Shadow

“தண்டேல் கதைக்கு 20 பேரிடம் உரிமம் வாங்கினோம்” – அல்லு அரவிந்த்

நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ”நான் சென்னையில் தான் படித்தேன். பிழைப்பிற்காகத்தான் ஹைதராபாத் சென்றேன். நுங்கம்பாக்கம் கேசரி பள்ளியிலும், சென்னை அரசு கலைக் கல்லூரியில் தான் பட்டப் படிப்பினை படித்தேன். அதன் பிறகு சட்டக் கல்லூரியில் சட்ட படிப்பினை படிக்கத் தொடங்கினேன். இரண்டு வருடத்திற்கு பிறகு தொடர்ந்து படிக்காமல் வெளியேறி விட்டேன்.

இயக்குநர் சந்து அற்புதமான திறமைசாலி. நேர்த்தியாக உழைத்துத் தண்டேலை உருவாக்கி இருக்கிறார். கதை சிறியது தான். ஆனால் அதனை அவர் வழங்கிய விதம் சிறப்பானது. இந்தப் படத்தின் கதைக்காக 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி இருக்கிறோம். அந்த 20 பேரும் பாகிஸ்தானுக்குச் சென்று அங்குள்ள சிறையில் கைதியாக இருந்து அதன் பிறகு விடுதலையானவர்கள். அவர்களின் கதை இது. இயக்குநர் அதனை இரண்டு மணி நேர கதையாக விவரித்திருக்கிறார். இந்தக் கதையை அற்புதமான படைப்பாக உருவாக்கியதற்காக இயக்குநர் சந்துவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் எனக்கு மகன் போல. அவரைச் சிறிய வயதில் இருந்தே எனக்குத் தெரியும். அவரிடம் இங்கிருந்தே ஒரு கேள்வியை கேட்கிறேன். ‘எப்படிடா இப்படி 25 வருடமாகத் தொடர்ந்து ஹிட் பாடல்கள் வழங்கிக் கொண்டிருக்கிறாய்?”’ என்றார்.