Shadow

“தீனா குழந்தை மாதிரி” – அமீர் | மாயவலை

அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கும், இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும், ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இயக்குநர் அமீர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘மாயவலை’ ஆகும். சத்யா, சஞ்சிதா ஷெட்டி, சரண், தீனா, வின்சென்ட் அசோகன் மற்றும் ‘தயா’ செந்தில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜேந்திரன் (வாபோ), ஏ.ஆர். ஜாஃபர் சாதிக் (ஜே எஸ் எம் பிக்சர்ஸ்) மற்றும் சர்தார் ஆவர். யுவன் சங்கர் ராஜா இசையில், ராம்ஜி ஒளிப்பதிவில், எஸ்.பி. அஹ‌மதின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள ‘மாயவலை’ திரைப்படத்திற்கு சினேகன் பாடல்களை எழுத, வீரமணி கணேசன் கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார். சண்டை பயிற்சிக்கு பிரதீப் தினேஷும், வடிவமைப்புக்கு கோபி பிரசன்னாவும் பொறுப்பேற்றுள்ளனர். இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நடிகர் தீனா, “நான் நிறையப் படங்களில் நடித்திருக்கிறேன். ஒரு சீன், இரண்டு சீன் தான் நடிப்பேன். வெற்றிமாறன் அண்ணன் தான் அதை மாற்றினார். அவருடன் ‘வட சென்னை’யில் நிறைய கற்றுக் கொண்டேன். நான் ஸ்டன்ட் மேன் கிடையாது, துணை நடிகர் தான், எனக்கு நடிப்பு கற்றுக் கொள்ள ஆசை. கூத்துப்பட்டறை போன்ற இடங்களில் கற்றுக் கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால் வெற்றிமாறன் சார் படத்தில் நடித்ததே பெரிய அனுபவமாக இருந்தது. அதே போல் தான் அமீர் அண்ணன். இருவரும் எனக்கு நிறைய சொல்லித் தந்தார்கள். உண்மையாகவே அமீர் எனக்கு அண்ணன் தான். என்னைக் குடும்ப உறுப்பினர் போல‌ பார்த்துக் கொள்வார். படம் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.

அமீர், “ஒரு சிலருக்கு முகம் பார்க்க பயமாக இருக்கும், ஆனால், உண்மையில் அவர்கள் குழந்தையாக இருப்பார்கள், தீனா அப்படியானவர். எப்போதும், ‘அண்ணா, அண்ணா’ என்று அன்பைப் பொழிபவர். போலீஸாக அருமையாக‌ நடித்திருக்கிறார். ‘வட சென்னை’ படத்தில் தான் அவரைச் சந்தித்தேன், எனக்கு அவர் நடிப்பு பிடித்திருந்தது. இந்தப் படத்தில் எல்லா நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். உண்மையில் அட்டகாசமாகச் செய்துள்ளார்” என்றார்.

வெற்றிமாறன், “தீனா சிறந்த நடிகர், கேமராவிற்கு முன்னாலும் பின்னாலும் அவராகவே இருக்கிறார். அது அவரது பலம்” என்றார்.