
நாக சைதன்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தண்டேல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இப்படத்தின் தமிழ் முன்னோட்டத்தைச் சென்னையில் நிகழ்பெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நடிகர் கார்த்தி வெளியிட்டார். படத்தின் ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, நாக சைதன்யா, சாய் பல்லவி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ் – வெங்கட் பிரபு, நடிகர் கருணாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தண்டேல்’ திரைப்படத்திற்கு, ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்தத் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நடிகர் கார்த்தி, “இது எனக்கு முக்கியமான மேடை. தெலுங்கு திரையுலகிலிருந்து எனக்கு ஏராளமான அன்பு கிடைத்திருக்கிறது. அந்த அன்பைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்.
இங்கு வந்த பிறகுதான் நாக சைதன்யா என்னிடம், இந்தக் கதை 2018 ஆம் ஆண்டில் நடந்த உண்மைச் சம்பவம் என்று சொன்னார். கேட்பதற்கு இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. நம் ஊரில் மீன் பிடிக்கும் மீனவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குச் சென்று மாட்டிக் கொள்கிறார்கள். இவர்கள் குஜராத்திற்குச் சென்று படகில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்று மாட்டிக் கொள்கிறார்கள் என்றார். பிறகு அங்கிருந்து எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதை ஒரு அழகான காதல் கதையாக இந்தத் திரைப்படம் சொல்லி இருக்கிறது.
எவ்வளவு பெரிய த்ரில்லாக இருந்தாலும், அது டைட்டானிக்காக இருந்தாலும் அதற்குள் ஒரு லவ் ஸ்டோரி தேவைப்படுகிறது. அந்த லவ் தான் மனதில் நிற்கிறது. 20 பேரிடம் ரைட்ஸ் வாங்கி அதை ஒரு அழகான காதல் கதையாக உருவாக்கி வழங்கியிருக்கிறார்கள் என்றால் இந்தக் கதை மீது தயாரிப்பாளர் எவ்வளவு நம்பிக்கை இருக்க வேண்டும். இந்தப் படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே இந்தப் படத்தை இந்தியா முழுவதும் நம்பிக்கையுடன் வெளியிடுகிறார்கள்.
இயக்குநர் சந்து மொண்டேட்டி இதற்கு முன் இயக்கிய படங்களும் வெற்றிப் படங்கள்தான். கடல் பின்னணியில் நிறைய படங்களை பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் ஒரு புதிய அனுபவத்திற்குத் தயாராகி இருக்கிறோம்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் திரை உலகில் பீஷ்மரைப் போன்றவர். திரை உலகிற்குத் தயாரிப்பாளர்கள் வருவார்கள். செல்வார்கள். நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது கடினம். பெரிய பெரிய நிறுவனங்களே படத் தயாரிப்பு வேண்டாம் என நிறுத்திவிட்டார்கள். இந்தச் சூழலில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வருகிறார் அல்லு அரவிந்த். அவர் சினிமாவில் படங்களை வியாபார நுணுக்கங்களுடன் தயாரிக்கிறார். அவர் தேவி ஸ்ரீ பிரசாத்தைப் பார்த்து, ‘எப்படிடா இத்தனை ஆண்டுகளாக ஹிட்டு கொடுக்கிறாய்? எனக் கேட்கிறார். அதை போல் நான் அவரைப் பார்த்து, ‘எப்படி சார் தொடர்ந்து ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்?’ என க்கேட்கிறேன். அவர் வேறு வேறு ஆட்களுடன், வேறு வேறு கூட்டணியுடன், தொடர்ந்து படங்களைப் பெரு விருப்பத்துடன் தயாரித்து வருகிறார். எல்லா மொழிகளிலும் படங்களைத் தயாரித்திருக்கிறார். சினிமா மீதான அவருடைய பற்று எனக்கு இன்று வரை ஆச்சரியத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்ப் படங்களை தெலுங்குத் திரையுலகிற்கு எடுத்துச் சென்று விளம்பரப்படுத்தும் போது அவர் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டே இருப்பார். ஒரு தயாரிப்பாளர் என்றால் எப்படி இருக்க வேண்டும், அவருடைய படத்தை எவ்வளவு நேசிக்க வேண்டும், படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும், நடிகர் நடிகைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், படத்தை தயாரிக்கத் தொடங்கியதில் இருந்து அந்தத் திரைப்படத்தை ரசிகர்களுக்காகத் திரையரங்கத்திற்கு கொண்டு சேர்க்கும் வரை எப்படி உழைக்க வேண்டும் என்பதனை அவரைப் பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். அவரை எனக்குத் தெரியும் என்பதிலேயே நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நான் துருக்கி நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கும் டிஎஸ்பி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. இதுதான் அவருக்குக் கிடைத்திருக்கும் புகழ். அவர் எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார். அவருடைய ஸ்டுடியோவுக்கு சென்றால், இசையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டே இருப்பார். எல்லா இசையமைப்பாளர்களுக்கும் காதல் கதை கிடைத்து விட்டால் போதும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள். இந்தத் திரைப்படத்திலும் டிஎஸ்பி தன் திறமையை வெளிப்படுத்தி அனைத்து பாடல்களையும் ஹிட் ஆக்கி இருக்கிறார்.
