
எழிலும் கவினும் ஓருரு இரட்டையர்கள் (Identical twins). அவர்களில் ஒருவர் கொலையாளி என்பதற்கான புகைப்படத் துப்பு காவல்துறையினர்க்குக் கிடைக்கிறது. அவ்விரட்டையரில் கொலையாளி யாரென்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க படாதபாடுபடுகின்றனர். கொன்றது யார், ஏன் கொன்றார், அவர் அழிக்காமல் விட்ட தடம் எது என்பதன் தான் படத்தின் கதை.
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யத் தொடங்கும் முதல் ஃப்ரேமிலேயே நம்மைத் திரைக்குள் இழுத்துவிடுகிறார் மகிழ் திருமேனி. சிகரெட் பிடிக்கும் சேச்சி; பெண்களின் மார்புக்கச்சைக்கும், கொல்கத்தா ஹெளரா பாலத்துக்கும் ஒரே தொழில்நுட்பம் தான் பயன்படுத்தப்படுகிறது எனும் நாயகனின் இன்ஜினியரிங் மேஜிக் வசனம் எனப் படத்தின் முதல் 35 நிமிடங்களுக்குக் கதைக்குள் போகாமல் காட்சிகளாலும் பாடல்களாலும் மட்டுமே ரசிக்க வைக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்தின் ரசனையான எடிட்டிங்கே அதற்குக் காரணம். ஒரு கொலை நடந்து, இரட்டையர்கள் காவல்துறையில் சிக்கிய பின்பே, பார்வையாளர்கள் கதைக்குள் இழுக்கப்படுகின்றனர்.
படத்தின் அழகானதொரு அம்சம் எனக் காவல்நிலையத்தில் நடக்கும் அற்புதமான சண்டைக்காட்சியைச் சொல்லலாம். நேருக்கு நேர் சந்திக்கும் இரட்டையர் தங்களுக்குள் மோதிக் கொள்கின்றனர். நேர்த்தியானதொரு சண்டை வடிவமைப்பினை வழங்கியுள்ளார்கள் அன்பறிவ். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் எனும் பெயர், இரட்டையரான அன்பையும் அறிவையும் குறிக்கும் ஒற்றைப்பெயர். மற்றொரு ஸ்டன்ட் மாஸ்டரான ஸ்டன்ட் சில்வா படத்தில் பணிபுரிந்திருந்தும், இரட்டையருக்கிடையேயான சண்டையை அன்பறிவிடம் கொடுத்து, ஓர் அழகான நகைமுரணை இயக்குநர் மகிழ் திருமேனி உருவாக்கி ஆச்சரியப்பட வைக்கிறார். சண்டைக்காட்சியை யாரைக் கொண்டு வேண்டுமானாலும் இயக்கலாம், அதற்கும் ஓர் அர்த்தத்தைத் தரவேண்டுமென்ற முனைப்பு ஒரு நல்ல படைப்பாளிக்கே உரிய உள்ளார்ந்த கிடக்கை.
யோகிபாபு படத்தில் இருந்தும் நகைச்சுவைக்கான ஸ்கோப் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.
“யாருக்காவது சாவியில்லாமல் பூட்டைத் திறக்கத் தெரியுமா?” என மலர் கேட்க, அவரது சக காவல்துறை ஊழியர்கள் சொல்லும் பதிலில் திரையரங்கம் சிரிப்பொலியில் மூழ்குகிறது. தனது முதற்படமான முன்தினம் பார்த்தேனே முதலே, மகிழ் திருமேனி ஆச்சரியப்படுத்தத் தவறுவதேயில்லை. படத்தில் மூன்று பிரதான பெண் கதாபாத்திரங்கள். மூவருக்குமே பிரத்தியேக குணவார்ப்பினை அளித்து மனதில் பதியுமாறு செய்துள்ளார். எழிலின் காதலி தீபிகாவாக தான்யா ஹோப் நடித்திருந்தாலும், காவல்துறை அதிகாரி மலராக வரும் வித்யா பிரதீப் அதிக காட்சிகளில் தோன்றி, தன் நடிப்பால் நாயகி அந்தஸ்த்தைப் பெறுகிறார். கொஞ்சம் காட்சிகளிலே வந்தாலும், செல்ஃபோன் கடையில் பணிபுரியும் ஆனந்தியாக அறிமுகமாகியிருக்கும் ஸ்மிருதி வெங்கட்டும் நிறைவாக நடித்துள்ளார். மகிழ் திருமேனி அறிமுகம் செய்துள்ள இளம் இசையமைப்பாளரான அருண் ராஜ் தனக்கான வாய்ப்பைப் பயன்படுத்திப் படத்தின் விறுவிறுப்புக்கு உதவியுள்ளார்.
அருண் விஜய் நடித்த தடையறத் தாக்க (2012) படம் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸாக அனைவரையும் அதிசயிக்கவைத்தது. தனக்கு அழுத்தமானதொரு அடையாளத்தைக் கோலிவுட்டில் உருவாக்கிக் கொண்டதோடு அல்லாமல், அருண் விஜய்க்கும் ஏற்படுத்திக் கொடுத்தார் மகிழ். மீண்டும் அவ்விருவரும் இணைகிறார்கள் எனும் பொழுது இயல்பாய் எழும் எதிர்பார்ப்பைக் கச்சிதமாகப் பூர்த்தி செய்து, சினிமா காதலர்கள் மனதில் மீண்டும் தடம் பதித்துள்ளார் மகிழ் திருமேனி.