

DNA என்பது பிரதான கதாபாத்திரங்களான திவ்யாவையும் ஆனந்தையும் குறித்தாலும், படத்தில் ஒரு குழந்தையின் பெற்றோரைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படுவதையும் குறிக்கிறது.
காதல் தோல்வியால் மதுபோதைக்கு அடிமையாகி மீளும் ஆனந்திற்கும், BPD எனப்படும் பார்டர்லைன் பெர்சனாலிட்டி டிஸ்ஆர்டர் கொண்ட திவ்யாவிற்கும் திருமணம் நடக்கிறது. குழந்தை பிறந்ததும், அம்மகவைக் கையில் வாங்கும் திவ்யா, அது தன்னுடைய குழந்தை இல்லை எனச் சொல்கிறார். மருத்துவர்கள், செவிலியர்கள், உறவினர்கள் என அனைவரும் திவ்யாவை நம்பாத பொழுது, ஆனந்த் மட்டும் திவ்யா சொல்வதை நம்பித் தனது குழந்தைக்காகப் போராடத் தொடங்குகிறான். சுழலில் சிக்கியது போல், ஆனந்தின் அந்தத் தேடலும் போராட்டமும் அவனை எங்கெங்கோ அழைத்துச் செல்கிறது. திவ்யாவின் மீது ஆனந்த் வைத்த நம்பிக்கை வென்றதா இல்லையா என்பதே படத்தின் முடிவு.
ஃபர்ஹானா படத்தில், வசனங்களுக்காக மனுஷ்யபுத்திரனுடன் இணைந்த நெல்சன் வெங்கடேசன், இப்படத்தில் எழுத்தாளர் அதிஷாவைத் திரைக்கதையாக்கத்தில் இணை எழுத்தாளராகப் பயன்படுத்தியுள்ளார். ஓர் எழுத்தாளர் இணையும்போது திரைக்கதையில் ஏற்படும் மேஜிக்கை இப்படத்தின் இரண்டாம் பாதியில் உணரலாம். யதார்த்தமாகவும் பரபரப்பாகவும் த்ரில்லாகவும் போய்க் கொண்டிருந்த படம், முடிவை நெருங்கும்போது 90’ஸ் கால படமாக முடிகிறது. வில்லன், திவ்யா, ஆனந்த் என அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வந்து ஒரு மேடை நாடகத்தனத்துடன் முடிவது போல் இருக்கிறது. தேடல் பிரதான வில்லனில் முடியும்போது, வில்லன் தன் வரலாற்றைப் பார்வையாளர்களிடம் நேரடியாகச் சொல்லுவதைத் தவிர்த்துக் காட்சிப்படுத்துவதோடு நிறுத்தியிருக்கலாம்.
BPD உள்ளவர்களால் உணர்ச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. நிலையற்ற உணர்ச்சியைக் கொண்டிருப்பதால், அவர்களை எளிதில் புரிந்து கொள்ள இயலாது. ஆகையால், இத்தகைய ஆளுமை ஒழுங்கின்மை உள்ளவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவார்கள். BPDஆல் பாதிக்கப்பட்ட திவ்யாவாக நடித்துள்ள நிமிஷா சஜயன் அசத்தியுள்ளார். கதை, நிமிஷா சஜயன்க்கும் அதர்வாவுக்கும் உள்ள பிணைப்பில் தொடங்கிக் குழந்தை காணாமல் போகும் படலத்திற்குச் சென்று பரபரவெனப் பயணித்து முடிகிறது.
படத்தில் அந்தப் பரபரப்பை ஏற்படுத்துவது ஒரு பாட்டியின் கதாபாத்திரம். நிதானமாகச் சென்று கொண்டிருக்கும் படத்தில் ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்திப் படத்தின் கனத்தையும் வேகத்தையும் கூட்டுகிறார். படத்தின் தொடக்கம் முதலே கதைக்குள் சென்றிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும், கதாபாத்திரங்களின் மனநிலைகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்தக் கூடுதல் நேரத்தை எடுத்துள்ளார் இயக்குநர். டாஸ்மாக்கில் பாட்டு, காதல் தோல்வி, குடும்பத்தினருடன் பிணக்கு போன்ற அந்தக் கூடுதல் நேரம், பின் பாதிக்கதைக்கு எந்த விதத்திலும் உதவாமல் விலகியே உள்ளது.