சாய் பல்லவி மிகவும் ஸ்பெஷல் ஆனவர். அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தன் திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார். காதலிப்பதாகட்டும் அதில் காதலைக் கொட்டித் தீர்ப்பார். இதனாலேயே இளைஞர்கள் எல்லாம் உங்கள் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். நடனம் சொல்லவே வேண்டாம். வலியைக் கடத்துவதாக இருந்தாலும் அதிலும் முத்திரை பதிக்கிறீர்கள். வயதிற்கு மீறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் அனுபவமும் வித்தியாசமாக இருக்கிறது.
அமரன் படம் பார்த்துவிட்டு உங்களிடம் பேசியிருக்கிறேன். ஒரு ராணுவ அதிகாரியின் மனைவியின் தியாகம் என்ன என்று பொதுமக்களுக்கு தெரியாது. அதை அமரன் படத்தில் நீங்கள் விவரித்திருந்த விதம் அவர்களின் வலியை எங்களுக்குப் புரிய வைத்தது. இதற்காக நன்றி.
நாக சைதன்யாவின் தாத்தாவை எனக்குத் தெரியும். அவரைத் தொடர்ந்து நாகார்ஜுனாவைத் தெரியும். அவர் ‘இதயத்தை திருடாதே’ படத்தைப் பார்த்த பிறகு, அவரைப் போல் டிரஸ் செய்து கொள்வது, அதேபோல் ஓடுவது
என பல முயற்சிகளைப் பலரும் செய்தார்கள். ஆனால் அவர் செய்த ஸ்டைலில் யாராலும் செய்ய முடியவில்லை. அவரைப் போல் அழகாக பேசவும் தெரியாது. அவருடன் தெலுங்கு திரைப்படத்தில் பணியாற்றிருக்கிறேன்.
நான் அங்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார். அவ்வளவு அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். அன்பைப் பொழிவதில் தன்னிகரற்றவர். அவருடன் பணியாற்றி 10 வருடங்கள் ஆகிவிட்டது. இருந்தாலும் தற்போது நான் என்ன படம் செய்து கொண்டிருக்கிறேன் என்பதை அறிந்து வைத்திருப்பார். அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று சொல்வார். படம் பார்த்துப் பிடித்து விட்டால் உடனடியாக ட்வீட் செய்வார். இது போல் எனக்காக எப்போதும் அன்பு காட்டி வரும் அவருக்கு நான் திருப்பி என்ன செய்வதென்று தெரியவில்லை.
நாக சைதன்யாவை முதன் முதலில் திரையில் பார்த்த போது, ‘கூச்ச உணர்வு உள்ள ஒரு இளைஞரை அழுத்தம் கொடுத்து நடிக்க வைக்கிறார்களோ!’ என தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் ஒரு அப்பாவித்தனம் தெரியும். அந்த அப்பாவித்தனத்தை தான் ஏராளமான பெண்கள் ரசிக்கிறார்கள். அவருடைய அப்பாவித்தனமும் பிடித்தது. அவருடைய அப்பாவையும் பிடித்தது. அவருடைய தாத்தாவையும் பிடித்தது.
நாக சைதன்யா கடுமையாக உழைப்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படத்தில் அவருடைய வளர்ச்சி தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்காக ஒன்றரை ஆண்டு காலம் தன் உடலமைப்பையும் மாற்றி நடித்திருக்கிறார். உழைப்பு ஒரு போதும் வீண் போகாது. உங்களுடைய கடும் உழைப்புக்கு இந்தப் படம் சரியான பரிசை வழங்கும். இந்தப் படம் தமிழிலும் பெரிய வெற்றியைப் பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்.
விவேகா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஹிட்டான பாடல்கள், சாய் பல்லவி திரைத்தோற்றம், உண்மைச் சம்பவம், புது ஐடியா என பல பாசிட்டிவ்வான விசயங்கள் இருப்பதால் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெரும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.