Shadow

டெவில் விமர்சனம்

ஆண் பெண் இருபாலருக்குமான உறவுநிலைச் சிக்கலை சிக்கலே இல்லாமல், சிரத்தையும் இல்லாமல், த்ரில்லர், தத்துவார்த்தம், ஆன்மீகம் என பல தளங்களின் வழியே பேச முயன்றிருக்கும் திரைப்படம் தான் டெவில்.

டெவில் என்கின்ற தலைப்பிற்கான நேரடியான விளக்கங்களோ, பூடகமான விளக்கங்களோ கதை மற்றும்  திரைக்கதையில் இல்லை.  நாம் கதையாடலை மையமாகக் கொண்டு, மானசீகமாக எல்லோர் மனதிற்குள்ளும் ஒளிந்திருக்கும் சாத்தான் என்று சொல்ல முற்பட்டால்,  மணம் தாண்டிய உறவுகளையும் அந்த உணர்வு நிலைகளையும் நாம் சாத்தானாக உருவகப்படுத்திகிறோம் என்கின்ற தவறான பொருள் கொள்ளல் தோன்றும். எனவே அதைத் தவிர்த்து  நாயகன் விதார்த்தின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, இந்த டெவில் என்பதன் அர்த்தத்தை ஆணின் மனதிற்குள் ஒளிந்திருக்கும் கயமை என்று பொருள் கொள்ளலாம்.

தான் தவறிழைக்கும் போது அதை மன்னிக்கக் கூடிய குற்றமாகக் கருதி , எதிர்பாலாகிய மனைவியிடமோ அல்லது காதலியிடமோ மன்னிப்பு கோரி காலில் விழவும் தயங்காத ஒரு ஆண், அதே தவறை தனக்கு சொந்தமானவள் என்று கருதிக் கொண்டிருக்கும் ஒரு பெண் இழைத்துவிட்டால் என்று நம்புவதற்கான சூழல் அமைந்தவுடனேயே, அதை ஒரு கொலைக் குற்றமாகக் கருதி, அவளைக் கொலை செய்து தண்டனையளிக்க விரும்பும் ஆணின் கயமையைத் தான் இப்படம் டெவிலாக முன்னிருத்துகிறது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், கன்னியாகுமரி முனை துவங்கி உலகின் கடைக்கோடி மூலையில் இருக்கும் ஆணிற்கும் இந்த சிந்தனை தான் இருக்கிறது என்பது உலகறிந்த விஷயம். அதை மீறி படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், சில குறியீட்டுக் குழப்பங்களும்,  பொருள் விளங்கா தத்துவங்களும், தெளிவற்ற திரைக்கதையும் தான் என்று கூற வேண்டும். ஏனென்றால் அந்த ஒற்றை விஷயம் தவிர்த்து பேசுவதற்கோ, விவாதிப்பதற்கோ, சிலாகிப்பதற்கோ படத்தில் எதுவுமே இல்லை என்பது தான் உண்மை.

விதார்த்தும், பூர்ணாவும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  ஒரு பெண் மீதான மோக மயக்கத்தில் மிதக்கும் ஒரு ஆண் எப்படி இருப்பானோ, அதை அச்சு அசலாக தன் நடை பேச்சு பாவனைகளில் வெளிப்படுத்தி நடித்திருக்கிறார் விதார்த். அவரைப் போலவே நாயகி பூர்ணாவும் தன் மனத் தடுமாற்றத்தையும், தவிப்பையும், பயத்தையும், குழப்பத்தையும் கச்சிதமாக காட்சிகளில் கடத்தியிருக்கிறார்.

புதிதாகத் தோன்றிய உறவு எல்லை மீறிச் செல்வதை உணர்ந்து விலகும் இடத்திலும் , மீண்டும் மனத்தடுமாற்றத்தால் அந்த உறவைத் தேடிச் சென்று வம்பில் சிக்கிக் கொள்ளும் இடங்களிலும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிகுன் நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையிலான கதாபாத்திரத்தை அச்சரப்பிசகில்லாமல் அற்புதமாக செய்திருக்கிறார். தனிமையும் தாய் மீது கொண்ட வெறுப்பும், இன்னொரு பெண் காட்டும் அன்பை நோக்கி அவரைத் தள்ளுவதாகக் காட்டப்பட்டாலும் கூட, அதை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கான காட்சிகள் திரைக்கதையில் இல்லை.  இதனால் அக்கதாபாத்திரத்தின் நியாய தர்மங்கள் நம் மனதிற்குள் சிறிதளவேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாமல் தத்தளிக்கின்றன.

