Shadow

கனெக்ட் விமர்சனம்

மாயா, கேம் ஓவர் முதலிய படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கியுள்ள பேய்ப்படம். ரெளடி பிக்சர்ஸ் சார்பாக இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.

ஆன்னாவின் தந்தையான மருத்துவர் ஜோசஃப், கொரோனா காலத்தில் இறந்து விட, தன் தந்தையுடன் பேசவேண்டுமென்ற ஆசையில் ஒயிஜா போர்டின் உதவியோடு, ஆவியுலகத்தைத் தொடர்பு செய்ய முயல்கிறார். அந்தத் தொடர்பை உருவாக்கும் முயற்சி தவறுதலாகி (Wrong connection), தீங்கு விளைவிக்கும் கடவுளுக்கெதிரான சாத்தான் ஆன்னாவின் உடலில் ‘கனெக்ட்’ ஆகி விடுகிறது. அந்த சாத்தான் தனியாக ‘கனெக்ட்’ ஆகாமல் கொரோனாவயும் அழைத்து வந்து விடுகிறது. லாக்டவுனில், அதிலும் குறிப்பாக க்வாரென்டெயினில் மாற்றிக் கொள்ளும் நேரத்தில், அந்த துர் ஆவியை தன் மகளின் உடலிலிருந்து டிஸ் கனெக்ட் செய்ய, ஆன்னாவின் அம்மா சூசன் எப்படிப் போராடுகிறார் என்பதே பட்த்தின் கதை.

சிறுமி ஆன்னாவுக்கும், அவளது தந்தைக்குமான பாசம்தான் கதை தொடங்கும் இழை. அதை அழுத்தமற்று ஏனோதானோ எனக் கடந்துவிடுகின்றனர். இப்படி படத்தின் மையக் கதாபாத்திரங்களின் அறிமுகங்களையே வலுவாக காட்சிப்படுத்தத் தவறியுள்ளனர். கதை, இப்படி மேம்போக்காக பல இடங்களில் கடப்பதால், படம் பார்வையாளர்களுடன் கனெக்ட் ஆக மிகவும் சிரமப்படுகிறது. ஆன்னாவிற்கு உதவும் மர்ம பெண் யாரென்ற தெளிவும் இல்லை. ‘பணத்திற்காக ஆசைப்பட்டு சிலர் கடவுளுக்கு எதிரான சாத்தானை எழுப்பி விடுகின்றனர்’ என ஒரு வசனத்தால் கடக்கின்றனர். அந்த சாத்தானுக்கும், மர்ம பெண்ணுக்குமான தொடர்பு எத்தகையது என்றும், அப்படி துர் ஆவியை எழுப்புவதால் அம்மர்ம பெண்ணிற்கு என்ன லாபம் என்றும் தெரியவில்லை.

டெக்னிக்கல் பிரில்லியன்சியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரியின் ஒளிப்பதிவும், சிவசங்கர் மற்றும் ஸ்ரீராமனின் கலை இயக்கமும், விஷுவல்களை ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையில் மிரட்டியிருந்தாலும், படத்துடனான டிஸ் கனெக்ஷனுக்கு இசையமைப்பாளர் பிரித்வி சந்திரசேகரும் ஒரு காரணம். படம், ஒரு பாடலில் இருந்து தொடங்குகிறது. அந்தப் பாடலும், அதன் மான்டேஜஸும் அந்நியமாக இருப்பதால், முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறிவிடுகிறது.

பாதிரியார் ஆகஸ்டினாக அனுபம் கெர் நடித்துள்ளார். சாத்தான் அடிக்கடி நெட்டை டிஸ்கனெக்ட் செய்தாலும், விடாது முயற்சி செய்து ஆன்லைனிலேயே அதை ஓட்டி விடலாமென ரிஸ்க் எடுக்கும் ஸ்திர பிரக்ஞராக வருகிறார். நிழல்கள் ரவியின் பின்னணிக் குரலில், அதிசயமாய் ஆகஸ்டின் மட்டும் கனெக்ட் ஆகிவிடுகிறார். ஆன்னாவாக ஹனியா நஃபிஸா அறிமுகமாகியுள்ளார். முதல் ஃப்ரேம் முதலே, தனது தாயுடன் முழு டிஸ் கனெக்டில் உள்ளார். ஆன்னாவின் அம்மா சூசனாக நயன்தாராவும், தாத்தா ஆர்தராக சத்யராஜும் நடித்துள்ளனர், அப்பா ஜோசஃபாக வினயும் நடித்துள்ளனர். நட்சத்திரங்களுக்கு எதற்கு வலுவான அறிமுகமென நினைத்து, கதாபாத்திரங்களின் அறிமுகத்தின் பொழுது அலட்சியமாக இருந்துள்ளனர்.

கையில் சிலுவையுடன் நின்றவாறு அழுவதைத் தாண்டி, தனது மகளைக் காக்கும் முயற்சியில் வேறெந்த ரிஸ்கும் எடுக்காத, மதச்சடங்குகளில் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் சேஃப் அம்மாவாக நயன்தாரா இருப்பதும், படத்தின் மிகப் பெரிய மைனஸ். பேய்ப்படங்களுக்கே உரிய திடுக்கிட வைக்கும் சில தருணங்களும் படத்தில் உள்ளன. ஆனாலும், கேம் ஓவர் படத்தில், திரைக்கதையின் மூலம் மாயம் செய்திருந்த மருத்துவர் காவ்யா ராம்குமாரும், அஷ்வின் சரவணனும், அந்த மேஜிக்கை இப்படத்தில் நிகழ்த்தத் தவறியுள்ளனர்.