கடவுள் மீது மக்களுக்கு இருக்கும் மூடநம்பிக்கைகளை வைத்து கல்லா கட்டிக் கொண்டிருக்கும் நாயகன், அவன் கல்லாவில் தனக்கும் பங்கு வேண்டும் என்று போட்டிக்கு வரும் அந்த ஊர் தாசில்தார், இவர்கள் இருவருக்கும் இடையில் பகை வளர, இறுதியில் இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட கோயிலின் நிலை என்ன ஆனது, மக்களின் நம்பிக்கை என்ன ஆனது என்பதே “வடக்குப்பட்டி ராமசாமியின் கதை.
கதை 1960 காலகட்டங்களில் நடக்கிறது. ஊரின் கண்ணாத்தா என்னும் காவல் தெய்வத்திற்கு ஒரு பின்கதை வைத்து, அதை மக்கள் தெய்வமாக நம்புவதற்கு சில நிகழ்வுகளை நேரிடை சாட்சியாக நிகழ்த்திக் காட்டி, அதே நிகழ்வுகளின் மூலம் நாயகனான வடக்குப்பட்டி ராமசாமி, அந்த நம்பிக்கைகளைக் கொண்டு பணம் சம்பாதிக்க முடிவெடுத்து எதிர்திசையில் நகரும் கதாபாத்திர முரண்களை ஆரம்பத்திலேயே அருமையாக கட்டமைக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.
மக்களின் மூடநம்பிக்கைகளையும், நேர்த்திக்கடன் செலுத்தும் முறைகளையும் கிண்டல் செய்து, ஆரம்பத்தில் அமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் சிரிப்பை வரவழைக்கின்றன. அது போல் தண்டோரா அடிக்கும் பெரியவர், அவருக்கு கவுண்டர் கொடுக்கும் மற்றொரு பெரியவர், ஊருக்குள் இரண்டு அணிகளாக முறுக்கிக் கொண்டு முட்டாள்தனமாக திரியும் ரவிமரியா அணியினர் மற்றும் ஜான் விஜய் குழுவினர், கண் பார்வை தெரியாத பெரியவராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், நாயகியின் அப்பாவாக வரும் கதாபாத்திரம், நாயகி மேகா ஆகாஷின் கதாபாத்திரம், சரக்கடிப்பதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு திரியும் பூசாரி சேசு, நாயகனுடன் கூடவே திரியும் மாறன், கண்டிப்பான இராணுவ அதிகாரியாக அறிமுகம் ஆகும் நிழல்கள் ரவி, க்ளைமாக்ஸ் காட்சி ஆப்ரேஷனுக்காக களமிறக்கப்படும் மொட்டை ராஜேந்திரன் அண்ட் கோ, கூல் சுரேஷ், கூல் சுரேஷின் பெற்றோர், குண்டு பிரசாந்த், இவர்களோடு நாயகன் சந்தானம் மற்றும் வில்லன் தமிழ் என அத்தனை கேரக்டர்களும் அருமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
அவை காட்சிகளை நிரப்பும் வெற்றுக் கதாபாத்திரங்களாக மட்டும் இல்லாமல் கதையோடு சேர்ந்து பயணிக்கும் கதாபாத்திரங்களாகவும், தங்கள் பங்கிற்கு ஒவ்வொரு இடத்திலும் கதையை வழிநடத்தும் கதாபாத்திரங்களாகவும் திரைக்கதையில் பங்கு வகிப்பது சிறப்பு.
1960ம் காலகட்டங்களில் சென்னையில் பரவிய கண் நோயான “மெட்ராஸ் ஐ” திரைக்கதையில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. அதை புத்திசாலித்தனமாக திரைக்கதையில் பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கும் இயக்குநர் கார்த்திக் யோகிக்கு வாழ்த்துக்கள்.
நாயகன் சந்தானத்திற்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம். அநாயாசமாக அவர் அடிக்கும் கவுண்டர்கள் மற்றும் ஒன்லைனர்கள் எல்லாம் இப்படத்தில் சகட்டு மேனிக்கு வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அவருக்கு சேசுவும், மாறனும் பக்க பலமாக இருக்கிறார்கள். கோவிலில் மக்களை ஏமாற்றத் துவங்கும் இடத்தில் இருந்து படம் நெடுக இந்த மூவர் கூட்டணி அடிக்கும் லூட்டிகள் சர்வ நிச்சயமாக பார்வையாளர்களின் வயிற்றை பதம் பார்க்கின்றது. அதிலும் குறிப்பாக சேசுவைக் கொண்டு மிலிட்டரி ஆபிஸர் நிழல்கள் ரவிக்கு கொடுக்கப்படும் நன்றி தெரிவிப்பெல்லாம் ஏ 1 ரகம். கடைசி காட்சியில் சேசு ஆடும் பரதநாட்டியம் பார்த்து உண்மையாகவே ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
இவர்கள் ஒரு புறம் காமெடி என்கவுண்டர்களை டஜன் டஜனாக இறக்கி விட்டுக் கொண்டு இருக்க, எதிர்புறம் ஈகோ மோதலுடன் சுற்றிக் கொண்டு திரியும் ரவி மரியாவும் ஜான் விஜயும் கலர் பூசப்பட்ட கருப்புக் கண்ணாடியை அணிந்த இடத்தில் இருந்து, காமெடியில் நம்மை கலங்கடிக்கிறார்கள். ஸ்ட்ரிக் மிலிட்டரி ஆபிஸராக காட்டப்படும் நிழல்கள் ரவி கதாபாத்திரம் பிரத்யேகமான கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் அவர் அடிக்கும் லூட்டிகளும், அதில் மாட்டிக் கொண்டு தவிக்கும் மொட்டை ராஜேந்திரன் குழுவினரின் நடிப்பும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.
