32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“தண்டேல் படத்தின் நாயகர்கள்: ஸ்ரீகாகுளம் மீனவர்கள்தான்” – நாக சைதன்யா

Dinesh R சேலம் Published: 01/02/2025 3 நிமிட வாசிப்பு அயல் சினிமா
எழுத்து அளவு:

நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு , நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

நடிகர் நாக சைதன்யா, ”சென்னை எனக்கு எப்போதும் ஸ்பெஷலானது. சென்னை ரசிகர்களின் அன்பிற்காகவும் ஆதரவிற்காகவும் எப்போதும் காத்துக் கொண்டிருப்பேன். இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டதற்காக நடிகர் கார்த்திக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடிப்பில் வெளியான ‘மெய்யழகன்’ படத்தைத் திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறேன். அதில் அவருடைய உணர்வுபூர்வமான நடிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன். அப்பா என்னிடம் எப்போதும் சொல்வார். ‘சென்னைக்குச் செல்கிறாய் என்றால் சொல். கார்த்திக்கு ஃபோன் பண்ணி சொல்லி விடுகிறேன்’ என்று. அந்த அளவிற்கு கார்த்தி எங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர்.

தண்டேல் படத்தின் தொடக்கம் என்பது, இயக்குநர் சந்து என்னைச் சந்தித்து உண்மைச் சம்பவத்தை ஒரு சின்ன ஐடியாவாக டாக்குமென்டரி ஸ்டைலில் சொன்னார். ஸ்ரீகாகுளம் எனும் கிராமத்தில் இருந்து குஜராத்திற்கு சென்று அதன் பிறகு ஒன்றரை வருஷம் பாகிஸ்தானுக்குச் சென்று திரும்பவும் வருவது என ஒரு பெரிய நீண்ட பயணம் இதில் இருக்கிறது. அந்த உண்மைக் கதையை கேட்டவுடன் ஒரு நடிகராக நான் ஆச்சரியமடைந்தேன்.

அதன் பிறகு ஸ்ரீகாகுளம் சென்று அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடத்தில் பழகி அவர்களுடைய வாழ்வியல் முறையைத் தெரிந்து கொண்டேன்.‌ அந்தப் பயணம் மறக்க முடியாதது . அந்த அனுபவமும் மறக்க முடியாதது.

இது போன்ற வாய்ப்பு மிகவும் அரிதாகத்தான் கிடைக்கும். இதற்காக என்னை நான் மாற்றிக் கொண்டேன்.‌ இது போன்ற கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்பதால் இதனை உருவாக்கி இருக்கிறோம். ஸ்ரீகாகுளம் மீனவர்கள் தான் இப்படத்தின் உண்மையான நாயகர்கள்.

தயாரிப்பாளர்கள் பன்னி வாஸ் மற்றும் அல்லு அரவிந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மூன்றாவது படமான 100% லவ் படத்திற்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்துடன் இணைந்து இருக்கிறேன். இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஒவ்வொரு லவ் ஸ்டோரி திரைப்படத்திலும் பாடல்கள் ஹிட்டாக அமைய வேண்டும். இதிலும் ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த ப்படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசையமைக்காமல் அந்தப் பாடல்களை காட்சிப்படுத்தும் போதும் படப்பிடிப்புத் தளத்திற்கு வருகை தந்து உற்சாகப்படுத்தினார்.

சாய் பல்லவி அனைவரும் சொல்வது போல் எனக்கும் அவர் ஸ்பெஷலானவர். ஒவ்வொரு நடிகரும், ஒவ்வொரு இயக்குநரும், ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் உங்களைப் பற்றி பேசுவார்கள். அனைவரும் உங்களுடைய ரசிகர்கள் தான். உங்களுடன் பணியாற்றுவது இனிமையான அனுபவம். அவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தமிழில் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரும் நானும் பல கதைகளைப் பேசி இருக்கிறோம். விரைவில் இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்.

கருணாகரனுடன் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அவருடைய பங்களிப்பு நன்றாக இருந்தது. அவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.