Shadow

பிக் பாஸ் 3: நாள் 53 – ‘வத்திக்குச்சி வனிதா. இதெப்படி இருக்கு!’ – தர்ஷன்

 bigg-boss-3 day-53

ஜனகனமன பாடலுடன் ஆரம்பித்தது நாள். சுதந்திர தினம் கொண்டாடுகிறார்களாம். கிச்சனில் சேரனுக்கும், மதுவுக்கும் விபூதி அடித்துக் கொண்டிருந்தார் வனிதா. அதைக் கேட்டுவிட்டுப் போன லாஸ் வெளியில் உட்கார்ந்து கொண்டிருந்த பாய்ஸ் அணியிடம் சொல்கிறார். ‘இது தெரிந்த விஷயம் தானே!’ என பாய்ஸ் டீம் சொல்ல, ‘என்னையும் இப்படி மாத்திட்டாங்களே!’ என லாஸ் சொன்னது ஆச்சரியம் தான். லாஸ் யாரைப் பற்றியும் பின்னாடி பேசுவது இல்லை. இப்ப அதையும் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்தக் கூட்டணி கிடைத்ததற்குப் பிறகு, லாஸ் நல்ல கான்ஃபிடென்ட்டாக இருக்கார். அநேகமாக தர்ஷன் தான் லாஸை உள்ள கூட்டிக் கொண்டு வந்திருப்பார் என நினைக்கிறேன். சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கிறதாலல், இப்ப தான் மற்றவர்கள் பிரச்சினைக்கு லாஸோட குரல் வெளியே வருகிறது. ‘எத்தனை நாளைக்கு?’ எனப் பார்க்கலாம்.

வெளியே நடக்கிறதைப் பற்றி ஹவுஸ்மேட்ஸ்க்கு சொல்லிக் கொண்டிருந்தார் வனிதா. பிக் பாஸைக் கிரிக்கெட்டோடு சேர்த்து ஸ்பூஃப் செய்ததைப் பற்றிச் சொன்ன வனிதா, ‘வெளியே போனா பாருங்க’ என சேரனிடமும், லாஸிடமும் சொல்ல, ‘நீங்க சொன்னாலும், சொல்லலைன்னாலும் நாங்க போய் பார்க்கத்தான் போறோம். நீ தண்ணியக்குடி தண்ணியக்குடி’ எனச் சொல்லிவிட்டார். ‘இந்த லாஸைப் பார்த்தியா? ஊமைக் கோட்டானா இருந்தவ இப்ப ஃப்ளோவுல கெட்ட வார்த்தை கூட பேசுவேன்னு சொல்றா’ என ஷெரினிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தார் வனிதா.

‘கருத்த மச்சான்’ பாடலை சிறைக்குள் இருந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி வரிகளை மாற்றிப் போட்டுப் பாடிக் கொண்டு இருந்தார் கஸ்தூரி. வாவ்.. இதை வைத்தே பாய்ஸ் டீமில் சேரலாம் அவர். கொஞ்சம் முயற்சி பண்ணலாமே கஸ்!

சேரன் மனதளவில் ரொம்பப் பாதிக்கபட்டிருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவரால் சின்ன பசங்களுக்கு சமமாகப் பழக முடியவில்லை. பாய்ஸ் டீம் ஒன் லைனரில் கலாய்க்கிறதை அவரால் ரசிக்க முடியவில்லை. ‘எங்க நம்மளையும் மோகன் வைத்யா மாதிரி ஆக்கிருவாங்களோ?’ என ஒரு பயம். அதனால் தான் விலகியே இருக்கிறார். இந்த வீட்டில் நடக்கற சம்பவங்களால், வெளியே அவர் மரியாதை போய்விடுமோ எனப் பயப்படுகிறார். ஆனால் வீட்டுக்குள் எல்லோரும் ஒன்னு தான், தனக்கு மட்டும் முக்கியத்துவம் கிடைக்காது என அவருக்கே தெரிகிறது. ஆனாலும் சில சமயத்தில் மரியாதையை எதிர்பார்க்கிறார். கடந்த சில நாட்களாக நடக்கிற பிரச்சினையில் பசங்க நடந்துகிறதைப் பார்த்து, இன்னும் அவரைத் தனிமைபடுத்திக்கலாம் என முடிவு பண்ணிவிட்டார் போல. கூடவே, ‘அப்பா’ எனக் கூப்பிட்ட லாஸ் கூட இப்ப அவரைக் கண்டு கொள்வதே இல்லை. இதெல்லாம் சேர்ந்து அவரை ரொம்ப பாதிக்கறதாகத் தெரிகிறது.

