A சான்றிதழ் பெற்றுள்ள படம்.
கல்லூரி முடித்த மூன்று இளைஞர்களையும், கல்லூரியில் சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளையும் சுற்றிப் படத்தின் கதை நடக்கிறது. இளைஞர்களின் வாலிப பொழுதுபோக்கு ஒரு பக்கம்; உடுத்தும் உடையாலும், உபயோகப்படுத்தப்படும் கம்மி விலை கைப்பேசியாலும் அல்ட்ரா மாடர்ன் பெண்களால் இளக்காரமாக நடத்தப்படும் மிடில் கிளாஸ் & மெரிட் மாணவிகளின் மன இறுக்கமும், அவர்களது ஆடம்பர வாழ்விற்கான ஏக்கமும் ஒரு பக்கம் என இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் இணைகின்றன.
முதற்பாதி படத்தின், தூக்கலான இரட்டை அர்த்த வசனங்களுக்கும், மாடி வீட்டு ஷாலுவின் வசன உச்சரிப்பு த்வனிக்கும் தாராளமாக A+ என சிறப்புச் சான்றிதழே அளிக்கலாம். படத்தின் முதற்பாதியை இதற்கென்றே ஜாலியாக ஒதுக்கியுள்ளனர். இரண்டாம் பாதியில், சுதந்திரம் என்பது எதுவரை இருக்கவேண்டுமென இளம்பெண்களுக்கு ஓர் அட்வைஸோடு முடித்துள்ளார் அறிமுக இயக்குநர் பெருமாள் காசி.
மதன்குமார், விக்னேஷ், ஹரீஸ்குமார் என படத்தில் மூன்று பிரதான பாத்திரங்களில், டான்சர் விக்னேஷை மட்டும் பல படங்களில் பார்த்திருக்கலாம். பிரபலமான பல பாடல்களில், நாயகனுக்குப் பின்னால் மிக ஆத்மார்த்தமாக ஆடிக் கொண்டிருக்கும் ஒரு முகத்திற்குச் சொந்தக்காரர் (ஒன்பது வருடங்களுக்கு முன், அவரைப் பற்றிய ஓர் ஆருடத்தை எழுதியிருந்த எழுத்தாளர் டக்ளஸின் குறிப்பு நினைவில் எழுந்தது). நகைச்சுவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார் எனும் தோற்றத்தைப் படத்தின் முதற்பாதி கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் நாயகனாகத் தனித்துப் பரிணமிக்கிறார்.
K.M.ரயானின் இசையில் ஒரு ஜாலியான பாடலுடன் படம் தொடங்குகிறது. ‘உலகமே இதைத்தான் கொண்டாடுது, ஊருக்குப் பயந்தா என்னாவது?’ எனும் பாடல் வரியைப் படத்தின் போக்கைப் பற்றி இயக்குநரின் கட்டியங்கூறுதலாக எடுத்துக் கொள்ளலாம். நிரஞ்சனா, ஜீ.வி.அபர்ணா, சாய் தன்யா, ஹாசின், சாருமிசா என நான்கு கதையின் நாயகிகள் நடித்துள்ளனர். பொருளாதார ஏற்றத்தாழ்வினால் ஏற்படும் இளக்காரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவர்கள் எடுக்கும் விபரீத முடிவு, அவர்களை எங்குக் கொண்டு செல்கிறது என்பதும், அதிலிருந்து எப்படி மீண்டனர் என்பதே படத்தின் இரண்டாம்பாதி.
என்ஜாய், ஜாலியானதொரு அடல்ட் மூவி என்ற படவகைமையை ஏற்றுக் கொள்ள முடிந்தவர்களுக்கானது மட்டும்.