’ என நடையைக் கட்டுகின்றனர் (அங்கே போலீஸ் தேடி வந்ததோ ஒரு பென்-டிரைவை). ஷ்ஷ்ப்பாஆஆ! சீட்டுக்கட்டில் உள்ள மொத்த கார்டுகளுமே ஜோக்கர்ஸாக இருந்தால் விளையாட்டில் எப்படி சுவாரசியம் ஏற்படும்?
கதைக்களம், கதாபாத்திரங்கள் என நகைச்சுவைப் படத்திற்கான அஸ்திவாரம் சரியாக நிறுவப்பட்டிருந்தாலும், அது காமெடி மேஜிக்காகப் பரிணமிக்கத் தவறிவிடுகிறது.