வீட்டில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கு. ஆனால் ஒரு சீனியர் என்கிற முறையில யாருமே அவரிடம் அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. தலைமுறை இடைவெளி இருந்தாலும், அவரிடம் கேட்ட பொழுதெல்லாம் தெளிவான ஆலோசனைகள் தான் கொடுத்திருக்கிறார். உதாரணமாக சாக்‌ஷி கேட்ட போது பேசினதைச் சொல்லலாம். ஆனால், ‘இப்ப நம்மளால எதுவும் செய்ய முடியலையே?’ என வருத்தமும் இருக்கு. தர்ஷனை, கவினை சார் எனக் கூப்பிட்டது கொஞ்சம் அதிர்ச்சி தான். அது தேவையில்லை தான். ஆனால் இங்க அவரோட எதிர்ப்பை எப்படிக் காண்பிக்கிறது? தனக்கும் கோபம் இருக்கு என எப்படி காண்பிக்கிறது. அதே சமயம் அவர் அப்படிக் கூப்பிட்டது தர்ஷனையோ, முகினையோ எந்த விதத்திலும் பாதிக்கவே இல்லை. அதையும் சொல்லிச் சிரித்துக் கொண்டு தான் இருந்தனர். ‘இவ்வளவு பெரிய மனுசன் திடீர்னு இப்படி கூப்பிடறாரே! ஏன்? எதுக்கு?’ என கேட்போமென்று யாருக்குமே தோன்றவில்லையே? இன்னொரு விதத்தில் யோசித்துப் பார்த்தால், கவின், தர்ஷன், சாண்டி இப்படி எல்லோருமே சினிமா சம்பந்தப்பட்ட நபர்கள் தான். சேரன் மாதிரியான ஒரு இயக்குநரோட மரியாதையைப் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் தேவையே இல்லாமல் அவரை புறக்கணித்துக் கொண்டு உள்ளனர். இதுவரைக்கும் அவரால் இங்க யாருக்குமே பிரச்சினை வந்தது கிடையாது. இன்னும் கொஞ்சம் மரியாதையாக அவரை நடத்தலாம். இதைப் பற்றி கமல் ஏதாவது சொல்லுவார் என எதிர்பார்க்கிறேன்.

அபிக்கு உடம்பு சரியில்லை, அதனால அவளை வெளியே கொண்டுவர பேசுங்க என மன்னரிடம் சொல்கிறார் ஷெரின். பிக் பாஸிடம் பேசியும் அவர் எதுவும் செய்யாததால், சாண்டி ஜெயிலைத் திறந்து அபியை வெளியே கூப்பிடுகிறார். அபி வர மறுக்கிறார். ‘என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கறேன்’ எனச் சொல்லியும், அபி வரமாட்டேன் எனச் சொல்லி விட்டார். ‘பிக் பாஸ் சொல்லாம ஜெயிலைத் திறக்க வேணாம்’ என்பதை சேரன் தன் கருத்தாகச் சொன்னார். அப்பொழுது அங்கே வந்த வனிதா, ஜெயிலுக்குள் நுழைந்து அபியை வலுக்கட்டாயமாக வெளிய்ரெ கூப்பிட, கடைசியில் பிக் பாஸே அபியின் தண்டனை முடிந்ததெனச் சொல்லி விட்டார்.

இது மாதிரி ஒரு பிரச்சினை வரும்போது, முடிவு எடுக்க தாமதம் செய்து, யார் யார் எப்படி ரியாக்ட் செய்யறாங்க எனப் பார்த்து, கண்டென்ட் பிடிக்கிறது எப்பவும் செய்வது தான். ஆனால் பெண்கள் உடல் ரீதியாக பிரச்சினை எனச் சொல்லும்போது, கொஞ்சம் சீக்கிரமாக முடிவு எடுக்கலாமே பிக் பாஸ்!!

சென்ற வார பிக்பாஸ் ஹோட்டல் லக்சரி பட்ஜெட் டாஸ்கில் எல்லோரும் சிறப்பாகச் செயல்பட்டதால், முழு பாயின்டும் கிடைத்தது.