குழந்தையைத் தேடி அதர்வா ஓடி அலைந்தாலும், அந்தப் பதைபதைப்பைப் படத்திற்குள் கொண்டு வருவது நிமிஷா சஜயனும், காவலர் சின்னசுவாமியாக வரும் பாலாஜி சக்திவேலும்தான். அதர்வாவால் கனமான உணர்ச்சிகளை உள்ளபடிக்குத் தனது முகத்தில் கொண்டு வரமுடியாமல் சிரமப்படுகிறார். மகனைத் தொலைத்த தந்தையின் வலியை அற்புதமாகச் சொன்ன படமான ஷாமின் 6 கேண்டல்ஸ் நினைவில் மின்னிச் சென்றது. இயக்குநர் சாதுரியமாக, அதர்வா உடைந்து அழ வேண்டிய காட்சியில், அதர்வாவின் முகத்தைக் காட்டாமல் ஒரு வாகனத்தின் பக்கவாட்டில் முட்டி போட்டு அழுவதாகப் பாலாஜி சக்திவேலின் POVஇல் காட்டிவிடுகிறார். தலைப்புக்குள் வரும் 72 hours என்பதற்கான விளக்கம் அந்தக் காட்சிக்கு முன் வரும் வசனத்தில் சொல்லப்படுகிறது. 72 மணி நேரத்திற்கும் கதைக்கும் நேரடிச் சம்பந்தம் இல்லாதபோது, தலைப்பில் அதை வைத்தே ஆகவேண்டிய அவசியத்தை இயக்குநர் ஏன் உருவாக்கிக் கொண்டார் என்பது கேள்விக்குறி.
நெல்சன் வெங்கடேசனின் நான்கு படங்களுமே நான்கு வித்தியாசமான ஜானரைத் தொட்டுள்ளது. பார்டர் லைன் டிஸ் ஆர்டரையும், கணவன் – மனைவி அன்னியோன்யத்தையும் முதற்பாதியில் தொட்ட இயக்குநர், இரண்டாம் பாதியில் அதற்குள் போகாமல் த்ரில்லர் பேட்டர்னிலே கவனமாக இருந்துள்ளார். BPD ஆல் பாதிக்கப்பட்டவர்களிடம் எப்பொழுதும் பாதுகாப்பாற்ற மனநிலை மேலோங்கியிருக்கும். தனது குழந்தை காணோம் என்ற இழப்பில் தவிக்கும் திவ்யாவை, இரண்டாம் பாதியில் மருத்துவர் கருணாகரனிடம் தெரபிக்கு அழைத்துச் செல்வதாக ஷாட்ஸோ, அதர்வா அனுசரணையாக இருப்பதாகவோ காட்சிகள் வைக்கப்படவில்லை. வீட்டுக்கு வருகிறார், எதுவும் பேசாமல், வீட்டில் சாப்பிடாமல் மீண்டும் குழந்தையைத் தேடிச் செல்கிறார். இரண்டு வாரங்களுக்கு மேல் வளர்த்த குழந்தையையும், அதன் பெற்றோரிடம் ஒப்படைத்த பின்னர்தான் அதர்வா கொஞ்சம் மனமிறங்கி மனைவியை ஆதுரமாக அணைத்துத் தேற்றுகிறார். உடனடியாக இல்லாவிட்டாலும், தவறு செய்தவனுக்குக் கொஞ்சம் தள்ளியாவது தண்டனை கிடைத்தே தீரும் என்ற அறத்தை அழுத்தமாக முன்மொழிந்து ஒரு நிறைவைத் தந்துவிடுகிறது படம்.


