32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

குபேரா விமர்சனம் | Kuberaa Review

B R Murali Krishnan சேலம் Published: 20/06/2025 3 நிமிட வாசிப்பு Updated: 21/06/2025 சினிமா
எழுத்து அளவு:

திருப்பதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருக்கும் தேவாவின் பெயரில் ஷெல் கம்பெனி தொடங்கப்பட்டுப் பத்தாயிரம் கோடி டெபாசிட் செய்யப்படுகிறது. அப்பணத்தை மீண்டும் அவரிடமிருந்து வில்லன் பெறுவதற்குள், தேவா உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பித்துவிடுகிறார். அரசாங்கத்தையே ஆட்டிப் படைக்கும் வில்லனிடமிருந்து பத்தாயிரம் கோடிக்குச் சொந்தக்காரரான பிச்சைக்காரன் தேவாவால் தப்பிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஒரு பொருளாதாரக் குற்றப் பின்னணியில் தொடங்கும் படம். அக்குற்றத்தைச் சாத்தியமாக்குவதற்கான செயற்முறை, சிறைப்பட்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரியில் இருந்து சாலையோரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் வரை நீள்கிறது. மிக அழகாகப் படத்தின் முதற்பாதியில் இவற்றைக் கட்டமைக்கிறார் சேகர் கம்முலா.

பெரும்கோடீஸ்வர வில்லன் நீரஜ் மித்ராவாக ஜிம் சார்ப் நடித்துள்ளார். அவரது பணக்காரத் தோரணையே, பார்வையாளர்களை அசெளகரியம் கொள்ள வைக்குமளவு மிக நேர்த்தியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. சக மனிதர்கள் மீதான அவரது அதி அலட்சிய பார்வையே அவர் மீது கோபம் கொள்ள வைக்கிறது. அவரது கையாள் ரோபோவாக நடித்திருக்கும் செளரவ் குரானா, தன் செயல்களால் மிரட்டும் வழக்கமான துணை வில்லனாக வந்தாலும் கவனிக்க வைக்குபடியான நடிப்பைக் கொடுத்துள்ளார். சூழலின் விபரீதத்தை தீபக்காக வரும் நாகார்ஜுனாவை விட, அவரது மனைவி ஷில்பாவாக நடித்துள்ள சுனைனா, சிற்சில காட்சிகளிலே தோன்றினாலும் கூட மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். தண்டேல் படத்தில் ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து அழுது கொண்டிருப்பார் சாய் பல்லவி. அவரது கண்களில் வேதனை தெரியும். இப்படத்திலும் ராஷ்மிகா மந்தனா அதே போன்ற அழுகையுடன் அறிமுகமாகிறார். வேதனையற்ற fake கண்ணீரும், ராஷ்மிகாவின் முகபொலிவும் திரையில் பார்க்க நன்றாக இருந்தாலும், அவரேற்ற சமீரா கதாபாத்திரம் திரையில் கடைசி வரை தெரியவே இல்லை. மாறாக தனுஷ் எங்குமே தெரியாமல் தேவாவாகப் படம் முழுவதும் வியாபிக்கிறார். தனுஷின் திறமைக்குத் தீனி போடும் அற்புதமான கதாபாதிரத்தினைக் கொடுத்துள்ளார் சேகர் கம்முலா. தனுஷ் தனது முகத்தில் கொண்டு வரும் அந்த வெகுளித்தனம் பிரமாதமாய் உள்ளது. முன்பின் அறியாத ஒரு பிச்சைக்காரனின் அடுத்த ஜென்ம வாழ்க்கைக்காகத் தவிக்கும் தேவாவின் கதாபாத்திரத்தின் தூய்மையான இதயம் லயிக்க வைக்கிறது. அதன் நீட்சியாக வரும் “போய் வா போய் வா நண்பா” எனும் பாடல் மனதைக் கனக்கச் செய்து வெறுமையாக்கி விடுகிறது. க்ளைமேக்ஸில் அந்த வெகுளி தேவா தொலைந்து, அவசர ஆவேச காட்சிகளில் அடித்துச் செல்லப்பட்டு விடுகிறான். நாகார்ஜுனாவையும் அவசர அவசரமாக இரண்டாம் நாயகனாக்கியுள்ளார் சேகர் கம்முலா. அவ்வளவு நேரம் நிதானமாகப் பயணித்த திரைக்கதை, க்ளைமேக்ஸை நெருங்கும்போது பள்ளத்தை அடைந்துவிடும் நீர்வீழ்ச்சியாகிவிடுகிறது.

கமல்ஹாசனின் அன்பே சிவம் பேசிய கருவைத் தொட்டுள்ளது படம். ஆனால் அப்படம் எய்திய முழுமைத்துவத்தை அடைய முடியாதபடிக்கு கடவுளின் கையாகும் தனுஷ் க்ளைமேக்ஸில் அவசரப்பட்டுவிடுகிறார். படத்தின் நீளம் ஒரு பிரச்சனையாக இருந்தாலும், படம் அசைந்தோடும் நதி போல் பிரவாகிக்கிறது. பார்வையாளர்களை மெல்ல உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு பயணிப்பது தான் இயக்குநர் சேகர் கம்முலாவின் பாணியாகும். படத்தின் முதற்பாதியில் தெரியும் அந்த மேஜிக், இரண்டாம் பாதியில் கொஞ்சம் மிஸ் ஆகிறது. அதுவும் கூட நேரத்தைக் குறைக்கும் முயற்சியில் அந்த ரிதம் தப்பியுள்ளதே தவிர்த்து ஓவர்-ஆலாகப் படம் அற்புதமான உணர்வைத் தருகிறது.

B R Murali Krishnan
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.