கக்கூஸ் ஏரியாவில் ஒரு முழு பாட்டைப் பாடி அதகளம் பண்ணிக் கொண்டு இருந்தனர் பாய்ஸ் டீம். கூடவே லாஸ் இருந்தார். ரொம்ப நன்றாக இருந்தது.

‘சபாஷ்.. சரியான போட்டி’ என ஒரு டாஸ்க். ஆக்டிவிட்டி ஏரியாவில் ஆண்கள் அணி, பெண்கள் அணி எனப் பிரிஞ்சு அடித்துக் கொள்ளவேண்டும். சாரி பேசிக் கொள்ளவேண்டும்.

தெளிவான முடிவெடுப்பவர்கள் ஆண்களா? பெண்களா?
தைரியமானவர்கள் யார்?
சமையலில் சிறந்தவர்கள் யார்?
சிறந்த தலைவராக இருந்தது ஆண்களா? பெண்களா?

இப்படித் தலைப்பைக் கொடுத்து தங்களை டிஃபெண்ட் செய்யவேண்டும்.
ஆளாளுக்கு ஒவ்வொரு பாயின்ட் பேச, பல இடத்தில் எல்லோரும் ஒரே நேரத்தில் பேசி, கடைசியில் ஒன்றுமே புரியாமல் போனது.

ஒவ்வொரு தலைப்பிலும், எல்லோரும் பேசி முடித்த பிறகு கரெக்டான பாயின்ட்ஸ் எடுத்து வைத்தது சேரன் தான். தைரியமாகக முடிவெடுப்பவர்கள் பகுதில, சரவணன்-மீரா விஷயத்தை மேற்கோள் காட்டினதும், சாண்டி ஜெயிலைத் திறக்கப் போனதையும் சொன்னது செம்ம பாயின்ட்ஸ். அதே மாதிரி வனிதாவை, தர்ஷன் மட்டும் தான் எதிர்த்து பேசினாரென வனிதாவிடமே சொன்னதும் குட் ஒன். எல்லாத் தலைப்பிலும் அவர் நன்றாகப் பேசினார். ஆனால் எப்பவும் போல குறுக்கக் குறுக்கப் பேசி டென்ஷன் பண்ணிக் கொண்டிருந்தனர்.

சமையலில் சிறந்தவர்கள் யார் எனத் தலைப்பு முடிவுக்கு வராமல் இழுத்துக் கொண்டிருக்க, அப்ப டக்குனு எழந்த மது, ‘ஆண்கள் தான் சிறந்தவர் என வச்சுக்கோங்க, ஆனா இனிமே கஸ்தூரி தான் சமைப்பாங்க’ எனச் சொல்லவும், ஆண்கள் டீம் டோட்டல் சரண்டர்.

நாமினேஷன் பற்றிப் பேசி கவினை டென்ஷன் பண்ணினார் மது. தனக்காகப் பேசவில்லையெனச் சொல்லி முகினை டென்சன் செய்தார் அபி. ஓர் இடத்தில் உட்கார்ந்து பேசாமல் உலாத்திக் கொண்டே பேசி கடுப்புகளைக் கிளப்பினார் வனிதா. தலைப்பு முடிந்ததுக்குப் பின் தர்ஷனிடம் சண்டைக்குப் போக, அவருக்கு ஆதரவா பாய்ஸ் டீம் பேச, லோஸ்லியா மறுபடியும் வனிதாவை எதிர்த்துப் பேசினார்.

வெளியே வந்த உடனே வனிதா, பாய்ஸ் டீம் கூட ஜாலி பண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் ஒன்றும் புரில. அதை கஸ்தூரியும், சேரனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

முகின் அபியிடம் பேசி அழுது கொண்டிருந்தான். ‘நான் உன்னை எப்பவும் யூஸ் பண்ணலை. ஆனா இங்க எல்லாரும் தப்பா பேசறாங்க’ என தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

வனிதாவைப் பத்தி தர்ஷனும், லாஸும் பேசிக் கொண்டிருந்தனர். வனிதாவுக்கு வத்திக்குச்சி என பேர் வைத்துள்ளார் தர்ஷன். அடுத்து யாரிடம் போய் என்ன பற்ற வைக்கக் காத்துக் கொண்டிருக்கிறாரே தெரியவில்லை!

மகாதேவன் CM