Shadow

பிளட்ஷாட் விமர்சனம்

bloodshot-review

பிளட்ஷாட் என்பது வேலியன்ட் காமிக்ஸ் உருவாக்கிய ஒரு சூப்பர் ஹீரோவின் பெயர். ‘பிளட்ஷாட்’ எனும் பிராஜெக்ட்டை உருவாக்கும் RST நிறுவனம், இறந்துவிடும் ஒரு இராணுவ அதிகாரியான ரே கேரிசனுக்குச் செயற்கை உயிரூட்டி, உடலில் நேனைட்ஸ் (Nanites) –ஐச் செலுத்தி விடுகின்றனர். நேனைட்ஸ் அதி வேகத்தில் செயற்பட்டு, பழுதுபடும் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவல்லது.

ஆனால், ரைஸிங் ஸ்பிரிட் டெக்னாலஜியின் (RST) சி.ஈ.ஓ.வான டாக்டர் எமில் ஹார்டிங், பிளட்ஷாட்டை ஒரு ஆயுதமாக மட்டுமே உருவாக்குகிறார். மனதில் குமுறும் பழிவாங்கும் உணர்ச்சிதான், ஒரு மனிதனை உச்சபட்ச ஆயுதமாக மாற்றும் என்பதால், ரே-வின் மூளையில் ஒரு கதையை விஷுவலாகப் பதிக்கிறார். அதை உண்மையென நம்பும் பிளட்ஷாட், பழிவாங்கும் உணர்ச்சியில் கொதித்து, அவர் மூளையில் பதியப்பட்டிருக்கும் எதிராளியைத் தேடிக் கொல்கிறார். தான் உபயோகிக்கப்படுகிறோம் என ஒரு கட்டத்தில் பிளட்ஷாட்டிற்குத் தெரிய வருகிறது. RST-இன் கட்டுப்பாட்டில் இருக்கும் பிளட்ஷாட் எப்படி விடுபடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தின் விஷுவல்களில் ஒரு இறுக்கமும், இருண்மைத்தன்மையும் நிலவுகிறது. தனது கடந்த காலத்தை அறியாத நாயகனின் மனநிலையாக அதைக் கொள்ளலாம். இப்படிப் பிரதான கதாபாத்திரம் தெளிவற்று மனதில் பதியாமல் போக, ஜாலியாக ஹேக்கிங் செய்யும் ஹேக்கர் எரிக் மனதில் பதிகிறார். பிளட்ஷாட்டின் மனதில், தனக்குப் பிடித்த ஹாலிவுட் படங்களின் கதாபாத்திரத்தின் உடல்மொழியை வில்லனாகப் பதிக்கும் சேட்டைக்கார இளைஞர் எரிக். அந்தப் பாத்திரத்தில், தமிழரான சித்தார்த் தனஞ்செய் கலக்கியுள்ளார். இவர் 2017 இல் வெளிவந்த “பட்டி கேக்ஸ் (Patti Cake$)” எனும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துப் பரவலான கவனத்தைப் பெற்றவர் (அவருக்கு அந்தப் படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பே சுவாரசியமானது).

Siddharth-Dhananjay-at-Bloodshot

சித்தார்த் தனஞ்செய் போலவே, டெக்கியாக நடித்திருக்கும் வில்ஃப்ரெட் விகன்ஸும் ரசிக்க வைக்கிறார். புஜ பல பராக்கிராமசாலிகளாக மட்டுமே திரையில் கோலேச்சி வந்த சூப்பர் ஹீரோக்கள், தற்போது தொழில்நுட்ப வல்லுநராகவும் அயர்ன் மேன் போல் கோலேச்சத் தொடங்கிவிட்டனர். இந்தப் படத்தினைப் பொறுத்தவரை, பிளட்ஷாட் வெறும் கொலைக்கருவியாக மட்டுமே சித்தரிக்கப்பட்டிருப்பதால், டெக்கிகளாய் நடித்த சித்தார்த் தனஞ்செயும், லமோர்ன் மோரிஸும் மனதில் பதியுமளவு வின் டீசல் பதியவில்லை. அவருக்கான எமோஷ்னல் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

பிளட்ஷாட் தொடர் படங்களுக்கான அச்சாரத்தை இட்டுள்ளார் இயக்குநர் டேவிட் S.F.வில்சன். வின் டீசல் கச்சிதமாய் அந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார். அடுத்தடுத்த பாகங்களில், உலகைக் காக்கும் சூப்பர் ஹீரோக்களில் ஒருவராய் பிளட்ஷாட்டும் ரசிக்கத்தக்க கிராஃபிக்ஸின் உதவியால் நம் மனதில் பதிய வாய்ப்புகளுண்டு. ஏனெனில்..

You don’t need a past to have a future.