ஒட்டுமொத்தமாக படத்தில் மூன்று ஆண் கதாபாத்திரங்கள். மூன்று பேரும் துரோகங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தங்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ  அதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் கதாபாத்திரங்கள். இரண்டு பெண் கதாபாத்திரங்கள். அதில் ஒருத்தி கிட்டத்தட்ட ஆணின் குணாதிசயத்திற்கு அப்படியே ஒத்துப் போகும் கதாபாத்திரம். இன்னொரு பெண் முழு மனதுடன் இந்த சமூகம் தவறென்று நினைப்பதை செயல்படுத்தவும் முடியாமல், விட்டு விலகவும் முடியாமல் மாட்டிக் கொண்டு தவிக்கும் ஒரு சராசரி பெண்.

இப்படியான கதாபாத்திரங்களைக் கொண்டு இயக்குநர் ஆதித்யா பேசி இருக்கும் கருத்தாக்கங்கள் வலு குன்றியும், தெளிவின்மையுடனும், சுவாரஸ்ய சுருதி குறைந்தும், காட்சியளிக்கின்றன. மேலும் புதுமையான விசயங்களைப் பேசாமல் பழமையான விசயங்களையே காதல், காமம், தத்துவார்த்தம், மாய எதார்த்தம், ஆன்மிகம் என பல்வேறு தளங்களில் குழப்பவாதத்துடன் பேசி இருக்கின்றது.

இந்தக் கதைக்களத்திற்கு கிறிஸ்துவ மதரீதியிலான பின்புலமும் புத்த சிலைகளும் எந்த அளவிற்கு தேவைப்பட்டிருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.  மாய யதார்த்த பின்னணியில் கருப்பு அங்கி அணிந்து கொண்டு கையில் பைபிளுடன் திரும்ப திரும்ப மிஷ்கின் கடக்கும் காட்சிகளை இன்னும் எத்தனை முறை காட்டினாலும் அது எதற்கு என்று புரியாது போலும்… மேலும் கடைசி க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ட்விஸ்ட் எதற்கு, அதற்கும் கதை சொல்ல வரும் கருத்துக்கும் என்ன தொடர்பு என்பது விளங்கவேயில்லை.

முதன்முறையாக இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் மிஷ்கின். பாடல்களும் பின்னணி இசையும் மிஷ்கினுக்கு இசை மீது இருக்கும் நாட்டத்தையும், ஈடுபாட்டையும், இசைப் புலமையையும் புலப்படுத்துகிறது.  விடியல் தேடும் மனிதருக்குப் பாடல் நம் மனதில் கருவண்டாய் ரீங்காரம் இடுகிறது. படம் இரண்டாம் பாதியில் த்ரில்லர் மோடுக்கு மாறும் இடங்களில் பின்னணி இசையின் தாளகதி  அதீதமாக பயமுறுத்துகிறது. கார்த்திக் முத்துக்குமாரின் காட்சிப் பதிவு அழகியல் ஒருங்கிணைப்போடு சங்கமித்து கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது.

சவரக்கத்தி படத்தை இயக்கிய ஆதித்யா இப்படத்தை இயக்கி இருக்கிறார். எல்லோருக்கும் பரிச்சயமான கதையை எந்தவித சுவாரஸ்ய மெனக்கெடலும் இன்றி சாதாரணமாக எழுதி, இயக்கி இருக்கிறார்.  மிக மெதுவாக கதைக்குள் செல்வது, வரும் காட்சிகளில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆடியன்ஸ் முன் கூட்டியே தீர்மானிப்பது, பூர்ணா தவிர்த்து பிற கதாபாத்திரங்கள் மிகவும் தட்டையாக இருந்து திரைக்கதையை பலவீனப்படுத்துகின்றன.  சொல்ல வந்த விசயத்தில் தெளிவின்மையும் ஒரு பிரச்சனையாக வெடித்திருக்கிறது.

மொத்தத்தில் “டெவில்”  திரைப்படத்தில் பெரிதாக சிலாகிப்பதற்கு ஒன்றுமே இல்லை எனலாம்.