Shadow

கோமாளி விமர்சனம்

comali-movie-review

ட்ரெய்லர் வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியை நீக்கி, நாஞ்சில் சம்பத்தை மாற்றாக அக்காட்சியில் கொண்டு வந்துள்ளது படக்குழு. அதோடு நில்லாமல், கீழே எழுத்தாக, கோமாளி படத்தில் இருந்து ரஜினி சம்பந்தப்பட்ட காட்சி நீக்கம் எனப் பதிந்து, படையப்பா ரஜினி செந்திலைக் கலாய்ப்பது போல் ரஜினி ரசிகர்களைச் சாமர்த்தியமாகக் கலாய்த்துள்ளது படக்குழு.

ஒரு விபத்தில் 16 வருடங்கள் கோமாவில் விழுந்து விடுகிறான் ரவி. அவன் அதிலிருந்து மீண்டதும், அசுர மாற்றம் அடைந்திருக்கும் அனைத்தையும் பார்த்துக் குழம்பி, ‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?’ என இந்த உலகத்தைப் பார்த்து கோமாளி போல் கேள்வி எழுப்புகிறான்.

கோமாளி ரவிக்குச் சொந்தமான சிலை ஒன்று, எம்.எல்.ஏ. தர்மராஜிடம் இருப்பது தெரிய வர, அதை மீட்டெடுத்து அவரால் அவரது குடும்பத்துக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பைச் சரி செய்ய முடிகின்றதா என்பதுதான் படத்தின் கதை.

முதல் பாதி ஜாலியாகப் போக, மனிதம் மனிதர்களை விட்டு இன்னும் அகலவில்லை என இரண்டாம் பாதியில் கொஞ்சம் நேரமெடுத்துப் பதிந்துள்ளனர். இதிலுள்ள ஒரே அவலம் என்னவெனில், பிசியாக ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் மனிதம் வெள்ளத்தின் பொழுது மட்டும் தான் எட்டிப் பார்த்தது என்பதைத் தவிர்த்து, வேறு சம்பவங்களின் மூலம் சொல்ல இயக்குநர்களுக்கு வாய்ப்பில்லாமல் போனதுதான். அது பதியப்பட வேண்டிய ஒரு முக்கியமான நிகழ்வு எனினும், ஹிந்து – முஸ்லீம் – கிறிஸ்துவர் எனச் செயற்கைத்தனமாகச் சொல்வதையாவது தவிர்த்திருக்கலாம். சென்னையைத் தாண்டியும் மக்கள் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றிணைகின்றனர் என்பதையும் கருத்திக் கொள்ளலாமே என்ற ஆதங்கம்தான்.

படத்தின் மையக்கரு மனிதம் பற்றிச் சொல்வதில்லை. ஆனால் நகைச்சுவைப் படம் என்றாலும், முடிவில் ஒரு மெஸ்சேஜ் சொல்லிவிடவேண்டும் என்ற இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கவனமாக இருந்துள்ளார். அதே கவனத்தை, பஜ்ஜி போடும் பெண்மணியின் இடுப்பில் கேமரா கோணத்தை வைத்ததிலும் காட்டியதுதான் இடறுகிறது. இயக்குநர்கள் இன்னும் பொறுப்புணர்வோடு இயங்குவது மிக அவசியம்.

நிகிதாவாக சம்யுக்தா ஹெக்டேவும், ரித்திகாவாக காஜல் அகர்வாலும் நடித்துள்ளனர். பிரதான நாயகி காஜல் அகர்வால்தான் என்றாலும், நிகிதாவிற்குத்தான் நடிக்க ஸ்கோப் உள்ள அழுத்தமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. பள்ளி மாணவியாக வரும் பொழுதும் சரி, ஒரு பெண் குழந்தையின் தாயாக வரும் பொழுதும் சரி, தானேற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார் சம்யுக்தா.

யோகி பாபுவைக் கலகலப்பிற்காக மட்டுமில்லாமல் ஒரு கதாபாத்திரமாகவும் பயன்படுத்தியுள்ளது சிறப்பு. ஹிப் ஹாப் தமிழாவின் படங்களில் நடிக்கும் சா ரா, இப்படத்தில் மருத்துவர் தியாகேஷாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகளில் திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஆயினும், மனைவி மீது சந்தேகப்படும் கதாபாத்திரமாக அமைத்துதான், இயக்குநரால் அச்சிரிபொலியைப் பெற முடிகிறது. 90’ஸ் கிட்ஸ்களின் மெச்சூரிட்டி அவ்வளவுதான் என இயக்குநர் சூட்சமமாக ரசிகர்களைக் கலாய்க்கிறாரோ என்னவோ?