கூல் சுரேஷ் மட்டுமின்றி அவரின் பெற்றோராக நடித்திருப்பவர்களும் தங்கள் பங்கிற்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். நாயகன் சந்தானம் இத்தனை துணை கதாபாத்திரங்களுமான ஸ்பேஸ் கொடுத்து நடித்திருப்பதனால், திரைப்படம் சிறப்பான காட்சியனுபவத்தைக் கொடுக்கின்றது.
மொட்டை ராஜேந்திரன் குழுவினர் கண்ணி வெடி மீது கால் பதிக்காமல் நடக்கும் எபிசோடுகள் எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும் கியாரண்டி உடைய காமெடி டிராக் ஆக அமைந்திருக்கிறது.
ஷான் ரோல்டன் இசையை விட பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்து காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. தீபக்-கின் ஒளிப்பதிவில் மலையின் பின்புற அழகோடு நீர் சூழ்ந்த வடக்குப்பட்டி நம்மை இன்முகத்துடன் வரவேற்க்கிறது. இரத்தக் காட்டேரியை கண்ணாத்தா அழிக்கும் காட்சியில் தீபக்கின் ஒளிவண்ணம் கண்ணை நிறைக்கிறது.
இதற்கு முன் டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி அதே கூட்டணியோடு இப்படத்தை இயக்கி இருக்கிறார். முதல்பாதியில் மக்களின் மூடநம்பிக்கைகளை கேலி செய்தவர், இரண்டாம் பாதியில் ஏதோ காரணம் கருதி இறைபக்தியில் இணைந்து விடுகிறார். இரத்தக் காட்டேரிக்கு கடைசி காட்சியில் கொடுக்கப்பட்ட விளக்கம், ராமசாமி என்னும் பெயரைக் கொண்டு ஆடியிருக்கும் பெயர் விளையாட்டு, காங்கேயம், பசுபதி காமெடிகள், கண் நோயை கனகச்சிதமான முறையில் திரைக்கதையில் பய்ன்படுத்திய யுக்தி என கதை, திரைக்கதை தாண்டி ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. இத்தனை கதாபாத்திரங்களை வடிவமைத்து அத்தனை கதாபாத்திரத்தையும் கதையின் நகர்வுக்கு பயன்படுத்தி இருப்பதும், கதாநாயகியை காட்சிக்குள் வரும் அழகான பெண் என்கின்ற மட்டத்தோடு நிறுத்தாமல், கதையின் மையத்தோடு அவரை இணைத்ததும் ரசனை.
மூடநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்குமான வித்தியாசத்தை நூலிலையில் தவறவிடும் மக்கள் அதை புரிந்து கொள்வதற்கான காட்சி விவரணைகள் கதையில் இல்லை. ரத்தக்காட்டேரி, கண்ணாத்தா கடவுள், காமெடி என்று குழந்தைகளையும், மூடநம்பிக்கை குறித்தான கேள்விகள், காமெடி சரவெடிகள், போரடிக்காத திரைக்கதை என வயதுவந்த பார்வையாளர்களுக்கான எல்லா வஸ்துகளையும் உள்ளடக்கி, ஒரு வெற்றி திரைப்படத்தினை கொடுத்திருக்கும் இயக்குநருக்கு வாழ்த்துக்கள்.
மொத்தத்தில் வடக்குப்பட்டி இராமசாமி என்கின்ற காமெடி காட்சி எவ்வளவு பிரசித்தம் பெற்றதோ, அதே அளவிற்கு பிரசித்தம் பெற்ற காமெடிப் படமாக என்றும் நினைவில் நிற்கும் இந்த “வடக்குப்பட்டி ராமசாமி”
வடக்குப்பட்டி ராமசாமி – எ ஃபேமிலி எண்டர்டெயினெர்.
– இன்பராஜா ராஜலிங்கம்