யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் B.யுவராஜ் தயாரிப்பில், இயக்குநர் பிரதாப் இயக்கத்தில், நடிகர் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு நடிப்பில், குடும்பங்களோடு கொண்டாடும் கலக்கலான நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள படம் “பேபி & பேபி” ஆகும்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் நகைச்சுவைக் கலாட்டா தான் இந்தப் படம்.
தயாரிப்பாளர் யுவராஜ், “எனக்குத் தொழில் சினிமா இல்லை. ஆனால் சினிமா மீது சிறுவயதிலிருந்தே எனக்கு ஆர்வம். இயக்குநர் பிரதாப் சொன்ன கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே தயாரிக்கலாம் என இறங்கினோம். படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல படத்தை தமிழ்த்திரைத்துறைக்குக் கொடுத்துள்ளோம் எனத் திருப்தியாக உள்ளது. இமான் சார் அற்புதமாக இசையமைத்துள்ளார். அவருக்கு இப்படத்தில் இசை வள்ளல் எனப் பட்டம் தந்துள்ளோம். ஜெய் சார், சத்யராஜ் சார், யோகிபாபு சார் என எல்லோரும் மிகவும் ஆதரவாக இருந்தார்கள். வெளியிலிருந்து பார்க்க சினிமா ஈஸியாகத் தெரிகிறது. திரைத்துறைக்குள் வந்த பின் தான், இங்குள்ள கஷ்டம் தெரிகிறது. பிரதாப் சொன்ன கதையால் தான் இந்தப்படம் நடந்தது. அவருக்கு நன்றி. பிப்ரவரி 14 ஆம் தேதி இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
நடிகை பாப்ரி கோஷ், “நான் தொலைக்காட்சியில் நடித்து வந்தேன். இந்தப் படத்தில் சத்யராஜ் சாருக்கு மகளாக நடித்துள்ளேன். அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன். யோகிபாபு சாருடன் விஸ்வாசம் படத்திலேயே நடித்துள்ளேன். இப்படம் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. கீர்த்தனா மேடமுடன் ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருந்தது. ஜெய், பிரக்யா நிறைய ஆதரவு தந்தார்கள்” என்றார்.
பழைய ஜோக் தங்கதுரை, “கண்ணுக்கு மையழகு இந்தப் படத்துக்கு ஜெய் அழகு. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவருடன் நடித்தேன். இப்போது தான் மீண்டும் நடித்துள்ளேன் நன்றி. தெலுங்குல மகேஷ்பாபு மாதிரி, தமிழுக்கு யோகிபாபு. அவர் மாஸாக நடிப்பார், இவர் கிளாஸாகக் காமெடியில் அசத்துவார். சத்யராஜ் சார் எல்லா கேரக்டரிலும் அசத்திவிடுகிறார். நிறைய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். மொட்டை ராஜேந்திரன் சாருடன் எனக்குக் காம்பினேசன் காட்சிகள் ஜாலியாக வந்துள்ளது” என்றார்.
நடிகை கீர்த்தனா, “நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்துள்ளேன், முதலில் ஜெய் அம்மா என்றவுடன் தயங்கினேன். சத்யராஜ் சாருக்கு ஜோடி என்றவுடன் ஒகே சொல்லிவிட்டேன். எனக்கு நல்ல கேரக்டர், பேபியை வைத்து அழகாகக் கதை சொல்லியுள்ளார்கள்” என்றார்.
இசையமைப்பாளர் இமான், “இசை வள்ளல் டைட்டில் கொஞ்சம் ஓவர் தான். அன்பால் தந்துள்ளார்கள் நன்றி. இப்படம் ஆரம்பிக்கும்போது இருந்த பாஸிட்டிவிட்டி படம் முழுக்க இருந்தது. படம் முழுக்க நிறைய நட்சத்திரங்கள். இத்தனை பெரிய நடிகர்கள் முதல் படத்தில் கிடைப்பது அரிது. அதை மிகச்சரியாகப் பயன்படுத்தி, அனைவரும் கொண்டாடும் வகையில், சிரித்து மகிழும் படமாகத் தந்துள்ளார் பிரதாப். யோகிபாபுவை கேரக்டர் ரோலில் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.