உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
ஏப்ரல் 21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர்கள் உதயகுமார், வத்சன் வீரமணி, நாயகன் விமல், நடிகர் பாண்டியராஜன், நடிகை அனிதா சம்பத், நடிகை தீபா சங்கர், நடிகர் கிச்சா ரவி, பாடலாசிரியர் அருண் பாரதி, படத்தொகுப்பாளர் இளையராஜா, இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் உதயகுமார், ” ‘தெய்வ மச்சான்’ எனும் இந்தத் திரைப்படத்தை எங்களுடைய உதய் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனமும், மேஜிக் டச் பிக்சர்ஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறோம். கிராமத்துப் பின்னணியிலான முழு நீள நகைச்சுவை திரைப்படமாகத் தயாராகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசித்து சிரித்து அனுபவிப்பார்கள். இந்தத் திரைப்படம் நடிகர் விமலுக்கு ‘விலங்கு’க்குப் பிறகு பெரிய வெற்றி படமாக அமையும். இந்தத் திரைப்படத்தில் பாண்டியராஜன், அனிதா சம்பத், தீபா சங்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள்” என்றார்.
நடிகர் பாண்டியராஜன், ”மச்சான் என்ற ஒரு வார்த்தையில் அற்புதமான ஒரு உறவொன்று இருக்கிறது. மனைவியின் தம்பி அல்லது அண்ணன். தூத்துக்குடி பகுதியில் மீனவர்கள் முத்து குளிக்க கடலுக்குள் இறங்கும்போது இடுப்பிற்குள் கயிறு கட்டி கடலுக்குள் குதிக்கும் முன், அதன் மறுமுனையை மச்சான் எனும் உறவின் முறையில் இருப்பவரிடம் தான் நம்பிக்கையுடன் அளித்துவிட்டு குதிப்பர். கடலுக்குள் முத்துக்காகக் குதித்தவருக்கு முத்து கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும் கயிறை இழுத்து விட, அதன் நுட்பம் அறிந்து கடலுக்குள்ளிருந்து மேலே வரவழைப்பவர் மச்சான்.
இதே தருணத்தில் அண்ணன் – தம்பி என்ற உறவாக இருந்தால், சொத்து விசயத்தில் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகக் கடலுக்குள் குதித்தவரைக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவர். ஆனால் மச்சான் என்ற உறவு தான், தன் தங்கையின் தாலி பாக்கியம் நீடித்து நிலைக்க வேண்டும் என்ற பரிதவிப்புடன் நுட்பமாகக் கவனித்து கடலுக்குள் குதித்தவரைக் காப்பாற்றுவர். அந்த வகையில் மச்சான் என்ற உறவு அழுத்தமானது. மேலும் தெய்வ மச்சான் என்பது அதை விடச் சிறப்பானது.
ஒரு முறை நண்பர் ஒருவருக்குத் திருமண பத்திரிகையை வைத்து அழைப்பு விடுத்தார் மற்றொரு நண்பர். அந்த நண்பர் பத்திரிகையில் உறவினர்களின் பெயரையும் வாசித்துக் கொண்டே வந்தார். இவரை மட்டும் ‘உயர்திரு’ என்று குறிப்பிட்டும், மற்றொருவரைத் ‘தெய்வத்திரு’ என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக அவர் வருத்தப்பட்டு புகார் தெரிவிக்க, அவரிடம் இந்தத் ‘தெய்வத்திரு’விற்கான விளக்கத்தை சொன்ன பிறகு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இந்தத் ‘தெய்வ மச்சான்’ படமும் யதார்த்தமான ஜாலியான அனைத்து தரப்பு ரசிகர்களும் சிரித்து மகிழக்கூடிய ஜனரஞ்சகமான படமாக உருவாகி இருக்கிறது.
இப்படத்தின் நாயகனான விமல் படப்பிடிப்புத் தளத்தில் மட்டுமல்லாமல் ஓய்வு நேரங்களிலும் எளிமையாகப் பழகக்கூடியவர். அவர் ஒரு முறை என்னிடம், ’20 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் ஒரு போக்குவரத்து நெரிசல் மிக்க நேரத்தில் காருக்குள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தது பார்த்தேன்’ என விவரித்தார். மற்றொரு முறை என்னுடைய பிறந்தநாளன்று திடீரென்று வருகை தந்து மாலை அணிவித்து, பரிவட்டம் சூட்டி, புகைப்படம் எடுத்து ஆசி கேட்டார். அந்த அளவுக்கு எளிமையான மனிதர் விமல்.
அவர் மட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளரும் இயல்பாக பழகக் கூடியவர். ஒட்டுமொத்த படக்குழுவும் படப்பிடிப்புத் தளத்தில் மறக்க இயலாத அனுபவத்தை வழங்கினார்கள்” என்றார்.