Shadow

பிக் பாஸ் 3: நான் 54 – பாய்ஸ் டீமின் க்ரூப்பிசம்

bigg-boss-3---day-54---groupism-of-boys-team

‘மானாமதுரை மாமரக் கிளையிலே’ பாடலுடன் தொடங்கியது. ஆரம்பெல்லாம் நன்றாகத்தான் இருக்கு, ஆனால் ஃபினிஷிங் சரியில்லியேப்பா உங்களிடம். ‘நேத்து சொல்லாம தூங்க போய்ட்டீங்களே!’ என சேரனிடம் கேட்டாங்க லாஸ். “என் பொண்ணு எங்கிட்ட பேசாம இருக்கும் போது நான் சொல்லாம போனதுல தப்பில்லையே! நீ பேசறதுக்கு வரவும் மாட்டேங்கற. டைமும் கொடுக்க மாட்டேங்கற. பேசலாம், நிறைய பேசலாம்” எனச் சொல்லிவிட்டுப் போனார் சேரன். இதை அப்படியே பாய்ஸ் டீமிடம் சொன்னார் லாஸ். “உங்க அப்பா, ச்சேச்சே சேரன் சார் எனக்கும் குட்மார்னிங் சார்னு சொன்னாரு” என கவினும் சொன்னார். “சோ, அப்பான்னு கூப்பிட்டதுக்கே லாஸ் இப்ப வருத்தப்படறாங்க போல!” என அந்தப் பக்கம் வனிதாவிடம் ரிப்போர்ட் செய்தார் சேரன்.

“உங்கிட்ட கொஞ்சம் பேசணும் தம்பி” என தர்ஷனிடம் சொல்லும் சேரன், கொஞ்ச நேரத்தில் பேசவும் செய்தார். கொஞ்ச நேரம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. அப்பொழுது பார்த்து அங்கே மது வர, “வாங்க உக்காருங்க பேசலாம்” என சேரன் கூப்பிட்டார். அப்போ அவருக்குத் தெரியவில்லை. நாம் கூப்பிட்டது மதுவை இல்லை ஒரு ஏழரையை என!

மது முதலில் இருந்து பேச, தர்ஷன் எகிற, கையை வீசிக் கொண்டு நடந்து வந்த லாஸ், கத்திப் பேசிவிட்டு கேட் வாக் போக, கக்கூஸுக்குப் போய்க் கொண்டிருந்த கவின் வழக்கம் போல வந்து தன்னிலை விளக்கம் கொடுக்க, கடைசியில் சேரன் தலையில் அடித்துக் கொண்டு, ‘இது உனக்கு தேவையா?’என அவரே அவரைக் கேட்டுத் திட்டிக் கொண்டு போகவென ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சொல் புத்தியும் இல்லாமல் சுய புத்தியும் இல்லாமல் மக்கு மாதிரி பேசிக் கொண்டிருந்த மதுவிடம், “நீ யாருக்காக பேசறே?” எனக் கேட்டால், அபி, ஷெரின், சாக்‌ஷி என்கிறார். சாக்‌ஷி அங்கே இல்லை. அபியும் ஷெரினும் பாய்ஸ் டீம் பெர்ஃபாமன்ஸை ரசித்துக் கொண்டிருந்தனர். ‘அதனால நீ மூடிட்டு இரு’ எனச் சொன்னார் கஸ்தூரி.

இந்த சண்டையை முடித்த உடனே தர்ஷனிடம், “நீ என்ன பேசிருக்கணும்னா..” என மதுவுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார் சேரன். இட்ஸ் டூ லேட் சேரன் சார்!

இதற்கு நடுவில், ‘சமாதானம் பேசப் போறேன்’ என கவினிடம் போய் சண்டையை இழுத்துவிட்டு வந்தார் கஸ்தூரி. நேற்று சமையல் செய்றதைப் பற்றிகவின் கிண்டல் செய்ததற்கு, இன்று அவரைக் காண்டாக்கிவிட்டு வந்தார். பழிவாங்கிட்டாங்களாம். பழிக்குப் பழி, புளிக்குப் புளி. ஷ்ஷ்ப்பாஆஆ.!

