சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘போட்’ திரைப்படத்தில் யோகி பாபு, கௌரி கிஷன், சின்னி ஜெயந்த், குலப்புளி லீலா, எம்.எஸ். பாஸ்கர், சாம்ஸ், மதுமிதா, ஷாரா, மாஸ்டர் அக்ஷத் தாஸ் ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ஜெஸ்ஸி ஃபோக்ஸ்-ஆலன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு, ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். நடுக்கடலில் உருவான நெய்தல் நிலக்கதையான இப்படத்தை மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்பு தேவன் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் பிரபா பிரேம்குமார் மற்றும் சி. கலைவாணி தயாரித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா, ”சிம்பு தேவனுடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படைப்பு இது. ’24ம் புலிகேசி’ படத்தில் இணைந்தோம். அதற்காக விவாதித்துப் பாடல்களையும் உருவாக்கினோம். அவருடன் பணிபுரிந்த அனுபவம் இனிமையாக இருந்தது. அதன் பிறகு அவருடன் ஒரு குறும்படத்தில் இணைந்தேன். அதன் பிறகு இந்தப் படத்தின் கதையை விவரித்தார். கேட்கும்போதே எனக்கு ஆவலாக இருந்தது. ‘முழுவதும் கடல் தானா?’ எனக் கேட்டேன். அவர் ஆமாம் என்றார். அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் கடலுக்குள் சென்று தான் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்றார். ஆனால் அதன் பின்னணியில் இவ்வளவு கடினமான உழைப்பு இருக்கும் என்று எனக்குத் தெரியாது.
பாடலை உருவாக்கும்போது அவருக்குள் எப்போதும் இருக்கும் கவிதைத்தனம் எட்டிப் பார்க்கும். பார்த்திபன் சார் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணங்களில் பார்ப்பது போல் சிம்பு தேவன் ஒரு விஷயத்தை வித்தியாசமான கோணங்களில் பார்ப்பார். முதலில் கர்நாடக இசை பாணியில் ஒரு பாடல் என்றார். உடனே நல்லதொரு ராகத்தின் பின்னணியில் நேர்த்தியாக உருவாக்கலாம் என மனதிற்குள் நினைத்தேன். ஆனால் பாடல் வரிகள் சென்னை மக்களின் பேச்சு மொழியில் இருக்க வேண்டும் என்றார். அப்படித்தான் ‘சோக்கா..’ எனும் பாடல் உருவானது.
அடுத்த பாடலை உருவாக்கலாம் எனப் பேச தொடங்கிய போது, சென்னையில் இசை மொழியான கானா பாடலை உருவாக்குவோம் என்றார். ஆனால் இந்தப் பாடல் கர்நாடக இசையில் பயன்படுத்தும் ‘சரிகம’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும் என்றார். சிம்பு தேவனின் இந்த முரண்பாட்டை ரசித்தேன். இது சவாலாகவும் இருந்தது. ஏனெனில் இந்தப் பாடலை ‘பத்ம பூஷன்’ சுதா ரகுநாதன் பாடினார்கள். முதலில் அவரைத் தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறிய பிறகு அவர்கள் பாடச் சம்மதிப்பார்களா என்ற தயக்கம் எங்களுக்குள் இருந்தது. ஆனால் பாடலைக் கேட்டுவிட்டு, ‘இந்தப் பாடல் ராகத்தில் அழகாக அமைந்திருக்கிறது, நான் பாடுகிறேன்’ என்றார். அப்போதுதான் எங்களுக்குள் மகிழ்ச்சி ஏற்பட்டது.
இரண்டாவதாக கானா பாடல். கானா என்றவுடன் நம் அனைவரின் நினைவுக்கு வருவது இசையமைப்பாளர் தேவா தான். அவரைத் தொடர்பு கொண்டு விவரத்தைச் சொன்ன போது, அவரும் பாடலைக் கேட்டு விட்டு, மகிழ்ச்சியுடன் பாட ஒப்புக்கொண்டார்.
இந்த ரெண்டு பாடலில் பணியாற்றிய அனுபவம் தனித்துவமாக இருந்தது. சுதா ரகுநாதனின் பாடலுக்கு நடிகை கௌரி கிஷன் பொருத்தமாக இருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் எங்களை வியக்க வைத்தார்.
பின்னணி இசைக்காக படத்தின் காட்சிகள் என்னிடம் வந்தன. இதில் எதிர்பாராத விதமாக மிகப்பெரும் சவால் ஒன்று இருந்தது. படத்தின் தொடக்கத்தில் பத்து நிமிடம் வரை காட்சிகள் நிலத்தில் நடைபெறும். அதன் பிறகு கடலுக்குள் சென்று விடும். பிறகு கடலிலிருந்து கடைசி பத்து நிமிடத்தில் மீண்டும் கரைக்கு திரும்புவார்கள். மீதமுள்ள பெரும்பாலான காட்சிகள் கடலில் தான் இருக்கும். அதைப் பார்க்கும் போது எங்கே முற்றுப்புள்ளி வைப்பது, எங்கே தொடர் புள்ளி வைப்பது என்று தெரியாமல், சிம்பு தேவனைத் தொடர்பு கொண்டேன். பொதுவாக இட மாற்றங்கள் இசையமைப்பாளருக்கு உதவி புரியும். ஏதேனும் ஒரு இடையூறு இருக்கும் அல்லது பின்னணியில் மாற்றம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் எங்கு தொடங்குவது எங்கு முடிப்பது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் படத்தில் உணர்வு என்பது தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கும். அதிலும் அதில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் திறமையாக நடித்திருப்பார்கள். ஒருவருடைய நடிப்பிலிருந்து மற்றவர்கள் அதைப் புரிந்து கொண்டு பேசுவார்கள். அதைத் துல்லியமாக உணர்ந்து கொண்டு இதற்கு பின்னணி இசை அமைக்க வேண்டியதாக இருந்தது.
இந்தப் படத்தில் இயக்குநர் சிம்பு தேவனை ஒரு தயாரிப்பாளராகவும் பார்த்திருக்கிறேன். கடும் போராட்டத்திற்கு இடையே அனைவரையும் ஒருங்கிணைத்து தன்னுடைய கற்பனையைச் சாத்தியமாக்கி இருக்கிறார். அவரிடம் இருந்த பாசிட்டிவிட்டி பாராட்டத்தக்கது.
திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்க வேண்டிய ஒரு படம் இது. அதனால் அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசித்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.