Shadow

எனக்கு வாய்த்த அடிமைகள் விமர்சனம்

Enakku vaaitha adimaigal விமர்சனம்

ஒரு நண்பனுக்காக எந்தச் சிரமத்தையும் மேற்கொள்ளும் நண்பர்களைச் செல்லமாக ‘அடிமைகள்’ என்கிறார் இயக்குநர். அப்படி, ஐ.டி.யில் வேலை செய்யும் ஜெய்க்கு மூன்று அடிமைகள் உள்ளனர். அவர்கள், வங்கியில் கேஷியராக உள்ள கருணாகரன், ஷேர் ஆட்டோ ஓட்டும் காளி வெங்கட், கஸ்டமர் கேரில் வேலை செய்யும் நவீன் ஆகியோர் ஆவர்.

காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார் ஜெய். அவரைத் தேடித் தடுக்க முயற்சி செய்யும் அவரின் 3 அடிமைகளுமே அநாவசிய பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றனர். அடிமைகளை எப்படிப் பிரச்சனையில் இருந்து ஜெய் மீட்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

படத்தில் நாயகன் நாயகி பெயரளவிற்குத்தான். கருணாகரனும், காளி வெங்கட்டும்தான் படத்தின் உண்மையான நாயகர்கள். ஷேர் ஆட்டோ பின்னால் சென்று ரத்தம் சூடேறுபவர்களுக்கு, காளி வெங்கட்டின் அறிமுக காட்சி மிக நெருக்கமாக அமையும். காளி வெங்கட்டின் கதாபாத்திரத்தை அனுபவித்து எழுதியிருப்பார் போலும் இயக்குநர். சிறு
சத்தம் கேட்டாலும், விழித்துக் கொள்ளும் தன் மகனை நினைத்து அவர் புலம்புவது அருமை. கருணாகரனை அவர் கதறவிடும் காட்சிகள் அருமை.

கருணாகரன் வழக்கம் போல் தன் முழியைப் பெரிதாக உருட்டி ரசிக்க வைக்கிறார். நண்பனின் மரணத்திற்குத் தான் காரணமாகி விட்டோமோ எனப் பதறும் காட்சிகளையும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. காரணம், தற்கொலை செய்யப் போன இடத்தில் ஜெய், பிரேம்ஜி அமரனின் பாட்டுக்கு நடனமாடிக் கொண்டிருப்பார். குடித்து விட்டு அலம்பல் செய்யும் நண்பனுக்காக நண்பர்கள் படும் அவஸ்தை தான் படத்தைச் சுவாரசியமாக்குகிறது.

மற்ற இருவர் போலன்றி, மூன்றாம் அடிமையாக வரும் நவீன் பெரிதும் நகைச்சுவைக்கு உதவவில்லை எனினும் படத்தின் சீரியஸ் கணங்களுக்கு உதவுகிறார்.

படத்தின் முதல் பாதியைக் காளி வெங்கட் ரசிக்க வைக்கிறார் என்றால், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குவது ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். அரை நிர்வாணமாகத் தோன்றி அதகளப்படுத்தியுள்ளார். படத்தின் சந்தானம் கெளரவத் தோற்றத்தில் தோன்றி, ஆண்கள் காதலே உயர்ந்தது என படத்தின் கருவிற்குக் கொடி பிடிக்கிறார். படத்தில் இரண்டு இடத்தில், ‘ஆம்பளைன்னா யார் தெரியுமா?’ என இலக்கணம் வகுத்துள்ளார் இயக்குநர் மகேந்திரன் ராஜமணி.

‘லொள்ளு சபா’ குழுவினரைப் பயன்படுத்தி இருந்தாலும், பெரிதாக அவர்களது காட்சிகள் எடுப்படவில்லை. பிரதான கதாபாத்திரங்கள் தங்கள் வேலையைக் கச்சிதமாகச் செய்து விடுவதால், படம் காமெடியில் பிழைத்துக் கொள்கிறது. ”என் நண்பன் எவ்வளவு நல்லவன் தெரியுமா?” என உயர்த்தி பேச முயன்று ஜெய் சொதப்பும் இடத்தில் திரையரங்கம் சிரிப்பொலியில் அதிர்கிறது. ஆங்காங்கே வரும் இது போன்ற ஒன்லைனர்களில் ரசிகர்களைச் சிரிக்க வைத்துவிடுகிறார் இயக்குநர்.