இந்த வீட்டில் பேச வேண்டிய முக்கியமான பிரச்சினை க்ரூப்பிஸம் பத்தி தான். ஆனால் அதைப் பேச வேண்டிய நேரத்தில், ஆண்கள், பெண்கள் என பிரச்சினையை மடை மாத்தியது மது தான். இந்த சீசன் ஆரம்பத்ததுமே வனிதா தனக்கென ஒரு க்ரூப் உருவாக்கினார். அதை க்ரூப் எனச் சொல்வதை விட தனக்கு அடிமைகளாகத்தான் அவர்களை நடத்தினார். அபி, சாக்‌ஷி, ரேஷ்மா, ஷெரின் இப்படி நாலு பேர் இருந்தாலும், வனிதா கருத்துக்கு மறுபேச்சே இல்லை.

ஆண்கள் நடுவில் அப்படி இயற்கையாக எதுவும் அமையவில்லை. அதற்கான ஆரம்பப்புள்ளியாக இருந்தது, ‘எனக்காக ஏன் யாருமே பேசலை?’ என சரவணன் கோபப்பட்ட அந்த மொமென்ட் தான். அதற்கப்புறம் தான் சாண்டி, சரவணன், கவின் கூட்டணி அமைந்தது. மீரா கூட அதுல கொஞ்ச நாள் இருந்தார். தர்ஷன், லாஸ், சேரன் இவர்களெல்லாம் எதிலேயும் கலந்து கொள்ளாமல் இருந்தனர். சரவணனோட திடீர் வெளியேற்றத்தால மனம் உடைந்த சாண்டி, கவினுக்கு ஆறுதலாக இருந்த வகையில தர்ஷன், லாஸ் , முகின் எல்லோரும் உள்ளே வருகிறார்கள். சாக்‌ஷியின் வெளியேற்றத்துக்குப் அப்புறம் அந்தக் கூட்டணி இன்னும் வலுவாகிறது.

நாமினேஷனில் யார் பேரைச் சொல்றது, பெஸ்ட் பெர்ஃபாமர்ஸ்க்கு பேர் சொல்றது, வீட்டில் மற்ற முடிவுகள் எடுக்கும் பொழுதெல்லாம் பெரும்பான்மை கருத்து தான் ஜெயிக்கும். ஒரு க்ரூப்பாக இதைச் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் பாய்ஸ் டீம். வீட்டில் இருக்கிற மற்றவர்கள் கருத்து சொன்னாலும், அதை விவாதத்துக்குக் கூட எடுத்துக் கொள்ளாத நிலை தான் இருக்கு. ஒவ்வொரு வாரமும் டாஸ்க் முடிவில் பெஸ்ட் பெர்ஃபார்மர் தேர்ந்தெடுக்கும் போது, தன் தரப்பு வாதத்தை தெளிவாக எடுத்து வைக்கிறது சேரன் மட்டும் தான். ஆனால் அவர் சொன்னதைப் பற்றி விவாதமே செய்ய மாட்டார்கள். முதலில் பேசுவதால், சேரனை இங்கு கலகக்காரராகத்தான் பார்க்கறார்கள். சேரனுக்கு மட்டும் தான் இதைப் பற்றித் தெரிகிறது. ஏனெனில் அவர் தான் இதில் தொடர்ந்து பாதிக்கப்பட்டார்.

போன வாரம் வெற்றி வாய்ப்புள்ளவர்கள் யார் என கமல் கேட்ட போது, மூன்றாம் இடம் வருவது மது தான். அடுத்த நாள் நாமினேஷனில் சாண்டி, கவின் இரண்டு பேரும் மது பேரைச் சொல்கின்றனர். முடிந்து போன விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பேசறாங்க எனக் காரணம் சொன்னார்கள் (ஆனால் முடிந்து போன பிரச்சினையைப் பேசாதீங்க என அவங்களே சொல்றாங்க). இரண்டு பேரும் ஒரே மாதிரி தான் பேசினார்கள். அவங்க சொன்ன இன்னொரு பெயர் அபி.

க்ரூப்பாகக் கும்மியடிக்கிறதைப் பற்றி கமல் பேசுவாரா எனத் தெரியவில்லை. ஏற்கெனவே கொஞ்சம் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

சாக்‌ஷி ஸ்லோ மோஷனில் எவிக்சனை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது, ‘தலைகீழாகத்தான் குதிப்பான் இந்த கோட்டைச்சாமி’ என மீரா வெளியே போனார். ‘இந்த வாரம் நாம தான்!’ என அபியே தெரிந்து கொண்ட சமயத்தில் சமயத்தில் வான்ட்டடாக வந்து வண்டியில் ஏறியிருக்கார் மது.

‘என்னிடம் லாஸ் சுத்தமா பேசறது இல்ல’ என ஷெரினிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார் சேரன். ‘இந்த ரிலேஷன்ஷிப்லாம் வேண்டாம்னு தான் நான் ஆரம்பத்துலேயே சொன்னேன். ஆனா யாரும் கேக்கல’ என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

‘கருத்து வேறுபாடுகள் கண்டிப்பா இருக்கும். அதுக்காக ஏன் பேசாம இருக்கணும்?’ என சேரன் கேட்டது சரியான கேள்வி. அந்த நேரத்தில் சண்டை போடுகின்றோமா, முடிந்த உடனே அதை மறந்துவிட்டு சாதாரணமாகப் பேசிவிட்டு போய் விடவேண்டும். ஓர் ஆர்கியுமென்ட், ஒரு கருத்து வேற்பாடு, ஒரு சின்ன கோபம், ஒரு வருத்தம், இதெல்லாம் என்ட் ஆஃப் தி வேர்ல்ட் கிடையாது. ஒரே வீட்டில் இருப்பவர்களிடம், அதுவும் அப்பாவெனக் கூப்பிட்டு பாசமாக இருந்தவரிடம் ஈகோ பார்த்து இப்படி முகத்தைக் காண்பிக்கணுங்கிறது அவஷ்யம் இல்ல லாஸ்.

இதில் இன்னொரு கொடுமை என்னவெனில், பிரச்சினை முடிந்ததுக்குப் பிறகு மதுவிடம் பேசிக் கொண்டிருந்த சேரன், அவங்க என்னென்ன தப்பு செய்தார்கள் என்று தான் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் இதைப் பார்க்கிறவங்களுக்கு சேரன் சொல்லிக் கொடுத்து தான் மது பேசினார் என்று தான் புரிந்து கொள்வார்கள். அடுத்த வார நாமினேஷனில் பாய்ஸ் டீம் சேரன் பேரை தான் சொல்லுவார்கள்.

கேப்டன்சி டாஸ்கில் சேரனோட முழு சப்போர்ட்ல மது ஜெயித்தார். சேரன், ஷெரினைத் தவிர யாருக்கும் மூஞ்சியே இல்லை. கேப்டன் ஆன உடனே மதுவோட உடல்மொழில ஒரு மாற்றம் வந்ததா தோன்றியது எனக்கு மட்டும் தானோ?

ஹலோ ஆப் வழங்கிய ஒரு டாஸ்க். அபி தான் ஜெயித்தார். அவங்க பெர்ஃபாமன்ஸ் வேற லெவல்.

போன வாரம் சாக்‌ஷி ஒரு டாஸ்கில் ஜெயித்து, அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்தார். ஆனால் அந்த வாரமே வெளியே போய்விட்டார். அதே தான் மதுவுக்கும். இந்த வாரம் தப்பித்து வந்தாரெனில் இன்னும் ரெண்டு வாரம் கன்ஃபார்ம். பார்க்கலாம். என்ன நடக்கப் போகின்றதென!

மகாதேவன் CM